கோவை பதிவர் சந்திப்பு - ஓரு நேரடிப் பார்வை…
பதிவை அச்செடு
கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக மஞ்சூரண்னன் என்னிடம் பேசியிருந்த அரட்டையை பார்த்தால் அதிலும் அவர் கோவை வந்தபின் எண் கொடுக்கின்றேன் என்று கூறியிருந்தும் இன்னமும் எண் கொடுக்கப்படவில்லையென்பதை உணர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஆபத்பாந்தனாக நம்ம வேந்தர் ஐயா அரட்டையில் வந்தார். உடனே அவரிடம் பிரச்சினையைக் கூறி அலைபேசி எண் கேட்க அவரும் மஞ்சூரண்ணனின் எண் கொடுத்துவிட்டு தொடர்புகொள்ளுங்கள் என்றார். தொடர்பு கொண்டால் அந்த எண்ணுக்கு அழைப்புகளே போகவில்லை. அதைக்கேட்ட அவர் மறுபடியும் தமிழ்பயணி சிவாவின் (சிவக்குமார்) அலைபேசி எண்ணைக் கொடுத்து முயன்றுபாருங்கள் என்று கூற நானும் அவசரத்தில் 98 என்று ஆரம்பித்த எண்ணில் 93 என்று ஆரம்பித்து அழைத்துவிட ஒரு பெண் எடுத்து ராங் நம்பர் என்று முகத்திலடித்தாற்போல கூறிவிட்டு வைத்துவிட்டார். ஒருவேளை அவருடைய மனைவி யாரேனும் எடுத்து கடுப்பில் பேசுகின்றார்களோ என்றுதான் முதலில் நினைத்தேன். :)))
இதென்னடா வம்பாபோச்சு என்று மறுபடியும் வேந்தரை அணுகினால் அவருக்கோ மிகவும் குழப்பம் இந்த எண்தானே கொடுத்தார் என்று அவருடனான அரட்டையை எனக்கு வழங்கினார் அதில் எண் பார்த்தபின்தான் நான் செய்த தவறு தெரிய வேந்தரிடம் விளக்கிவிட்டு எண்ணை சரிசெய்து அழைத்தால் இரண்டு மணியிலேயே எடுத்துவிட்டார் சிவா. விவரத்தைக் கூற அவரோ உடனே முகவரியை வழங்கி வாருங்கள் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நிம்மதியுடன் கோவைக்குப் பயணமான எனக்கு அங்கு சேர்ந்த இரண்டு மணி நேரத்திலேயே அலுவலகத்திலிருந்து அழைப்பு. மாலைக்குள் வந்து ஒரு அமெரிக்க வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் என்று. சரி, மதியத்திற்குள் சந்திப்புக்கு போய் ஒரு மணிநேரமாவது கலந்துகொள்ளுவோம் என்று ஆர்வமிகுதியில் என் பால்யகாலத்து நண்பர் திரு. விநோத் குமார் (இவர் பதிவர் இல்லை) அழைத்துக்கொண்டு எனது நிக்கான் கேமராவையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.கொடுக்கப்பட்ட அட்ரஸ் விசாரித்து செல்ல மிகவும் குழப்பமாகிவிட்டது. ஒரு ஆட்டோக்காரர் தவறான வழியை கொடுத்துவிட சிவாவைத் தொடர்பு கொண்டேன். சாந்தி மெடிக்கல்ஸ் எதிரிலேயே இருக்கிற ரோட்டில் வந்தால் சாமியானா போட்ட மாடி தெரிகிற வீடு என்றார். சரியென்று வைத்தபின்தான், சாந்தி மெடிக்கல்ஸ் எங்கே என்று தேட ஆரம்பித்து இன்னொரு ஆட்டோக்காரரை அணுக, அவர் பொறுமையுடன் தங்கம் தங்கம் என்று என்னை அழைத்துக்கொண்டே வழி கூறியது (கோவை மனிதர்களின் மரியாதையே மரியாதை) இதமாக இருந்தது. கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்து பைக்கை பார்க் செய்துவிட்டு பார்த்தால் கேட் மூடிக்கிடக்கிறது. மறுபடியும் சிவாவிற்கு அடிக்க அலைபேசியை எடுத்தால் ஏற்கனவே ஐயா மிஸ்டு கால் கொடுத்திருந்தார். அழைத்த உடனே மாடிப்படியில் தலைகாட்டிய முகத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. சிவாவா??? மாடியில் ஏறி வாங்கன்னு சொல்ல