என்னைப் பற்றி…
பக்கத்தை அச்செடு
வணக்கம் நண்பர்களே!
என்னைப் பற்றி என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மிகவும் விவரமாகத் தெரியும். நான் ஒரு திறந்த புத்தகம். அடிப்படையில் நான் ஒரு தமிழனாக இருந்தாலும் தமிழ் மட்டுமன்றி பிற மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி அம்மொழிகளை செம்மையாக கற்றுக்கொள்ள விழைபவன். ஆனால் இவ்வுலகில் இன்னும் எத்தனை மொழிகள் தோன்றினாலும், தமிழ் மொழிக்கு அது துளியும் ஈடாகாது. இந்த கூற்று மிகை போல தோன்றினாலும் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர்க்கு அது மிகையல்ல என்பது தெளிவாகத் தெரியும்.
தமிழ் மொழியின் சிறப்பே அதன் எழுத்து அமைப்புகளும் உச்சரிப்புகளும்தான். உலகில் உள்ள அணைத்து மொழிகளும், ஏன் தமிழ் மொழியின் எழுத்து முறையை சிறிது ஒட்டி இருக்கும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளும் கூட எழுத்து அமைப்பில் தமிழுடன் போட்டி போட முடியாது. மற்ற நாடுகளிலெல்லாம் இலை தழை அணிந்து மக்கள் வாழ்ந்த கற்காலத்தில் கூட இந்தியாவும், சீனாவும், குறிப்பாக தமிழ் நாடும் மிகச் சிறந்த கலாச்சாரத்தோடு இருந்திருக்கின்றது. இங்கே வசித்த மக்கள் ஒரு முறையான வாழ்க்கை நிலைகளை கொண்டிருந்திருக்கின்றார்கள். அக்காலத்திலேயே இயல், இசை, நாடகம் என முப்பரிமானங்களும் திகழ்ந்திருக்கின்றன. தமிழ் மொழியின் இலக்கணமாகக் கருதப்படும் தொல்காப்பியம் திருவள்ளுவர் (இன்றைக்கு 2040 வருடங்களுக்கு முந்திய காலத்தவர்) காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கின்றது. இதுவே தமிழரின் மொழியாற்றலுக்கும் கலாச்சாரத்திற்கும் ஒரு சான்று. இன்று வரையில் நவீன உலகம் இக்கலாச்சாரத்தையும் மொழியையும் மிகவும் பாதித்திருந்தாலும், கலாச்சாரங்களுக்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் மதித்து போற்றுபவர் இருக்கவே செய்கிறார்கள். அவ்வகைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
என்னைப் பற்றி சொல்வதென்றால் மகாகவி பாரதியின் ஒரு கவிதை போதும்:
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?
இக்கவிதையில் மகாகவி பாரதி தன்னை சாதாரண மானிடர்களைப் போல வாழாத ஒருவன் என்று மிக தைரியமாக கடவுளிடமே கூறுகின்றார். அவர் எனக்காகவே இக்கவிதையைக் கூறியதைப் போல, பாரதியின் இக்கவிதையை நான் படித்தறியாத காலத்திலேயே என் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் நான். அவ்வாறே தினமும் எதையேனும் செய்ய வேண்டும், இவ்வுலகிற்கு என்னாலான எதையேனும் வழங்க வேண்டும், இவ்வுலகில் நான் வாழ்ந்தேன் என்பதன் அர்த்தத்தை வழங்க வேண்டும் என்ற ஒரு தணியாத தாகத்தோடு திரிபவன்தான் நான்.
மற்றபடி என்னைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது வலைத்தளத்தை காணவும்.
இந்த வலைப்பதிப்புகளுக்கு வந்தது மட்டுமின்றி என்னைப் பற்றி இந்த விவரங்களையம் மிகவும் பொறுமையுடன் படித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!
மிக்க அன்புடன்,
ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
உங்களின் கருத்துக்களை வழங்கவும்