விமர்சனம்: நான் கடவுள்

March 3, 2009 திரைப்படம், விமர்சனங்கள்

நான் கடவுள் - அஹம் பிரம்மாஸ்மி

‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே நான் நானாக இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே பிச்சைக்காரர்களின் கடின வாழ்க்கையைப் பார்த்து மனம் நொந்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. என் பார்வையில் இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பிச்சைக்காரர்களின் நிதர்சன வாழ்வை இப்படி யாரும் படம் பிடித்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவிற்கு என்னுடைய மரியாதையான தலை வணங்கல்கள்…

கதை என்று பார்த்தால் அவ்வளவு பிரமாதம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். ஜோசியத்தை கண்மூடித்தனமாக நம்பும் இன்றைய பழமைவாதி மூட நம்பிக்கை பேர்வழிகளில் ஒருவரான ஒரு தந்தை ஜோசியர் கூறியதை நம்பி தன் குடும்பத்திற்கு ஆபத்து என்று கருதி தன்னுடைய தலை மகனை காசியில் கொண்டு சென்று 10 வயதில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றார். அதன் பிறகு அவருக்கு புத்தி வருவதற்கு 18 வருஷங்கள் ஆகிவிட, தன்னுடைய மகனைத் தேடி தன்னுடைய மகளுடன் காசி பயணிக்கும் அவர் தன்னுடைய மகன் ருத்ரன் (ஆர்யா) இத்தனை வருஷங்களில் காசியின் அகோர சாமியார்களில் (இதைப் பற்றி பின்னே) ஒருவராக மாறிவிட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார் (புண்ணிய பூமி காசியில் வேறு என்ன எதிர்பார்த்தார் தெரியவில்லை). அவருடைய குருவிடம் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து மகனை வீட்டுக்கு அழைத்துவருகின்றார். ஆனால் அனுப்பும்போதே குரு, “உனக்கு சொந்த பந்தங்கள் எதுவும் கிடையாது, சென்று முறித்துக்கொண்டு வா” என்று ஆசீர்வதித்து(?) அனுப்புகின்றார்.  வீட்டிற்கு வரும் மகனின் வித்தியாசமான தோற்றமும், நடையும், பேச்சுகளும் பார்த்து அதிர்ச்சியடையும் அம்மா அவனை வழிக்கு கொண்டு வர முயன்று தோற்றுவிட, வீட்டைவிட்டு வெளியேறும் மகன் சந்நியாசி பிச்சைக்காரர்கள் மற்றும் கஞ்சா குடிக்கும் சந்நியாசிகள்(?) புழங்கும் ஒரு ஆலயத்தில் போய் தங்கிவிடுகின்றார். இதற்கிடையில் பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பலொன்று தங்களுடைய அநியாயங்களை அன்றாடம் நிகழ்த்திவர அதை பொறுத்துக்கொண்டு தங்களுடைய சோகங்களை நகைச்சுவையால் மூடிக்கொண்டு வாழ்கின்றனர் பிச்சைக்காரர்கள். இதில் திடீரென்று ஒரு கண்தெரியாத பிச்சைக்கார பாடகி அம்சவள்ளி (பூஜா) அந்தப் கும்பலால் கடத்திக்கொண்டு இவர்களுடன் பிச்சையெடுக்க விட்டுவிடப்பட படத்தில் ஒரு திருப்பம். இதற்கிடையில் மகளின் மஞ்சள் நீராட்டுதலுக்காக மகனை மீட்டு வர ஆலயம் செல்லும் தாய் தன்னுடைய மகனிடம் திரும்பி வருமாறு மன்றாட அவளுக்கு மகன் சித்தரின் பாடலில் ஒன்றைப் பாடிக்காட்டி, நாடி மொத்தமும் அடங்கும்படியான ஒரு கேள்வியையும் கேட்க சுயம் சுட்டுவிட்ட தாய் மகனை தலைமுழுகுகின்றாள் (இதைப் பற்றி பின்னே). இதற்குள் மலைநாடான கேரளாவிலிருந்து இதேபோல் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் ஒரு ஆள் பண்டிகை தருணங்களின் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் சீசனுக்காக வேண்டி அதிக ஆள் வேண்டும் என்று இந்தக் கும்பலிடம் கேட்க, பணத்தை இந்த அளவிற்கு பார்த்திராத இந்தக் கும்பலும் தங்களிடம் தாயாய் பிள்ளையாய் பழகிக்கொண்டிருந்த பிச்சைக்காரர்களை பிரித்து அனுப்பிவிடுகின்றது. இதுவரை அமைதியாக சென்றுகொண்டிருக்கும் படத்தில் திடீரென்று அதே மலையாளத்தான் ஒரு அருவருப்பான முகம் கொண்ட பிச்சைக்காரனைக் கொண்டு வந்து அவனுக்கு கண்தெரியாத ஒரு பிச்சைக்காரியை மணமுடித்து வைத்தால் 10 இலட்சம் தருவதாக கூற, பணத்தாசையில் மூழ்கிய கும்பல் தங்களிடம் புதிதாய் சேர்ந்திருந்த அம்சவள்ளியைக் காட்டிவிடுகின்றனர். மலையாளத்தானிடமிருந்து தப்பிக்க ருத்ரனை அணுகும் அம்சவள்ளியால் தூக்கம் கலைந்த ருத்ரன் கெட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களை அடித்துப் புரட்டி எடுத்து அந்த மலையாளத்தானையும் கொன்றுவிடுகின்றார். ருத்ரன்தான் குற்றவாளி என்று தெரிந்தும் அவரைக் கைது செய்தும் அவருடன் போட்டி போட முடியாத போலீசார் அவர் நிரபராதி என்று விடுவித்துவிட இதற்குள் அம்சவள்ளியை தேடியலையும் கும்பலும் அவளைப் பிடித்து அடித்து துவம்சம் செய்துவிட்டு சாமியாரின் கதையையும் முடிக்க அவருடன் போரிட, ருத்ரன் எப்படி அவனையும் கொன்று அம்சவள்ளிக்கும் மோட்சம் கொடுத்தார் என்பது மீதிக்கதை.

