மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு
December 29, 2008 தொடர் கதைகள்
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: முன்னோட்டம்…
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்று
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு
திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது ‘ரா’ அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் கூறுவதை இந்த நிறுவன அதிபர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் சாத்தியமில்லாதது.
யோசனையிலிருந்த முத்துவேல் கதவு தட்டப்படும் சத்தத்தை கவனிக்காமலிருந்துவிட கதவு படாரென்று திறந்ததைக் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார்.
“வெளியே வருகிறீர்களா?”
கதவை அடைத்துக்கொண்டு நின்றிருந்த வெள்ளைக்காரனைப் பார்த்து முத்துவேல் வியர்த்து வழிந்துகொண்டிருந்தபோதே அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த நந்தினியைப் பார்க்க புத்தி கொஞ்சம் செயலுக்கு வந்தது முத்துவேலுக்கு. மறுபேச்சு பேசாமல் வெளியே வந்த முத்துவேல் மொத்த தளமும் ஸ்தம்பித்து நின்றிருக்க அனைவரும் தங்கள் கணினிகளை நிறுத்திவிட்டு தத்தமது சுழல் நாற்காலிகளை திருப்பி ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த்தைப் பார்த்து நிலமையின் தீவிரத்தை உணர்ந்த முத்துவேல் அமைதியாக தளத்தின் மூலையில் இருந்த சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
தனது அறைக்கு வந்த வெள்ளைக் காரன் ஒவ்வொரு திட்ட மேலாளர்கள் அறைக்கும் சென்று அவர்களையும் வெளியே வர வைத்ததைப் பார்த்த முத்துவேலுக்கு இவர்கள் எவ்வளவு அறிவுப்பூர்வமாக செயல்படுகின்றார்கள் என்பதை வியந்த அதே நேரம் இவ்வளவு கெடுபிடிகளுக்கு நடுவில் ருத்ரன் எப்படி இவர்கள் கவனிக்காமல் இங்கே வரமுடியும் என்று எண்ணி இன்னமும் அதிகமாக வியந்தார்.
அதே சமயம் நெல்சனுடன் நடந்துகொண்டிருந்த நந்தினியின் மூளை படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தது. தாய் தந்தையரால் அன்பும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டு வளர்ந்த நந்தினி இயல்பிலேயே மிகவும் தைரியசாலி. பெண்களுக்கே இருக்கும் சில சின்னச்சின்ன பயங்கள்கூட அவளுக்கு கிடையாது. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவளுக்கு இந்த தைரியமும் புத்திசாலித்தனமும்தான் மூலதனங்கள். அவ்வளவு தைரியசாலியாக இருந்தும் சிவசங்கரை நான்கு பேர் துப்பாகியின் முனையில் வைத்திருந்ததைப் பார்த்தவுடன் பயந்து அலறிவிட்டது அவளுக்கே வெட்கமாக இருந்தது. சிவசங்கரும் ஒன்றும் கோழையில்லை. கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வந்தவர் அதனால் எந்தவிதமான இக்கட்டான சூழலையும் அவரால் சமாளிக்க முடியும். இருப்பினும் நான்கு பேர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சூழ்ந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட மனிதராலும் ஒன்றும் செய்ய முடியாது. நல்ல வேளையாக ஒரே ஒருவன் மட்டுமே நந்தினியுடன் வந்திருக்கின்றான். மென்பொருள் துறையிலிருப்பவர்கள்தானே என்கிற அலட்சியமாக இருக்கலாம். இவனை எப்படி முடக்கிப் போடுவது என்றுதான் நந்தினியின் மூளை படு சுறுசுறுப்பாக யோசித்துக்கொண்டிருந்தது. அப்படியே ஏதோ ஒரு தந்திரத்தை உபயோகித்து அவனை முடக்கிவிட்டாலும் இன்னமும் மூன்று பேர் இருக்கின்றார்கள். அது பத்தாதென்று லிண்டா வேறு. அவர்கள் கொண்டுவந்திருந்த சூட்கேஸில் எது இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக இன்னமும் கொஞ்சம் ஆயுதங்கள் இருக்கும் என்பதில் நந்தினிக்கு சந்தேகமே இல்லை.