கேட்டைத் திறந்து பார்த்தபின்தான் அது பூட்டியிருக்கவில்லை என்பது என் சிறு புத்திக்குப் புரிந்தது. மேலே ஏறி வந்து பார்த்தால் ஏகப்பட்ட முகங்கள். மஞ்சூர் அண்ணன் மட்டும் சொல்லாமலேயே தெரிந்துவிட்டது. உத்வேகமாக பேசிக்கொண்டிருந்த வா. சுப்பையா (வாத்தியார் சுப்பையா) ஐயா அவர்களை கொஞ்சம் நிறுத்திவிட்டு என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்தார் அண்ணன். அப்புறம் சஞ்சய் வந்து என்னுடன் கைகுலுக்கிக்கொண்டார். என்னடா இந்தப் பெயர்களெல்லாம் முத்தமிழிலேயே இல்லையே என்று யோசித்தப்பின்தான் தெரிந்தது சந்திப்புக்கு வந்திருந்ததில் பெரும்பாலானோர் தமிழ் மணம் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பது. அடடா அந்தக் குழுவில் நான் இன்னமும் இணையவில்லையா என்று யோசித்து முதலில் இணைந்துவிடுவது என்று முடிவெடுத்தப்பின் உட்கார்ந்தேன். சட்டென்று வந்து வடையையும் குடிக்க குளிர்பானத்தையும் (மிராண்டான்னு நினைக்கின்றேன்) கொடுத்தார் மஞ்சூர் அண்ணன். காலையிலேயே தாமதமாக சாப்பிட்டது நினைவுக்கு வர, குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அப்படியே நண்பர் பக்கம் தள்ளிவிட்டேன். சுப்பையா அவர்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததை காதுகொடுத்து கேட்க ஆரம்பிக்க சிவா சுத்திச்சுத்தி வந்து புகைப்படங்களாக சுட்டுத்தள்ளுவதையும், சஞ்சயும் மற்றவர்களும் வீடியோக்களும் புகைப்படங்களுமாக அலைவதையும் பார்த்தபின்தான் நான் கேமரா கொண்டுவந்திருந்தது ஞாபகத்திற்கு வர, சிவாவை அழைத்து எனக்காக புகைப்படங்கள் எடுக்க சொல்ல, முகம் சுளிக்காமல் அன்போடு எடுத்துக்கொண்டு சென்று எல்லாரையும் சுற்றிச் சுற்றி எடுத்தவர் என்னிடம் வந்து கொடுத்துவிட்டு இதுல நானிருக்க மாட்டேன் நீங்க எடுங்க என்றபின் அவரையும் சஞ்சையையும் வைத்து ஒரு படம் எடுத்தேன் (கொஞ்சம் டார்க்காக வந்துவிட்டது மன்னிக்கவும்). அப்புறம் என் நண்பர் விநோத் குமார் எடுத்துக்கொண்டு வலம் வந்தார்.
இந்த அமளி துமளியில் கால்வாசி கேட்டதில் வாத்தியார் சுப்பையா ஐயா என்ன சொல்கின்றார் என்பதையே என்னால் முழுவதும் கவனித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் நீண்ட உரைக்குப்பின் விடைபெற்று போய்விட்டார். அதன்பின் இளைய தலைகள் நிறைய உள்ளே நுழைய ஆரம்பிக்க மஞ்சூரண்ணனை பார்த்து அறிமுகம் செய்துவிட்டு உரைகளை தொடங்கலாமே என்ற கேள்வியுடன் நான் பார்த்துக்கொண்டிருக்க என்னைப் பார்க்காத அவருக்கு எப்படியோ அதே எண்ணமே தோன்றி அறிமுகம் செய்துவிட்டு உரைகளை ஆரம்பிக்கலாம் என்று அறிவிக்க எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன்பின் ஒருவர்பின் ஒருவராக எல்லாரும் அறிமுகம் செய்துகொண்டார்கள். சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் விவரம் (சிவாவின் வலைப்பூவிலிருந்து சுட்டது):
- சஞ்சய்காந்தி
- மஞ்சூர் ராசா
- தமிழ்பயணி சிவா
- ஓசை செல்லா
- புரவி ராம்
- செம்மலர் தியாகு
- சுப்பைய்யா
- கோவை ரவி
- லதானந்த்
- கே.பி. குப்புசாமி
- வின்செண்ட்
- ஞானவெட்டியான்
- ஸ்ரீநிவாசன் பால் ஜோசப் (நான்!)
- வினோத் - பதிவர் இல்லை (எனது நண்பர்)
- வெயிலான்
- பரிசல்காரன்
- கார்த்திக்
- தொட்டராயஸ்வாமி
- வடகரை வேலன்
- கிரி
- கருவேல்பாண்டியன்
அதன்பின் ஒவ்வொருவராக உரையை ஆரம்பிக்க முதலில் பேசிய ஞானவெட்டியான் ஐயா என் கருத்தை மிகவும் கவர்ந்தார். நான் யோசித்த பல விஷயங்களை அவர் யோசித்தது மட்டுமின்றி அற்புதமாக தன் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணித்திருந்தது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவருடைய உரையில் பல நூல்கள் செத்துப்போவதைப் பற்றி பேசி அதைப் பற்றியெல்லாம் தாம் எழுதுவதாகவும் அற்புதமான வலைப்பூக்களை வைத்திருப்பதாகவும் சொல்ல அப்படிப்பட்ட வலைப்பூக்களும் செத்துவிடக்கூடாது என்று எனக்கு ஏற்பட்ட ஆசையில் ஐயாவின் மூச்சு வாங்கும் நேரம் நான் பேசி இடை வெட்டினேன். இருப்பினும் முகம் சுளிக்காமல் எனது கருத்துக்களை ஆழ்ந்து கேட்ட ஐயா, தனக்கு அவ்வளவாக தொழில்நுட்ப அறிவு இல்லாததால் செல்வாவையும் சிவாவையுமே நம்பி இருப்பதாக கூற, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்னாலியன்ற உதவிகளை செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய தமிழ் அமிழ்தம் (http://www.tamilamirtham.org/) விக்கிபீடியா முயற்சியைப் பற்றிக்கூற அதை ஆர்வத்துடன் கேட்டார் ஐயா. செல்வா தான் ஏற்கனவே விக்கிபீடியாவில் ஐந்து வருடம் அனுபவம் பெற்றிருப்பதாகவும் அதில் அனைவரும் மாற்றும் முறையை தவறாக உபயோகிப்பதையும் தமது கருத்துக்கள் வீணடிக்கப்படுவதோடு மட்டுமின்றி எடுத்ததெற்கெல்லாம் தமிழ்நாட்டைப் பற்றி அறியாதவர்கள் வந்து அவர் எழுதிய பதிவுகளை முடக்கிவிடுவதையும் குறிப்பிட்டார். அதற்குபதிலாக இந்த விக்கிபீடியாவை அவர்களைப் போன்றோர் நிர்வாகிக்காமல் நாமே நிர்வாகிக்கலாம் என்று நான் கூறியதில் கொஞ்சம் சமாதனமடைந்தார். உரை தொடர்ந்துகொண்டிருக்க இடையில் தியாகுவும் வந்து ஜோதியில் ஐக்கியமானார். அவருடைய அறிமுகத்திற்குப் பிறகு தடையில்லாமல் பேசி முடித்த ஐயாவின உரைக்குப் பிறகு நேரம் பார்த்த எனக்கு 2 மணிக்கு ரயில் டிக்கெட் மாற்றிவிட்டது ஞாபகம் வர, செல்ல வேண்டும் என்பதை சங்கடத்துடன் கூற மஞ்சூர் அண்ணா சட்டென்று லதானந்த் பேசி முடிக்கட்டும் போகலாம் என்று கூறிவிட சட்டென்று அமர்ந்துவிட்டேன்.
லதானந்த் தான் எவ்வளவு ஒரு திறந்த மனிதர் என்பதை எடுத்த எடுப்பிலேயே நிரூபித்துவிட்டார். போகப்போக அவருடைய பேச்சு முறையும் எதையும் திறந்த மனதுடன் பேசுவதும் அலசுவதும் சமுதாயத்தின் மேல் எந்த அக்கறையும் எனக்கில்லை பொழுதுபோக்குக்காகத்தான் எழுதுகின்றேன் என்றதும், நானொரு அரசாங்க ஊழியன், ஒரு அரசாங்க ஊழியன் எப்படியெல்லாம் இருப்பான் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அத்தனைக்கும் நான் பொருந்துவேன் என்றதும் ஆச்சரியமாக இருந்தது. சமுதாயத்தை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்தும் கவலையெல்லாம் தமக்கு இல்லை என்று சொன்னவர் தான் இயற்றிய சில படைப்புகளைப் பற்றி கூறியபோது அவருக்கிருந்த சமுதாய அக்கறையை மறைமுகமாக கூறிவிட்டார். அவரையும் அவருடைய மீசையையும் எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்து என்னை உரையாற்ற சொல்லி மஞ்சூரண்ணா கேட்க திகைத்துப்போய்விட்டேன். நானாவது உரையாற்றுவதாவது? எனக்கு அதெல்லாம் பழக்கமில்லண்ணா, என்று நான் அசடு வழிய சும்மா பேசுங்க என்று அவர் ஊக்கமளிக்க கூட சஞ்சய் மற்றும் சிவாவும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி என் உரையை உரையெல்லாம் இதுவரை நான் கொடுத்ததேயில்லை என்பதில் ஆரம்பித்து, முத்தமிழ் எப்படி என்னை கூகிள் குழுமங்களின் பக்கமும் தமிழின் பக்கமும் திருப்பியது என்பதை தொட்டு நான் முயன்றுகொண்டிருக்கும் தமிழ் அமிழ்தம் சேவை பற்றிய விவரங்களையும் கூறிக்கொண்டிருந்த நேரத்தில் வடகரை வேலன் ஒரு கேள்வி கேட்டார். நான் தொழில்நுட்பம் பற்றி பேசுவதால் கேட்பதாக கூறிய அவர், .TK இலவச டொமைன் சேவை பற்றி கேட்க ஏற்கனவே அதில் பல மோசமான அனுபவங்களை பெற்றிருந்த நான் அதை விளக்க சட்டென்று உள்நுழைந்த செல்வா, நானும் தொழில்நுட்பவாதிதான் ஆனால் நீங்கள் கூறிய மாதிரியெல்லா நாமே டொமைனை ஹோஸ்ட் செய்தால் ஆகாது என்று விவாதிக்க அதற்கு பதிலுறுக்க நான் பெயர் வழங்கு கணினிகளைப் பற்றி ஆரம்பிக்க கடைசியில் முடிந்த விவாதத்தில் அனைவருமே இத்தகைய இலவச சேவைகளை நாம் நம்பக்கூடாது என்பது வரை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உரை முடிந்ததும் கிளம்ப எழுந்த நான் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க, சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று அன்புக் கட்டளை இட்ட மஞ்சூரண்ணனிடம் என் நிலையை விளக்கி நான் மன்றாடிய எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பத்தாதென்று என்னுடன் சேர்ந்து பரிசல்காரன், வெயிலான், கார்த்திக், கிரி போன்றோரும் எழுந்திருக்க மஞ்சூர் அண்ணா இதெல்லாம் உங்களால்தான் என்று கூற வேறு வழியே இல்லாமல் போயிற்று. திரும்ப உட்கார்ந்த என்னிடம் வலைப்பூ முகவரியையும் தொடர்பு கொள்ளும் விவரங்களையும் பரிசல்காரணும், கார்திக்கும், லதானந்த் மற்றும் ஞானவெட்டியான் ஐயாவும் கேட்க அடடா ஆச்சரியமா இருக்கே என்று அகமகிழ்ந்து வழங்கிக்கொண்டிருந்தபோது சாப்பாடு வந்துவிட்டது. சரி, சாப்பிட முடியாவிடினும் பார்சல் எடுத்துக்கொள்கின்றேன் என்றபோதுதான் அதுவும் சாத்தியமாகும் வழியறியாமல் சாப்பிட்டுட்டே போங்க என்று தியாகு, நம்பிக்கை பாண்டியன் போன்றோரும் சேர்ந்து வற்புறுத்த வேறு வழியின்றி அவசரஅவசரமாக சாப்பிட மேஜைகளை அமைத்து சாப்பிட அமர்ந்தோம் அனைவரும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நம்பிக்கை பாண்டியன் நான் எழுதும் இழைகளை படிப்பேன் என்று கூறியதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகுவும் எங்களுடன் கலந்துகொள்ள அரட்டையுடன் சூடான தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம், வடை என்று அமர்க்களமாக சாப்பாடு இறங்கியது. உண்மையிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்ட நான் கூறியதை கடைசி வரை மஞ்சூரண்ணா நம்பவில்லை. சாப்பிடும்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சிவா அவர்களிடம் மறுபடியும் என் கேமராவைக் கொடுத்ததில் சில புகைப்படங்கள் சிக்கின. ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நான் கிளம்ப ஆரம்பித்து அனைவருடனும் அன்புடன் விடைபெற்றுக்கொண்டு கீழிறங்கி பைக்கில் ஏறியபோது மனம் முழுவதும் நிறைந்திருந்தது. கண்டிப்பாக சென்னை சந்திப்புக்கும் போவது என்று அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன். இது ஒரு இனிய அனுபவம். வீட்டில் வந்து புகைப்படங்களை அலசியபோதுதான் நண்பர் விநோத் குமார் மஞ்சூரண்ணா வீட்டு மாடியிலிருந்த பூக்களைக்கூட அழகாக படம்பிடித்திருந்தது தெரிந்தது. மொத்தமாக பிக்காஸாவில் இட்டு உங்களுக்காக கீழே இணைப்பும் கொடுத்துள்ளேன்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து தன்னுடைய வீட்டு மாடியிலேயே அமைத்து துணைவியார் மற்றும் துணைவியாரின் சகோதரி சகிதம் எல்லா ஏற்பாடுகளுடன் அருமையான சாப்பாட்டையும் வழங்கிய மஞ்சூர் அண்ணாவிற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். சிவாவும் சஞ்சையும் உழைத்த உழைப்பில் நிறைய அன்பு தெரிந்தது. எல்லாருடைய பெயரும் அவ்வளவாக என் நினைவில் வரமாட்டேன் என்கிறது. இருப்பினும் சந்திப்பு ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்ததில் எனக்கு மிகவும் திருப்தி. சென்னை சந்திப்பிலாவது முழுநேரமும் கலந்துகொள்ள முயலவேண்டும் என்று ஆசை கிளம்பிவிட்டது. அனைவருக்கும் நன்றி… நன்றி… நன்றி…
கோவை சந்திப்பில் என் கேமரா சுட்ட நிகழ்வுகள்: http://picasaweb.google.co.uk/sripauljoseph/MuththamizhKovai
ஸ்ரீ..
அன்று வந்தவர்களிலேயே நான் உங்கள் பேச்சைத்தான் ஆர்வமுடன் கேட்டேன். மிகவும் இன்ஃபர்மேட்டிவாகப் பேசினீர்!
அதுமட்டுமின்றி, கேட்டவர்களுக்கெல்லாம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கணினி தொடர்பான என்ன விளக்கம் தேவையென்றாலும் அழையுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் சலிக்காமல் சொன்ன உங்கள் அன்பைப் பார்த்து வியந்தேன்!
அதைவிட முக்கியமாக, “இது எஸ்.டீ.டி.நம்பர். நீங்க மிஸ்டு கால் விடுங்க நான் கூப்டறேன்” என்ற பண்பை அன்று என் சில நண்பர்களிடத்தில் சொல்லி மகிழ்ந்தேன்!
என்ன சொல்ல… என் அன்பைத் தவிர!
மிக்க நன்றி பரிசல்காரரே…
பரிசல்காரன் உங்கள் பெயரை மாற்றி எழுதி, ஏகப்பட்ட ஜோசப் எழுதிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
ஆனால், உங்கள் பெயர் ஸ்ரீநிவாசன் பால் ஜோசப் என்பது சிவாவின் வலைப்பதிவு மூலம் முடிவுக்கு வந்தது.
சந்திப்பின் நிகழ்வுகளை நன்றாக உள்வாங்கி அருமையான எழுத்தாக்கியிருக்கிறீர்கள் ஸ்ரீ.
சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி!!!!!!
நன்றி வெயிலான்…
உங்களை சந்தித்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி…
பரிசல்காரர் செய்த சிறு திருத்தத்தால் எவ்வளவு பால்ராஜுகள், ஜோசப்புகள் பதிவர்களாக இருக்கின்றார்கள் என்று நானும் தெரிந்துகொண்டேன். ஒரு விதத்தில் அவருக்கு நான் நன்றிதான் கூறவேண்டும்.
அன்புக்கு நன்றி.
தொல்லைகள் பின்வரும்……
கோவை பதிவாளர் சநதிப்புபற்றி வித்தியாசமானமுறையில்” ஒரு ஆட்டோ கிராப்’போல் 35 படத் தொகுப்புடன் அருமை. பாரட்டுக்கள்.
தி.விஜய்
please visit my blog
http://pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
நன்றி தி. விஜய்…
ஸ்ரீ,(பின்புறம் உள்ள) கறுப்பு வர்ணத்தை மாற்றிவிடுங்களேன் படித்தபின் கண்களை என்னவோ செய்கிறது!
பின்னூட்டத்தில் உள்ள எழுத்துகள் சரியாக படிக்க இயலவில்லையே?
உங்களின் ‘தமிழமுதம்’ நன்றாக இருக்கிறது ஸ்ரீ!
நன்றி மீனா,
இப்போது தளத்தின் அமைப்பை மாற்றிவிட்டேன். இது உங்களுக்கு பிடித்திருக்கின்றதா?
எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதுதானே முக்கியம்???
நன்றி…