கிட்டத்தட்ட மூன்று வருஷங்களாக கஷ்டப்பட்டு பாலா இந்தப் படத்தை எடுத்திருப்பதை படம் பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கின்றார். படப்பிடிப்பின் நேர்த்தியை பெரிய திரையில்தான் காண முடியும் சின்னத்திரையில் காண்பவர்கள் கண்டிப்பாக படத்தை இரசிக்க முடியாது. பிச்சைக்காரர்களையும் அகோர சாமியார்களையும் நடிக்க வைத்திருப்பதில் பாலாவின் கடின உழைப்பை பார்க்க முடிகின்றது. ஆனால் பாலாவிற்கே ஆன பிரத்தியோக ஸ்டைலை எப்போதுதான் மனுஷர் மாற்றிக்கொள்ளப் போகின்றார் என்ற ஒரு அயர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. கதையிலும் அவ்வளவாக அவரின் கவனம் செல்லவில்லை. ஆனால் படப்பிடிப்பிலும் இசையிலும் கவனத்தைக் கொண்டு சென்றதில் தமிழ் சினிமாவின் இன்னொரு மைல்கல்லை அவரால் உருவாக்க முடிந்திருக்கின்றது. ஆமாம், எவ்வளவோ குறைகள் இருந்தாலும் இந்தப் படம் தமிழுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே இன்னொரு மைல்கல்.

மூன்று வருஷங்களாக நடித்தது மட்டுமின்று மூன்று கதாநாயகிகள் மாறி மாறி நடித்ததில் ஆர்யாவின் கடின உழைப்பு வெட்ட வெளிச்சமாகின்றது. ருத்ரன் பாத்திரத்திற்கு பொருத்தமாக என்னால் விக்ரமையோ சூர்யாவையோ நினைத்தே பார்க்க முடியவில்லை (அதனால்தான் அவர்கள் இதில் நடிக்க விரும்ப வில்லையோ என்னவோ?). ஆர்யா தன்னுடைய பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார். ஹேண்சமான ஆர்யாவா இது என்று பலமுறை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். தலைகீழாக அவர் செய்யும் யோகாசனங்கள் அற்புதம். மனிதர் கண்டிப்பாக கடும் உழைப்பைக் கொட்டியிருக்கின்றார். ஆனால் இது வீணாகாது என்பது நிச்சயம். இந்தப் படத்தில் நடித்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி பூஜாவின் ஆழ்ந்த நடிப்பு. நடிப்பு என்றே சொல்ல முடியாத அளவிற்கு படத்தோடு ஒன்றிப்போய் நடித்திருக்கின்றார். பல இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கின்றார். கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய ஒப்பனையும் நடிப்பும் நான் எந்தப் படத்திலும் காணக்கிடைக்காதவை. அவருக்கு நல்ல எதிர்காலம் கண்டிப்பாக இருக்கின்றது.

இசையில் நான்தான் கடவுள் என்று இன்னும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார் இளையராஜா. இசை ஞானி பட்டத்திற்கு அச்சுப் பொருத்தம் அவர். தன்னுடைய ஈகோவை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தாரானால் இன்று எங்கோ சென்றிருப்பார் இளையராஜா. அவரிடம் திறமை இருந்தும் சில குணங்கள் இமய வளர்ச்சியை எவரெஸ்ட் அளவிற்கு குறைத்துவிட்டன. பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் அசத்தியிருக்கின்றார் இளையராஜா. இளையராஜாவும் யேசுதாஸும் சேர்ந்து ரொம்ப நாளுக்கு அப்புறம் செய்துள்ள ‘பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…’ பாடல் கண்களில் நீரை வரவழைத்துவிடுகின்றது. முழுவதும் சமஸ்கிருதத்திலேயே அமைந்துள்ள பாடலும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளையராஜாவின் மயக்கும் குரலில் அமைந்துள்ள ‘ஓரு காற்றில் அலையும் சிறகு…’ மயங்க வைத்திருக்கின்றது.