இவ்வளவு தடைகளை உடைக்க வேண்டுமென்றால் நான் சூப்பர் கேர்ளாக இருக்க வேண்டும். அதற்கு வழியில்லை. சே, தனியாக வேலைக்குப் போகின்றாய், சென்னை ஒன்றும் சாதாரண நகரமில்லை அதனால் தற்காப்பு கலையாக கராத்தே போன்ற எதையாவது கற்றுக்கொள் என்று அப்பா அப்பவே படித்து படித்து சொன்னார் கேட்காமல் விட்டுவிட்டேன். ஒரு வேளை கராத்தே கற்றுக்கொண்டிருந்தால் அதை உபயோகித்து இந்த நான்கு பேரையும் பந்தாடிவிடலாமோ? ஆமாம் பெரிய ரஜினிகாந்த்துன்னு நினைப்பு. நான்கு பேரை பந்தாடுறதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். ஏதோ ஒருவர் இருவர் வழிமறித்தால் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிடுவதற்கான நேரத்தைக் கொடுக்கத்தான் தற்காப்பு கலை பயன்படும். கொஞ்சம் நன்றாகவே தெரிந்திருந்தால் வேண்டுமானால் இரண்டு பேரை செயலிழக்க செய்யலாம். ஆனால் நான்கு பேர்? அதுவும் இயந்திரத் துப்பாக்கிகளோடு? சான்ஸேயில்லை. பல விதமாக சிந்தித்த நந்தினிக்கு ஒரு வழியாக வெளியிலிருந்து உதவி கிடைத்தாலொழிய வேறு வழியில்லை என்பது புலனாயிற்று. ஆனால் அதற்கு போலீஸைக் கூப்பிட வேண்டும். ஆனால் இவர்கள் புத்திசாலித்தனமாக எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டார்கள். வெளியில் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் மொபைலில்தான் கூப்பிட வேண்டும். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் நெல்சன் ஒவ்வொருவரையும் கழுகுபோல கண்காணிப்பதைப் பார்த்தால் மொபைலை எடுக்கிறவருக்கு உடனடி சொர்க்கம்தான். யோசனையில் மூழ்கியிருந்த நந்தினிக்கு சட்டென்று ஒரு யோசனை வந்தது.
ஆமாம், நானென்ன சினிமா ஹீரோயின் போலவே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்? தனியாகத்தான் இந்த நால்வரை எதிர்கொள்ள வேண்டுமா என்ன? இந்த தளத்தில் குறைந்த பட்சம் முப்பது அல்லது நாப்பது பேர் இருப்பார்கள். அனைவரும் இளைஞர்கள். அவர்களை உபயோகித்து இந்த நிலமையை சரிசெய்தால் என்ன? அதுதான் சரியென்று அவளுக்கு தெரிந்தது. அதே சமயம் அப்படி மற்றவர்களை உபயோகிக்க வேண்டுமென்றால் அவர்களிடம் பேச வேண்டும். நிலமையை விளக்கி ஒரு நல்ல திட்டத்தை போட்டுத்தான் இவர்களை முடக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக நெல்சன் இருக்கின்றான்.
ஒருவழியாக நெல்சனை எப்படியாவது தந்திரமாக முடக்குவது மட்டும்தான் ஒரே வழி என்று நந்தினி முடிவெடுத்து எப்படி முடக்கலாம் என்று வாய்ப்புக்காக காத்திருந்தாள்.
