விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire)
February 25, 2009 திரைப்படம், விமர்சனங்கள்

இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது.
விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய சில பிண்ணனிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
- 2005 ஆம் ஆண்டில் விகாஸ் ஸ்வரூப் என்ற இந்தியர் எழுதிய Q & A என்ற நாவல் வெளிவந்தது. இந்த நாவலை அடிப்படையாக கொண்டுதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற இந்தப் படம் உருவானது.
- இந்தப் படத்தை இயக்கியவர் டானி பாயல் என்கிற பிரிட்டிஷ் இயக்குநர். இந்தப் படத்தில் வேலைசெய்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷாராக இருக்க நடித்தது மொத்தமும் இந்தியர்கள் அதிலும் அனில் கபூர் மற்றும் இர்பான் கானைத் தவிர பெரும்பாலானவர்கள் அறிமுக நட்சத்திரங்களே.
- மெளனமாக பல்வேறு விருதுகளை குவித்துக்கொண்டிருந்த இந்தப் படம் பாஃப்டா என்கிற (BAFTAA – British Academy of Film and Television Arts Awards) பிரிட்டிஷாரின் உயரிய விருதை வாங்கியதும் பலபேரின் கவனத்தை ஈர்த்தது. இதில் படத்தில் இசையமைத்திருந்த தமிழக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் சிறந்த இசைக்கான விருதை வாங்கியதும் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இசைக்கான இந்த விருதை வென்றிருக்கும் முதல் இந்தியரும் தமிழரும் இவரே.
- அதன் பிறகு உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் என்றழைக்கப்படும் அகாடமி விருது இவருக்கும் படத்திற்கும் கிடைக்குமா என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்க்க, ஆச்சரியமாக படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றதோடு மட்டுமில்லாமல் இன்ப அதிர்ச்சியாக ஏ. ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் (ஒன்று தனியாக இன்னொன்று பாடலாசிரியருடன் இணைந்து) மற்றும் இரண்டு இந்தியர்களுக்கும் விருதுகள் என்று வென்று குவித்தது. விருது வென்ற மற்ற இரண்டு இந்தியர்கள், ரெசுல் பூக்குட்டி (இசையமைப்பிற்காக இரண்டு பேருடன் சேர்ந்து வென்றிருந்தார்) மற்றும் சம்பூரண் சிங் குல்சார் (ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்த பாடலாசிரியர்). இந்த விருதுகள் படத்தை இந்தியர்களின் கனிசமான கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
இனி, கதைக்கு…
எடுத்தவுடன் ஒரு காவல் நிலையத்தில் காவலதிகாரி ஒரு இளைஞனை சித்ரவதை செய்கின்றார். என்ன ஏது என்று புரியும் முன்னர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இர்ஃபான் கான் வருகின்றார். அந்தப் பையனை இரவெல்லாம் விசாரித்தும் ஒன்றும் கூறமாட்டேன் என்கின்றான் என்று காவலதிகாரி புகார் கூறியபின் பையனை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் அவருக்கு பதில் கூறும் கதாநாயகன் ஜமால் மாலிக் (தேவ் படேல்) என்று கதை விரிகின்றது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோடீஸ்வரனாக விரும்புவது யார்? (Who Wants to be a Millionaire) தொலைகாட்சி நிகழ்ச்சியின் இந்தியத் தயாரிப்பான கோன் பனேகா குரோர்பதி? (कौन बनेगा करोड़पति) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் தன்னை ஒரு அலுவலகத்திலிருப்பவர்கள் டீ வழங்கும் பையனாக அறிமுகப்படுத்திக்கொள்ள ஆச்சரியமாகின்றார் நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூர். அறிவுக்கு மிகவும் வேலை வைக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு கேள்வியாக நான்கு விடைகளுடன் கேட்கப்படும். சரியான விடையை சொல்லச் சொல்ல படிப்படியாக பணம் உயர்ந்துகொண்டே சென்று உச்சகட்டமாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சியில் ஒரு டீ வழங்கும் பையன் எப்படி கலந்துகொள்ளப் போகின்றான் என்று அனைவரும் ஆர்வமாக, கேட்கின்ற ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துவிடுகின்றான் ஜமால். ஒரு கட்டத்தில் மிகவும் கஷ்டமான ஒரு கேள்விக்கு நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறி விளம்பர இடைவேளையின் போது தவறான பதிலை கொடுக்கும் அனில் கபூர் அதையும் மீறி ஜமால் சரியான பதிலைக் கூறியதைப் பார்த்து இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்று சந்தேகப்பட்டு நிகழ்ச்சியின் உச்சகட்டமான 10 கோடீ ரூபாய் கேள்வியின்போது அன்று முழுவதுக்குமான இடைவேளை விட்டு ஜமாலை போலீஸிடம் ஒப்படைக்கின்றார்.