படத்தில் நடித்துள்ள பிச்சைக்கார சிறுவர் சிறுமியர் மற்றும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசத்தியிருக்கின்றார்கள். சோகத்தைப் பிழியும் காட்சிகளிலும் மெல்லிய நகைச்சுவையை கொடுத்து காட்சிகளின் உக்கிரத்தைக் குறைத்திருக்கின்றார் பாலா. இதைப் பற்றி பலர் வேறு விதமாக விமர்சனம் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை பாலாவை பாராட்ட வேண்டிய விஷயம் இது. வெறும் மெலோடிராமாடிக்காக இல்லாமல் செய்ய நகைச்சுவையை கையாண்டிருப்பது மற்ற இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

கதையும் வசனமும் ஜெயமோகன் என்றபோதே சூடாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் மனிதர் தன்னுடைய கோபங்களுக்கெல்லாம் இந்தப் படத்தை ஒரு வடிகாலாக்கியிருக்கின்றார் என்பதைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். சில சித்தர் பாடல்களை தவறாக கையாண்டிருப்பது மட்டுமின்றி தன்னுடைய தனிப்பட்ட ஆத்திரங்களுக்கும் பெருமைகளுக்கும் படத்தை அவர் பலியிட்டிருக்க வேண்டாம். ஒரு சில இடங்களில் வசனம்

காசியின் உண்மையான உக்கிரங்களை காட்டாமல் மறைத்துவிட்டதற்காக பாலாவை பாராட்ட வேண்டும். இல்லையென்றால் அதைப் புண்ணிய பூமி என்று கருதிக்கொண்டிருக்கும் பல ஹிந்துக்களின் இதயங்கள் வெடித்துவிட்டிருக்கும். பிணங்களை எரிப்பது வரைக்குமாவது உண்மையாக காண்பித்திருந்தார். காசியின் இன்னொரு அங்கம் அகோர சாமியார்கள். இவர்களைப் பற்றி எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த வரையில் இங்கே கொடுக்கின்றேன். காசி என்கிற புண்ணிய(?) ஸ்தலத்தில் சென்று எரித்தால்தான் மோட்சம் கிடைத்து மறுபிறவி இல்லாமல் போகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையின்(?) காரணமாக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து கொண்டு வரப்படும் வயசான நபர்களுக்கு இறப்பும், இறந்து போனவர்களுக்கு மோட்சமும் கொடுத்து எரிக்கும் ஒரு சாமியார் கும்பல்தான் அகோர சாமியார்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக காசியை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு, குடும்ப பந்தங்களிலிருந்து தங்களை நீக்கிக்கொண்டு, இறந்தவர்களின் சாம்பலை உடலில் பூசி ருத்ரமாக்கிக்கொண்டு, சிவனின் இன்னொரு அவதாரமான கால பைரவனாக தங்களை கருதிக்கொண்டு, கஞ்சா அடித்துக்கொண்டு, கிடைத்த கெட்டவர்களை போட்டு அடித்து துவம்சம் செய்துகொண்டு வாழ்பவர்கள். கெட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் கெட்டவர்கள் என்பதை இவர்களால் கண்டுகொள்ள முடியும் என்பதும் ஒரு நம்பிக்கை(?). இவர்களை பாலா ஒரிஜினலாக படம்பிடித்திருக்கின்றார் என்றாலும் இவர்கள் எவரும் நமக்கு எவ்விதத்திலும் பரிச்சியமான சந்நியாசிகளே இல்லை.