தென்னாப்ரிக்க ஹை கமிஷனர் இல்லம், எம்.ஜி. ரோடு, புது தில்லி…
அலுவல் வேலைகளுக்கு அல்லது படிக்கும் நேரத்திற்கு என்று ஹை கமிஷனர் பிரண்டன் ஃபாக்ஸ் ஒதுக்கியிருந்த அந்த தனிவீட்டின் இரண்டாவது படுக்கை அறை ஒரு குட்டி காவல் கண்காணிப்பு அறை போல மாறிவிட்டிருந்தது.
படிப்பு மேஜை முழுவதையும் எலக்ட்ரானிக் பொருட்கள் நிறைத்திருந்தன. இரண்டு மடிக்கணினிகள் இணைய இணைப்போடு தெரிய அதற்குப் பக்கவாட்டிலிருந்து நீண்ட கேபிளின் மற்றொரு முனையில் ஒரு குட்டி மௌஸ் (கணினியில் திரையை சுட்டும் கருவி) வீற்றிருந்தது. மடிக்கணினிகளுக்குப் பக்கத்திலேயே கைக்கணினியாக பாம்ஒன்னின் டி.எக்ஸ் கருவி வீற்றிருந்தது. அதிலிருந்து இரண்டு கேபிள்கள் மடிக்கணினிகளில் இணைந்திருக்க அதனுடைய குட்டித் திரையில் சென்னையின் மவுண்ட் ரோட்டின் வரைபடம் தெரிந்தது. மேஜையின் மையத்தில் ஒரு குட்டி சாட்டிலைட் ரேடியோ யூனிட் வைக்கப்பட்டிருந்தது. மேஜை முழுவதையும் பல்வேறு விதமான கருப்பு நிற கேபிள்கள் நிறைத்திருந்தன. ஒரு வைஃபை டிரான்ஸ்மிட்டர் கருவி (கணினியின் வலையமைப்பை கேபிள் இல்லாமல் காற்றில் பகிர்ந்து கொடுக்கும் கருவி) மேஜையை ஒட்டியிருந்த சுவற்றில் இன்ஸ்டன்ட் பேஸ்ட்டரால் ஒட்டப்பட்டிருந்தது. அதிலிருந்த பச்சை நிற எல்.ஈ.டி விளக்குகள் கண்சிமிட்டி தாங்கள் வேலை செய்வதை பறைசாற்றின. மடிக்கணிகளுக்கு வலப்புறம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கெல்லாம் சம்பந்தமேயில்லாத ஒரு கைத் துப்பாக்கி தெரிந்தது. மடிக்கணிகளுக்கு இடப்புறம் ஒரு கோக் கேன் தெரிய அதற்குப் பக்கத்திலேயே பாதி தின்றிருந்த ஒரு சிக்கன் பர்கர் தெரிந்தது.
அறையின் ஒரு பக்கத்திலிருந்த புத்தக அலமாரியில் பல்வேறு புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருப்பது தெரிய அதற்குச் சற்றும் சம்பந்தமேயில்லாமல் பாதி பகுதியை இழந்து ஒரு சிக்கன் பர்கர் தெரிந்தது. புத்தக அலமாரியை ஒட்டியிருந்த குட்டி மேஜை முழுவதும் இன்னமும் பிரிக்காமலிருந்த பர்கர்கள், சான்ட்விட்ச்சுகள், பிஸ்ஸாக்கள் மற்றும் ஹாட் டாக்குகள் தெரிந்தது. ஒரு சின்ன போர்ட்டபிள் எலக்ட்ரிக் டபுள் ப்ரெட் டோஸ்ட்டரும் அதற்குப் பக்கத்தில் ஒரு குட்டி ஜாம் டப்பாவும் சில பிரெட் பாக்கெட்டுகளும் தெரிந்தது.
அறையின் இன்னொரு பக்கம் முழுவதையும் பல்வேறு துணி மற்றும் பிளாஸ்டிக் பைகள் தெரிந்தது. அந்தப் பைகளுக்கு மத்தியில் இரண்டு ஸ்லீப்பர் பேக் தெரிய அதில் கண்மூடித் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார ஆணும் பெண்ணும் தெரிந்தனர். மடிக்கணினிகளுக்கு எதிரிலிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றை அடைத்துக் கொண்டு ஒரு சற்றே குண்டான வெள்ளையன் அமர்ந்திருந்தான். அவனுடைய தலை முழுவதையும் அடைத்துக்கொண்டு ஸிப்ரானிக்ஸின் இரைச்சல் நீக்கும் பெரிய ஹெட்செட் வீற்றிருந்தது. அவனுடைய கண்கள் மடிக்கணினியின் திரையையும் பாம்ஒன் டி.எக்ஸின் திரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன.
சட்டென்று அறையின் அமைதியைக் கிழித்த வண்ணம் பீப் பீப் என்று சத்தம் கேட்க. பாம்ஒன் டி.எக்ஸின் திரையை பார்த்துக்கொண்டிருந்த அந்த வெள்ளையன் சட்டென்று திரும்பி சாட்டிலைட் ரேடியோ யூனிட்டைப் பார்க்க அதிலிருந்த சிகப்பு எல்.ஈ.டி கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. சட்டென்று பாய்ந்து அதிலிருந்த பச்சை நிற பொத்தானை அழுத்தினான். ஹெட்செட்டில் ஒரு பெண்ணின் குரல் துல்லியமாக வழிந்தது.
“க்ளாவ்ஸ் டூ ஈகிள்… க்ளாவ்ஸ் டூ ஈகிள்… டூ யூ ரீட்? ஓவர்!”
“ஈகிள் ரிசீவிங் சவுண்ட் அண்ட் க்ளியர்.. ப்ளீஸ் ஸ்டேட் தி கோட்… ஓவர்!”
“கோட் ஈஸ் தி வீக்கர் எனிமி… ஓவர்!“
“கோட் வெரிஃபைட். தேங்ஸ். சொல்லு லிண்டா, என்ன ஆச்சு? ஏன் திடீரென்று கூப்பிட்டிருக்கின்றாய்?”
“மேட், இங்கே ஒரு இக்கட்டான நிலமை. நோஞ்சான் எதிரியின் கணினியில் ஒரு புதுவித பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப் பட்டிருக்கின்றது. அது கைரேகை ஒன்றைக் கேட்கின்றது. இங்கே இருக்கும் யாருடைய கைரேகையும் அதில் பொருந்தவில்லை. ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கின்றது. நிக்கோலஸ் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அவனால் அந்த திரையைத் தாண்டி போக முடியாது போலிருக்கின்றது. நீ இணையம் மூலமாக உள்நுழைந்து பார்க்கின்றாயா?”
“இது என்ன புதுக் குழுப்பம்! சரி, சரி, நிக்கோலஸை உடனே சாட்டிலைட் அப்லிங்க்கரை (செயற்கைக் கோள் மூலம் தகவல்களை அனுப்பும் போர்ட்டபிள் யூனிட்) செட்டப் செய்து எனக்கு இரகசிய குறியிட்டைக் கொடுக்கச் சொல். நான் இணையம் மூலம் நுழைந்து பார்க்கின்றேன்.”
“அவன் ஏற்கனவே செட்டப் செய்துவிட்டான். உன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு இரகசியக் குறியீட்டையும் அனுப்பி வைத்துவிட்டான். நான் இப்போது தொடர்பை துண்டிக்கப் போகின்றேன். நீ உள்ளே நுழைந்தபின் எனக்கு தொடர்பு கொள். எப்போதுமே பேச்சு 10 நிமிஷத்திற்குள் முடிந்துவிட வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்.”
“சின்னக்குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லாதே லிண்டா. உன்னைவிட அதனால் ஏற்படும் பிரச்சினைகள் எனக்குத்தான் நன்றாகத் தெரியும்.”
“பாதுகாப்புக் கருதி சொன்னேன் மேட். சீக்கிரம் வேலையை பாரு. ஓவர் அண்ட் அவுட்…”
தொடர்பு துண்டிக்கப்பட அறையின் அமைதி மறுபடியும் மேட்டை சூழ்ந்துகொண்டது. ஒரு நிமிஷம் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி இந்த பிரச்சினையைப் பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த மேட், இது சுலபத்தில் தீர்ந்துவிடக் கூடிய பிரச்சினை அதற்கு ஏன் அவர்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.
கணினித் திரையில் வலை உலாவியை இயக்கி தன்னுடைய பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையை திறந்தான். இந்த மின்னஞ்சல் முகவரியை அவனை நோக்கி தொடர உபயோகிக்க முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மின்னஞ்சல் திறக்கப்பட முதல் அஞ்சலாக நிக்கோலஸிடமிருந்து அஞ்சல் வந்திருந்தது. அதை சொடுக்க திரையில் விரிந்து அதிலிருந்த தகவல் தெரிந்தது. தகவலில் இருந்த எண்களும் எழுத்தும் கலந்த 32 இலக்க குறியீட்டை காப்பி செய்து கொண்டு சாட்டிலைட் அப் அண்டு டவுன் லிங்க் எக்ஸ்ப்ளோரரைத் (செயற்கைக் கோள் மூலம் செய்திகள் பறிமாற உதவும் மென்பொருள்) திறந்தான். அதிலிருந்த இணைப்பு கோரல் சட்டத்தில் நிக்கோலஸ் அனுப்பியிருந்த 32 இலக்க குறியீட்டை பேஸ்ட் செய்ய அது திறந்து விரிந்தது. அதிலிருந்த தகவல்களை சரிபார்த்துவிட்டு கனெக்ட் டு ரிமோட் டெஸ்க்டாப் (கணினித் திரையை தொலைவிலிருந்து இயக்க உதவுவது) ஐகானை சொடுக்க திரையில் ஒரு புது சட்டம் திறந்து சில நிமிடங்களுக்குப் பின் ஒரு கணினியின் திரை தெரிந்தது.
திரையின் மையத்தில் தெரிந்த வெள்ளைக் கட்டத்தின் உள்ளே பெரிது பெரிதாக தெரிந்த கடைசி வாய்ப்பு எச்சரிக்கை கண்களை உறுத்தியது. திரையை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் சாட்டிலைட் ரேடியோ யூனிட்டை அணுகி அதிலிருந்த ஒரு குட்டி திறப்பை திறக்க அதன் பின்னால் மறைந்திருந்த டயல்கள் கண்களுக்குத் தெரிந்தது. அதில் லிண்டாவின் அலைவரிசையை அவன் சரிபார்த்துவிட்டு பச்சை நிற பொத்தானை அழுத்த ஹெட்செட்டில் சாட்டிலைட் சப்தங்கள் கேட்டன. சிறிது நேரத்தில் சப்தங்கள் தேய்ந்து தெளிவான மௌனம் கேட்க. மேட் பேச ஆரம்பித்தான்.
“கழுகிலிருந்து கால்களுக்கு… கழுகிலிருந்து கால்களுக்கு… உங்களால் கேட்க முடிகிறதா? முடிந்தது!”
“கால்களுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் வருகின்றது… உங்களின் இரகசியத் தொடரைக் கூறுங்கள்... முடிந்தது!”
“இரகசியத் தொடர், நோஞ்சான் எதிரி… முடிந்தது!”
“தொடர் சரியாக உள்ளது. நன்றி. சொல்லு மேட், உள்ளே நுழைந்துவிட்டாயா?”
“நுழைந்துவிட்டேன் லிண்டா, இப்ப நோஞ்சான் எதிரியின் கணினித் திரையை பார்த்துகிட்டிருக்கேன். என்ன செய்யணும்னு சொல்லு!”
“என்ன செய்யணும்னு என்னைக் கேட்கின்றாயா? இந்தத் திரையின் மூலம் உன்னால் எதுவும் சாதிக்க முடியாது. உன்னுடைய ஹேக்கிங் ட்ராஜனை (கணினியின் வலை இணைப்பு மூலம் பாதுகாப்பை உடைத்து உள்ளே நுழையும் நிரல்) பதிவேற்றி நுழைய முடிகிறதா சொல்லு. எக்காரணம் கொண்டும் நேரடியாக இந்த திரையில் நுழைய முயற்சிக்காதே. கடைசி வாய்ப்பு என்பதால் மூடிவிடக் கூடும்!”
“சரி லிண்டா, இதோ ஒரே நிமிஷம். இணைப்பிலேயே இரு. இன்னமும் 10 நிமிஷம் ஆகிவிடவில்லை.”
“தெரியும் மேட், வேலையைக் கவனி நான் இணைப்பிலேயே இருக்கின்றேன்…”
மறுபடியும் மடிக்கணினியில் கவனத்தைச் செலுத்திய மேட் தட்டச்சுப் பலகையில் வேகமாக தட்ட ஆரம்பித்தான். சில நொடிகளில் திரையில் ஒரு ஹேக்கிங் ட்ராஜன் சர்வர் கணினியைக் குறிவைத்து பதிவேறத் தொடங்கியது.
“லிண்டா, ஹேக்கிங் ட்ராஜன் பதிவேறிக்கொண்டிருக்கின்றது. அரை நிமிஷத்தில் விடை தெரிந்துவிடும்.”
லிண்டா பதிலளிக்காமலிருக்க, திரையை கவனித்த மேட் திரையில் சட்டென்று வந்த செய்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
“லிண்டா, ஒரு சின்ன பிரச்சினை. அந்த கணினியில் சக்திவாய்ந்த ஃபயர்வால் (வலை இணைப்பின் மூலம் வரும் தாக்குதல்களை சமாளிக்கும் நெருப்புச்சுவர் என்று அழைக்கப்படும் மென்பொருள்) இருக்குதுன்னு நினைக்கின்றேன். என்னோட சக்திவாய்ந்த ஹேக்கிங் ட்ராஜனையே உள்ளே நுழையவிடாமல் தடுக்கின்றது. இந்த நிலையில் ஒரே வழிதான் இருக்கின்றது. என்னுடைய யூ.எஸ்.பி ட்ராஜனை (கணினியின் பல்வேறு இணை கருவிகளுக்கு பொதுவான யூ.எஸ்.பி என்று அழைக்கப்படும் இணைப்பின் மூலம் பாதுகாப்பை உடைக்கும் நிரல்) அப்லிங்க் செய்கின்றேன். நிக்கோலஸிடம் அதைப் பதிவிறக்கம் செய்து கணினியில் போட்டு பார்க்கச் சொல். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் நமக்கு மிகப் பெரிய பிரச்சினைதான்.”
“சரி மேட், சீக்கிரம் அனுப்பு. இங்கே ரொம்ப நேரம் என்னால் இருக்க முடியாது. முடிந்தது துண்டிக்கின்றேன்!”
இணைப்பு மறுபடியும் துண்டிக்கப்பட மேட் மறுபடியும் தட்டச்சுப் பலகையில் வேகமாக தட்ட ஆரம்பித்தான்.
பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
லிண்டா கடுப்புடன் ஹெட்செட்டைக் கழற்றினாள். நிக்கோலஸைப் பார்த்து எரிச்சலுடன் பேச ஆரம்பித்தாள்.
“நிக், மேட்டோட ஹேக்கிங் ட்ராஜன் வேலை செய்ய விடாம இந்த சர்வரோட ஃபயர்வால் தடுக்குதாம். உனக்கு யூ.எஸ்.பி ட்ராஜனை அப்லிங்க் செஞ்சுக்கிட்டிருக்கான். வருதான்னு பாரு. சீக்கிரம் நமக்கு வேலை முடிய வேண்டும்.”
“சரி லிண்டா, ஒரு இரண்டு நிமிஷம் கொடு, என்ன ஆச்சுன்னு சொல்றேன்.”
சர்வர் கணினியின் மேஜையின் மேல் வைத்திருந்த தன்னுடைய மடிக்கணினியின் தட்டச்சுப் பலகையை வேகமாக தட்ட ஆரம்பித்தான் நிக்கோலஸ்.
கணினியின் சிறிய கண்ணாடி அறையை விட்டு வெளியே வந்த லிண்டா லூயி மற்றும் பிலிப்ஸின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மத்தியில் கவலையில்லாம் உட்கார்ந்திருந்த சிவசங்கரையும் அவருடைய பக்கத்தில் சிறிது கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்த டேவிட் பிரசாத்தையும் அணுகினாள்.
“என்ன சிவசங்கர், உங்களோட ஃபயர்வால் நல்லா வேலை செய்யுதுன்னு சந்தோஷமா உட்கார்ந்திருக்கின்றீர்களா? எல்லாம் இன்னும் சில நிமிடங்கள்தான். உங்களோட ஃபயர்வால் மென்பொருளோட பேர் என்னன்னு சொல்ல முடியுமா?”
“அது நாங்களே உருவாக்கிய ஃபயர்வால் மென்பொருள் லிண்டா, அதை உடைப்பது சாத்தியமில்லாதது.”
“அதையும் பார்ப்போமே. இன்னும் சில நிமிடங்களில் உங்களின் சர்வர் கணினி முழுவதும் என்னுடைய கைகளில் வந்துவிடப் போகின்றது. அப்புறம் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இன்சாக்ரிப்டைப் பற்றிய முழுவிவரமும் எனக்குத் தெரிந்துவிடப் போகின்றது.”
சிவசங்கர் சிறிது கவலையுடன் லிண்டாவை பார்த்தார். ருத்ரன் சீக்கிரம் வரவேண்டும். இவர்கள் நான் நினைத்த அளவு லேசுபட்டவர்கள் இல்லை போலிருக்கின்றது. கணினித் தொழில்நுட்பத்தில் இவ்வளவு அறிவும் உபகரணங்களும் உள்ளவர்களால் எந்தக் கணினியையும் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும். அதிக நேரம் நமக்கு இல்லை. ருத்திரன் எங்கே இருக்கின்றாரோ?
“லிண்டா, இங்கே கொஞ்சம் ஓடி வா…”
மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்த நிக்கோலஸ் அழைக்க திடுக்கிட்ட லிண்டா இரண்டு அடிகளில் பாய்ந்து கண்ணாடி அறைக்குள் நுழைந்தாள்.
“என்ன நிக், உள்ளே நுழைஞ்சுட்டியா?”
“இன்னும் இல்ல லிண்டா. ஆனால் அதுக்குள்ள ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்!”
“என்ன பிரச்சினை?” சிறிது திடுக்கிட்ட குரலில் கேட்டாள் லிண்டா.
“கொஞ்சம் சர்வர் கணினியின் திரையைப் பாரு!”
லிண்டா குழப்பத்துடன் சர்வர் கணினியின் திரையைப் பார்க்க அதன் திரை முழுவதும் சிவப்பாகிவிட அதன் நடுவில் கருப்பு நிறத்தில் தெரிந்த செய்தி அவளுக்குள் இடியென இறங்கியது.
‘கடைசி வாய்ப்பு கைரேகையை வைப்பதற்கு பாதுகாப்பான நேர அவகாசம் முடிந்துவிட்டதால். பாதுகாப்பு நலன் கருதி கணினி இன்னும் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டுவிட்டது. இனி நாளை மதியம் 12:00 மணிக்கு அப்புறம்தான் கணினியை உபயோகிக்க முடியும்!‘