இன்ஸ்பெக்டர் விசாரிக்க விசாரிக்க ஒவ்வொரு கேள்விக்கும் அவனுடைய வாழ்க்கையின் மூலமே பதில்களை அவன் அறிந்திருந்த விதத்தை ஜமால் விளக்குகின்றான்.
மும்பை நகர தாராவி பகுதி குப்பத்தில் வசிக்கும் ஜமால் மாலிக் மற்றும் சலீம் மாலிக் (மதுர் மிட்டல்) சகோதரர்களின் அமைதியான வாழ்க்கையில் மும்பைக் கலவரம் குறுக்கிட அதில் தாயை இழக்கும் இருவரும் கலவர கும்பலில் இருந்து தப்பித்து ஓட அவர்களுடன் இன்னொரு அநாதையாகிய லத்திகா (ஃப்ரீடா பின்டோ) என்கிற சிறுமியையும் ஓடுகின்றாள். அவளை சேர்த்துக்கொள்ள மறுக்கும் அண்ணன் சலீமை சமாதானம் செய்து தம்பி ஜமால் அவளுக்கு அடைக்கலம் கொடுக்க இருவருக்கும் இடைய அரும்புகின்றது அன்பு. அநாதையான இந்த மூவரையும் மற்றும் சில சிறுவர் சிறுமிகளையும் நல்ல சாப்பாடு, இருக்க இடம், உடுக்க உடை கொடுப்பதாக வாக்களிக்கும் மாமன் (அங்குர் விகல்) என்கிற மனிதன் அழைத்துச் செல்கின்றான். ஆனால் அவனும் இவர்களை வேலை வாங்க வாய்ப்பை பிடித்துக்கொண்டு சலீம் அந்த மனிதனும் இணைந்து சிறுவர் சிறுமிகளை வேலை வாங்குகின்றான். இதனாலேயே அவனுடன் நெருக்கமாகும் சலீம் ஒரு நாள் அந்த மனிதன் தன்னுடைய சக சிறுவர்கள் சிலரை பாடச் சொல்லிக் கேட்டு நன்றாக பாடுபவர்களை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு செல்வதை காண்கின்றான். நன்றாக பாடினால் நல்லபடியாக கவனித்துக்கொள்வான் என்று நினைக்கும் லத்திகாவும் ஜமாலும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, நன்றாக பாடும் சிறுவர்களின் கண்களின் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி குருடாக்கி பிச்சையெடுக்க வைக்கும் அந்த மனிதனின் குரூர எண்ணத்தை கண்டுபிடிக்கும் சலீம் அதிர்ந்து போய் ஜமாலை தப்பாக பாடுமாறு எச்சரிக்கின்றான். ஆனால் தன்னுடைய முன்னேற்றத்தை தடுக்கவே அண்ணன் அப்படி கூறுகின்றான் என்று நினைத்துவிடும் ஜமாலால் நிலமை கையை மீறி போய்விட இருவரையும் காப்பாற்ற மாமனிடமிருந்து தப்பிக்க வைக்கின்றான் சலீம். ஆனால் தப்பித்து இரயில் ஏறும்போது வேண்டுமென்றே லத்திகாவின் கையை பிடிக்காமல் விட்டுவிட அவள் மட்டும் மாட்டிக்கொண்டுவிடுகின்றாள். அவளையே நினைத்து உருகும் ஜமால் வேறு வழியின்றி அண்ணனின் வழிப்படி நடக்க, டெல்லிக்கு வரும் இருவரும் சின்னச் சின்ன திருட்டுகள் அப்புறம் டூரிஸ்ட் கைடுகள் என்று பல பரிணாமங்கள் எடுக்க ஒரு சமயம் தன்னுடைய சக சிறுவன் ஒருவன் பிச்சையெடுக்கும் போது கவனிக்கும் ஜமால் அவனிடம் லத்திகா ஒரு விபச்சார விடுதியில் நடனம் ஆடுவதைப் பற்றி அறிந்து சலீமை கூப்பிட்டுக்கொண்டு அங்கே செல்கின்றான். அங்கே அவர்கள் லத்திகாவை சந்தித்து மீட்டுப் போகும் நேரம் மாமன் வந்துவிட வேறு வழியின் அவனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான் சலீம். இதில் தப்பித்தபின் லத்திகா தனக்கே சொந்தம் என்று சண்டை போடும் சலீம் ஜமாலை வெளியே அனுப்பிவிட ஜமாலை கொன்றுவிடுவதாக கூறும் அவனுடைய மிரட்டலுக்கு பயந்து லத்திகாவும் சம்மதிக்கின்றாள். சலீம் ஒரு தாதாவிடம் சென்று அடியாளாக சேர்ந்துவிட, ஜமால் ஒரு அலுவலகத்தில் எடுபிடி பையனாக வேலை செய்கின்றான். வருடங்கள் நகர எதேச்சையாக அண்ணன் சலீமை சந்திக்கும் ஜமால் அவனைத் தொடர்ந்து சென்று தாதாவின் மனைவியாகியிருக்கும் தன்னுடைய காதலி லத்திகாவை கண்டுபிடிக்கின்றான். அந்த வீட்டில் சமையல்காரனாய் நுழையும் அவன் லத்திகாவிடம் பேசும் போது அவளும் தன் மேல் இன்னமும் காதலாயிருப்பதும் இருப்பினும் தாதாவிற்கு பயந்து அவனுடன் வாழ்வதையும், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ‘கோடீஸ்வரனாக விரும்புவது யார்’ என்கிற தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்ப்பதையும் அறிந்து அங்கிருந்து வெளியேறுகின்றான். காதலியை மீட்க அவன் எடுக்கும் ஒரு முயற்சியும் சலீமால் முறியடிக்கப்பட வேறு வழியின்றி அவளுடைய கவனத்தை கவரவும் அவளை அடையவும் அவளுக்காக அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றான் ஜமால். இந்தக் கதையில் நடக்கும் சில சம்பவங்களே அந்தப் போட்டியின் கேள்விகளுக்குப் பதிலாகவும் ஆகிவிட உச்சகட்டத்தையும் நெருங்கிவிட்டான்.
ஜமாலின் பதில்களில் உண்மையை அறியும் இன்ஸ்பெக்டர் எதனால் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றாய் என கடைசியாக கேட்க, தன்னுடைய காதலி இந்தப் படத்தை பார்ப்பாள் என்றும் அவளுடைய கவனத்தைக் கவரவே இந்தப் போட்டியில் தான் கலந்துகொள்வதாகவும் சொல்லி நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றான் ஜமால். அதன் பிறகு அவனை நல்லவனென்று போலீஸ் திரும்பவும் ஒப்படைக்க அதற்குள் நிகழ்ச்சியின் உச்சகட்டத்தைக் காண நாடே தொலைகாட்சி பெட்டியின் முன்னால் தவமிருக்கின்றது. இதற்குள் ஜமால் மற்றும் லத்திகாவின் அசைக்க முடியாத காதலை உணர்ந்த சலீம் அவளிடம் தன்னுடைய மொபைலையும் காரையும் கொடுத்து தப்பிக்க வைக்கின்றான். அதை அறியும் தாதாவின் ஆட்களால் கொலையும் ஆகின்றான். அதேசமயம் நாடே தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் வீற்றிருந்ததால் டிராபிக் ஜாமாகிவிட காரைவிட்டு வெளியேறும் லத்திகா அருகிலிருந்த தொலைகாட்சிப் பெட்டியின் மூலம் ஜமால் தனக்காக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தெரிந்துகொண்டு கவனிக்கின்றாள். ஜமாலுக்கு கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை. அவன் யாராவது ஒரு தெரிந்த நபருக்கு போன் செய்யலாம் என்று வாய்ப்பு கொடுக்கப்பட, அதை பயன்படுத்தி தனக்குத் தெரிந்த ஒரே எண்ணான சலீமின் எண்ணுக்கு அழைக்கின்றான் அவன். சலீமின் மொபைல் தன்னிடமுள்ளதை உணரும் லத்திகா ஓடிப்போய் அதை எடுக்க இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்ள முடிகின்றது. ஆனால் லத்திகாவிற்கும் அந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஜமால் அந்தக் கேள்விக்கும் சரியான பதிலை கொடுத்தானா, 10 கோடி ரூபாய்க்கு அதிபதியானானா, அவனுடைய காதலியை அடைந்தானா என்கிற கேள்விகளுக்கு மீதிக் கதை பதிலளிக்கின்றது.
இனி, விமர்சனத்திற்கு…
ஏழைச் சிறுவர் சிறுமியராக நடித்தவர்களை பாராட்டியே ஆகவேண்டும். அறிமுகங்கள் என்ற உணர்வே இன்றி அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்களின் நடிப்பும் உணர்வுகளின் வெளிப்பாடும் ஐயோ என்று ஆச்சரியப்பட வைக்கின்றன. ஒவ்வொருவரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்ததில் திரையில் நம்பமுடியாத காட்சிகள் நிஜமாய் விரிகின்றது.
நமக்கெல்லாம் அவ்வளவாக அறிமுகமில்லாத குடிசை வாழ் மக்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை ஆட்டி வைக்கும் தாதாக்கள் என்று ஒரு ஏழாவது உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கின்றார் இயக்குநர். காமிராவின் கோணங்களும் அது பிடிக்கும் நிகழ்வுகளும் ஆச்சரியமான நிஜங்களாய் நம்முன் விரிகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்களின் கடின உழைப்பை படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் காட்டுகின்றது.
ஏ. ஆர். ரஹ்மானின் பின்னிசையின் அருமையை நான் கூறவேண்டிய தேவையே இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் நிரூபித்துவிட்டன.
இந்த ஏழாவது உலகத்தை இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவிலேயே முதல் தடவையாக இவ்வளவு நிதர்சனமாகவும் நிஜமாகவும் காண்பித்து இருக்கிறார் இயக்குநர் என்று சொல்லிவிடலாம். ஆனால் தமிழ் இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ அந்த கூற்றைப் பொய்யாக்கிவிட்டது. அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு விமர்சனம் எழுதுகின்றேன். அதைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் மிகவும் குறைவானது போல் தோன்றுமளவிற்கு அதில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றது இந்த ஏழாவது உலகம்.
இவ்வளவு விருதுகளை குவித்த படம் என்றாலும் சில குறைகள் இல்லாமலில்லை. குறைகள் இல்லாமல் திரைப்படம் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அதிசயம்.
சேரியில் வாழும் கல்வியறிவு இல்லாத சிறுவர்கள் ஆங்கிலம் தெளிவாக பேசுவது, அமிதாப் பச்சனின் கையெழுத்தைப் பெறுவதற்காக உயிரைக் குடிக்கும் துர்நாற்றம் அடிக்கும் கழிவுகளின் சாக்கடையில் சிறுவன் ஜமால் குதிப்பது, அதைத் துடைக்கக் கூட செய்யாமல் அப்படியே சென்று அமிதாப்பிடம் கையெழுத்து வாங்குவது, அதை சுற்றியிருக்கும் பாதுகாவலர்களும் அனுமதிப்பது, இந்தியாவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சர்வசாதாரணம் என்பது போல காண்பிப்பது, இது போன்ற லாஜிக் மீறல்களை அனுமதிக்காமலிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
படம் தழுவிய நாவலிலிருந்து வழக்கம் போல பல விஷயங்கள் மாற்றப்பட்டிருப்பதும் ஒரு குறை. ஏன் எந்த இயக்குநரும் நாவலில் இருக்கும் கதையை அற்புதமாக வடிக்கத் தவறுகின்றார்கள்? (என்னைப் பொறுத்தவரை பீட்டர் ஜாக்சன் அந்த விஷயத்தில் எவ்வளவோ தேவலை, பேசாமல் ஹாரி பாட்டரையும் அவரிடம் கொடுத்திருக்க வேண்டும்). இதில் நாவல் எழுதிய விகாஸ் ஸ்வரூப் அவர்களே வருத்தப் பட்ட விஷயம் அவருடைய கதாநாயகனின் உண்மைப் பெயரான ராம் முகம்மது தாமஸ் என்பதை ஜமால் மாலிக்காக மாற்றிவிட்டது. இதனாலேயே மதச்சாயல் பூசப்பட்டு பல எதிர்ப்புகளுக்கும் இந்தப் படம் காரணமானது. இருப்பினும் இப்போது விருதுகளின் மத்தியில் அதை நினைப்பவர்கள் மிகவும் குறைவு. அதோடில்லாமல், இந்தியாவை இவ்வளவு அசிங்கமாக ஒரு வெளிநாட்டு இயக்குநர் (அதுவும் நம்மை ஒரு காலத்தில் ஆண்ட பிரிட்டிஷ் வம்சத்தை சேர்ந்தவர்) எப்படி எடுக்கலாம் என்றும் சில எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன. விருதுகளின் சப்தத்தில் அவைகளும் அடங்கிவிட்டது போலிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை இதைவிட மோசமாக நான் கடவுள் படத்தில் நம் நாட்டு இயக்குநர் பாலாவே காட்டிவிட இந்த எதிர்ப்பு அர்த்தமற்று போய்விட்டது.
இது போன்ற சில குறைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் படம் அற்புதமான படம். ஆஸ்கார் விருதுக்கும் ஏற்ற படமே.
உங்களின் கருத்துக்களை இங்கே வழங்குங்கள்…
கருத்துக்கள் (3)
[...] படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Milliona… படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே [...]
VERY GOOD
நன்றி…