பாலாவின் வழக்கமான போலீஸ் நையாண்டி இதிலும் இருக்கின்றது. அது மட்டும் போதாதென்று சாமியார்களையும் நையாண்டி செய்திருக்கின்றார். கஞ்சா அடித்துக்கொண்டு போலீசுக்கு பயந்து வாழும் சாமியார்களை சந்நியாசிகள் என்று நினைத்துப் பார்க்கவே மனம் கூசுகின்றது. மௌன சாமியாராக வரும் நபரின் பாத்திரமும் ஒரு சந்நியாசிக்குரியதாய் இல்லை. மொத்தத்தில் ஒன்று பாலாவிற்கு சந்நியாசிகள், சித்தர்கள் என்றால் யார் என்று தெரியவில்லை அல்லது அவர்களின் மேல் அவருக்கு ஏகப்பட்ட கோபம் இருந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சந்நியாசி என்று இன்றுக் கூறிக்கொள்பவர்கள் எவரையுமே பொறுத்துக்கொள்ள முடியாது. சித்தர்களை நான் என்றுமே மதித்திருக்கின்றேன். அவர்களை சந்நியாசிகளோடு ஒப்பிடுவது இறைவனை பூசாரிகளுடன் ஒப்பிடுவதற்கு சமம். அவர்களையும் தவறாக கையாண்டிருப்பது பாலாவின் (ஜெயமோகனின்?) இமாலயத் தவறு. அதேபோல் கடவுளைப் பற்றிய கோபம் இருவருக்குமே நிறைய இருப்பது தெரிகின்றது. ஆனால் இருவருக்குமே கடவுள் என்பது யார் அல்லது எது என்பதைப் பற்றிய கடுகளவு ஞானமும் இல்லை என்பதும் தெளிவாகின்றது. என்னைப் பொறுத்தவரை ‘எது ஒன்றைப் பற்றி உனக்குத் தெரியாதோ, எது ஒன்றைப் பற்றி உனக்கு முழு ஞானம் இல்லையோ, அதைப் பற்றி பேசுவதற்கு நீ தகுதியில்லாதவன்’ என்கிற கீதை வாக்கியம் சத்தியம். அதையும் இவ்விருவரும் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு காட்சியில் கடவுளையே தேவடியாப்பையன் என்று திட்டுவது அசட்டுத்தனத்தின் உச்சக்கட்டம். கடைசிக் காட்சியில் அதே போல அம்சவள்ளி நீண்ட வசனத்தில் அனைத்து கடவுள்களையும் இழுத்து நான் இப்படி இருப்பது அவர்களுக்கெல்லாம் பெருமையா என்று கேட்பதும் சிறுகுழந்தைத் தனமாகவே இருக்கின்றது.

நான் மிகவும் மதிக்கும் சித்தர்களை, அவர்களின் பாடல்களை இவர்களிருவரும் கண்ணா பின்னா என்று பயன்படுத்தியிருப்பதும் எனக்கு ஒரு கோபமே (உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் தப்பில்லை, இது என்னுடைய கருத்து மட்டுமே). உச்சகட்டமாக ஒரு காட்சியைச் சொல்லலாம். தன்னுடைய மகள் வயதுக்கு வந்த சந்தோஷமான செய்தியைக் கூறி மகனை அழைத்துவர நம்பிக்கையோடு புறப்படும் அம்மா மகனிடம் பிச்சையெடுக்காத குறையாக அழுது மன்றாடி வீட்டுக்கு வர வேண்டும்போது சட்டைசெய்யாமல் இருக்கும் மகனைக் கண்டு தாய், ‘நான் உன்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாடா, அதுக்காகவாவது வரக்கூடாதா?’ என்று கேட்கும்போது, சித்தர் பாடலான, “ஐந்திரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே, கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே, உடம்பாவது ஏதடி, உயிராவது ஏதடி, உடம்பாய் உயிரெடுத்த உண்மை ஞாநி நானடி!” என்று பாடிக்காட்டிவிட்டு, “தூமை என்றால் என்னவென்று தெரியுமில்லடி?” என்று கேட்கும் கேள்வியில் சுயம் சுட்டுவிட கூசிப்போகும் தாய் திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று தலைமுழுகும் காட்சிதான் அது. தாய்மையை இதைவிட கேவலமாக இன்னொருவர் சித்தரிக்கவே முடியாது. உலகில் தாயிற்கு இருக்கும் ஸ்தானத்தை அறிந்த நம் முன்னோர்கள், ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று மாதாவைத்தான் முதலில் வைத்து சென்றார்கள். அவர்கள் கூறியதை இந்த இரு ஞான சூண்யங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம் அதை விட்டுவிட்டு பலபேர் பார்க்கும் சினிமா போன்ற ஒரு மீடியாவில் இப்படி தங்களின் ஊணங்களை காண்பித்திருக்கத் தேவையில்லை.

பிரம்மிக்க வைத்த பாலாதான் இப்படி பல குறைகளில் அசிங்கப்படவும் வைத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது எப்படி ஒரே படம் இயமத்திற்கும் அதள பாதாளத்திற்கும் காட்சிகளை வைக்க முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் சிறிதளவாவது தன்னுடைய அலட்சியத்தை ஒதுக்கி வைக்கப் பழகாவிட்டால், எதிர்காலத்தில் அவரை நினைவு கூறுபவர்கள் அவருடைய தவறான முறைகளுக்காகவே நினைவு கூறி அவருடைய நினைவுக்கே இழிவு செய்ய நேரிடும்.

குறிச்சொற்கள்: , ,

«
»

கருத்துக்கள் (1)

 

  1. [...] ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான் விமர்சனம்: நான் கடவுள் [...]

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme