மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு
பதிவை அச்செடு
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: முன்னோட்டம்…
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்று
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு
- மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு
பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
சிவசங்கரின் தொலைபேசி அழைப்பை ஏற்று விரைந்து வந்த நந்தினி கண்ணெதிரே விரிந்த காட்சியைக் கண்டு ‘ஆ’வென அலற வாயைத் திறக்க லூயி பாய்ந்து அவளின் வாயைப் பொத்தினான்.
சிவசங்கர் வேர்த்துவழிந்துகொண்டு நின்றுகொண்டிருக்க அவருக்கு முன்னால் இரண்டு பக்கங்களிலும் கைகளில் அதிநவீன இயந்திரத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருந்த நெல்சனும் நிக்கோலசும் தெரிந்தார்கள். லிண்டா நான்கு பேருக்கும் நடுவில் மையமாக நின்றுகொண்டிருந்தாள்.
நந்தினிக்கு ஒன்றுமே புரியவில்லை. இது என்ன இவர்கள் தென்னாப்ரிக்கத் தூதரகத்திலிருந்து வந்தவர்கள் இல்லையா? கையில் இயந்திரத் துப்பாக்கியெல்லாம் வைத்திருக்கின்றார்களே. நல்லவேளை சிவசங்கருக்கு ஒன்றும் ஆகவில்லை. என்ன வேண்டும் இவர்களுக்கு?
நந்தினியின் நிலையைப் பார்த்த சிவசங்கருக்கு இதுவரை இருந்த தைரியம் எல்லாம் போய்விட்டது. எப்படி லிண்டாவிற்கு நந்தினியைப் பற்றி தெரிந்தது? ஒரு வேளை இங்கே வருவதற்கு முன்னால் இன்சாக்ரிப்டில் வேலை செய்யும் குழு விவரம் முழுவதும் தெரிந்துகொண்டுதான் வந்தாளா? இவ்வளவு விஷயங்கள் லிண்டாவிற்கு எப்படி துல்லியமாகத் தெரியும்? நமது அலுவலகத்திலேயே யாராவது புல்லுருவிகள் இருப்பார்களோ? சே சே அப்படியெல்லாம் இருக்காது. ஆனால் இவ்வளவு துல்லியமாக விஷயங்களை கூறிய லிண்டாவிற்கு ருத்ரனைப் பற்றியோ அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றியோ தெரியவில்லையே? அது இரண்டும் தெரிந்திருந்தால் இவர்கள் என்னை தொலைபேசிக்கு அருகிலேயே போக விட்டிருக்க மாட்டார்களே? ருத்ரனின் பாதுகாப்பு ஏற்பாடு உண்மையிலேயே புத்திசாலித்தனமான ஏற்பாடுதான். முத்துவேல் இதற்குள் ருத்ரனுக்கு போன் செய்திருப்பாரா? ருத்ரன் எங்கே இருக்கின்றார் என்றே தெரியவில்லையே? நந்தினிக்கு ஏதேனும் ஆவதற்குள் ருத்ரன் வந்து சேர வேண்டும் இறைவா. எனக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை, நான் வாழ்ந்து கெட்டவன். ஆனால் நந்தினி? வாழ வேண்டிய பெண், புத்தம் புதிதாய் பூத்த ரோஜா, அதற்குள் அதைப் பறித்துப் புழுதியில் வீசிவிடுவார்களோ? அவளைக் காட்டி பயமுறுத்தினால் என் கதி என்ன? வேறு வழியின்றி நாட்டைவிட நந்தினிதான் பெரிது என்று இன்சாக்ரிப்ட் பற்றிக்கூறிவிடுவேனோ? ஐயோ, அது நாட்டிற்கு இழைக்கும் துரோகமல்லவா? பெற்ற தாய்க்கு துரோகமிழைப்பதா? நான்கு நல்லவர்கள் வீழ்ந்தாலும் வாழ்வது நாடாக அல்லவா இருக்க வேண்டும்? என்னைக் கொன்றாலும் பரவாயில்லை, இன்சாக்ரிப்ட் பற்றி எதுவும் மூச்சுவிடக்கூடாது. நந்தினியை மட்டும் எப்படியேனும் காப்பாற்றிவிடு இறைவா. ருத்ரன் சீக்கிரம் வரவேண்டும்.
நந்தினியின் வாயைப் பொத்திக்கொண்டிருந்த லூயியைப் பார்த்து லிண்டா கண்ணசைக்க அவன் மெதுவாக தன் கைகளை எடுத்தான். அதிர்ச்சியிலிருந்த நந்தினிக்கு அலற வேண்டும் என்று தோன்றிய எண்ணமே மறந்துவிட்டது.
“நந்தினி, உன்னை மறுபடியும் பார்ப்பதில் சந்தோஷம். எங்களுக்கு உன் உதவி கொஞ்சம் தேவை.”
“லிண்டா, இதெல்லாம் என்ன? நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு வேண்டியது என்ன? எதற்காக எங்களின் நிறுவனத்திற்கு இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்திருக்கின்றீர்கள்?”
“ஒவ்வொன்றாக கேள் நந்தினி. நாங்கள் யார் என்பது இப்போது முக்கியமல்ல. நாங்கள் வந்ததின் நோக்கம் ஒழுங்கான வழியில் இன்சாக்ரிப்ட் பற்றித் தெரிந்துகொள்வது. ஆனால் அதற்கு சிவசங்கர் உடன்படாததால் உன்னை இங்கே அழைத்துவர வேண்டியதாயிற்று.”
“இரண்டு நாட்டு ஜனாதிபதிகளின் ஆணை இருந்தால் சிவசங்கர் எப்போதோ இன்சாக்ரிப்ட் பற்றிக் கூறியிருப்பாரே? துப்பாக்கி முனையில் கேள்வி எதற்கு?”
“நான்தான் சொன்னேனே நந்தினி, ஒழுங்கான வழியில் இன்சாக்ரிப்ட் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் முயன்றோம். இரண்டு நாட்டு ஜனாதிபதிகளின் ஆணைகளை வாங்க எங்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. என்ன இருந்தாலும் சிவசங்கர் ரொம்பத்தான் அடம் பிடிக்கின்றார். நீயாவது ஒழுங்காக உதவி செய்வாய் என்று உன்னை அழைத்துவரச் சொன்னேன்.”
“லிண்டா, நீ எவ்வளவு பெரிய தவறை செய்துகொண்டிருக்கின்றாய் என்று புரிந்துதான் பேசுகின்றாயா? இரண்டு நாட்டு ஜனாதிபதிகளின் ஆணைகள் இல்லாமல் பெற முடியாத ஒரு விஷயத்தை இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பெற நினைப்பது அறிவில்லாத செயலாக தெரியவில்லை? இது தெரிந்தால் இரண்டு நாடுகளும் உங்களை சும்மா விடுமா? தென்னாப்ரிக்க தூதரகம் அல்லவா மிகவும் பாதிக்கப்படும்?”
“நந்தினி, முதலில் உனக்கு ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். நாங்கள் ஐந்து பேருமே தென்னாப்ரிக்கத் தூதரகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்கள் யார் என்பதை சொல்லிக்கொண்டிருக்க நாங்கள் இங்கே வரவில்லை. இதனால் தென்னாப்ரிக்க நாட்டுக்கும் தூதரகத்திற்கும் பாதிப்பு வந்தால் அதை நாங்கள் இன்னமும் வரவேற்போம். ஆனால் அதற்கெல்லாம் முன்னர் எங்களுக்கு இன்சாக்ரிப்ட் பற்றித் தெரிய வேண்டும். அதைத் தெரிந்த ஒரே ஆள் இந்த சிவசங்கர்தான். ஆனால் அவர் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கின்றார். அதனால்தான் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த வேண்டியதாயிற்று.”
இதுவரை பேசாமல் இருந்த சிவசங்கர் பேச்சை வளர்க்க வேண்டுமே என்று வாய் திறந்தார்.
“நீங்கள் தென்னாப்ரிக்க தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனில் எப்படி தென்னாப்ரிக்க தூதரகத்தின் ஹை கமிஷனர் உங்களுக்கு நம்பிக்கை உத்திரவுக் கடிதம் கொடுத்தார்?”
“அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் பட வேண்டாம் சிவசங்கர். இனி என்ன நடக்கும் என்பதைப் பற்றி மட்டும் கவலைப்படுங்கள். உங்களுக்கெல்லாம் சுயவிளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வரவில்லை. நந்தினி, நீ எங்களுக்கு செய்ய வேண்டிய உதவியெல்லாம் இதுதான். உன்னுடைய அலுவலக நண்பர்கள் அனைவரையும் சத்தம் போடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு மட்டுமின்றி இந்த நிமிஷம் முதல் உங்கள் நிறுவனத்தின் முழு இயக்கமும் எங்களின் கைகளில் வந்துவிட்டது என்பதையும் புரியும்படி தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி உங்களில் எவரும் வெளி உலகத்திற்கு எந்தவிதமான தொடர்பும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் எது மீறப்பட்டாலும் முதலில் இங்கே இருக்கும் சிவசங்கர் கொல்லப் படுவார். அதுமட்டுமின்றி மீறியவர்களும் தயவு தாட்சண்யமின்றி கொல்லப் படுவார்கள். புரிந்ததா?”
“லிண்டா, இதெல்லாம் எதற்காக? எங்கள் அத்தனை பேரையும் பணயக்கைதிகள் போல பிடித்து வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சாதிக்க போகின்றீர்கள்? எங்களின் நாட்டு அரசாங்கத்திடம் எதையும் நீங்கள் கேட்க முடியாது…”
“அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம் சிவசங்கர். அது மட்டுமின்றி உங்கள் நாட்டு அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் இங்கே வரவில்லை. நந்தினி சொன்னதை செய்…”
நந்தினி மெதுவாக தலையை ஆட்டிவிட்டு மெளனமாக வெளியேற அவளின் பின்னாலேயே தொடர்ந்தான் நெல்சன். அவனின் கைகளிலிருந்த பைசன் கன்கள் பசியுடன் அவளை முறைத்துப் பார்த்தன.
வெளியே சென்ற நந்தினியைப் பார்த்துக்கொண்டிருந்த சிவசங்கருக்கு போன மூச்சு திரும்ப வந்தது போலிருந்தது. அப்படியென்றால் நந்தினிக்கும் இன்சாக்ரிப்ட்டுக்கும் இருக்கும் நெருக்கமான தொடர்பு இவர்களுக்குத் தெரியவில்லையா? அற்புதம்! வேர்த்து வழிந்துகொண்டிருந்த சிவசங்கரின் வியர்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய அவர் நிதானத்திற்கு வந்தார். இவ்வளவு விஷயங்களை புட்டுப்புட்டு வைத்த லிண்டாவுக்கு ருத்ரனைப் பற்றியும் தெரியவில்லை நந்தினிதான் இன்சாக்ரிப்ட் உருவாக்க குழுவின் மேலாண்மையாளினி என்பதும் தெரியவில்லை என்பது எவ்வளவு நல்லதாகப் போயிற்று? எல்லாம் அந்த ஆலவாயன் அருளே. இவர்கள் எத்தனை பேரை பணயமாக வைத்தாலும் வேண்டியதை சாதிக்க முடியாது. இன்சாக்ரிப்ட் என்பது ஒரு சிறந்த சிலந்தி வலை அதைப் பிரிப்பது என்பது முடியாத காரியம். இரண்டு நாடுகளின் கனவு, அது மெய்ப்பட வேண்டும்.
“என்ன சிவசங்கர் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டது போல இருக்கின்றதா? அதற்குள் முடிவு செய்துவிடாதீர்கள். இனிமேல்தான் எங்களின் வேலையே இருக்கின்றது. உங்களின் மேலாளர் டேவிட் பிரசாத்திற்கு போன் செய்து உடனே இங்கே வரச்சொல்லுங்கள்.”
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் எனக்கு கவலை இல்லை என்று நினைத்துக்கொண்ட சிவசங்கர் நடுங்காத கைகளால் தொலைபேசியை எடுத்து டேவிட் பிரசாத்தின் நான்கு இலக்க இணைப்பு எண்களை அழுத்த உடனே எதிர்முனையில் ரிங் அடித்து இரண்டு ரிங்கிலேயே எடுக்கப்பட்டுவிட்டது.
“ஹலோ, டேவிட்?”
“ஹாய் சிவா, என்ன விஷயம்?”
“நீ கொஞ்சம் என்னுடைய அறைக்கு வந்து போக முடியுமா?”
“என்னடா? ஏதாவது பிரச்சினையா? எப்பவும் முக்கியமான காரணமில்லாம உன்னோட அறைக்கு கூப்பிடமாட்டியே?”
“முக்கியமான காரணம்தான் டேவிட். கொஞ்சம் சீக்கிரம் வருகிறாயா?”
“சரி, இதோ புறப்பட்டேன்…”
மறுமுனையில் டேவிட் பிரசாத் இணைப்பை துண்டித்துவிட, நிதானமாக தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் சிவசங்கர். எப்படியும் ருத்ரன் வருவதற்குள் லிண்டாவை திசைமாற்றி வைத்திருந்தால் போதும். லிண்டாவும் அமைதியாக எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார அவளைத் தொடர்ந்து லூயியும் பிலிப்ஸும் உட்கார்ந்தனர். நிக்கோலஸ் மட்டும் கடமை தவறாதவன் போல கன்னை குறிவைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். நிமிடங்கள் நொடிகளாக கழிய கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“எஸ்… கம் இன்.”
“டேய் சிவா, என்ன நடக்குது இங்கே, வெளியே நந்தினிக்குப் பின்னால யாரோ ஒரு வெள்ளைக்காரன் மெஷின் கன்னோட நிற்கின்றான். மொத்த தளமே அமைதியா இருக்காங்க…”
பேசிக்கொண்டே உள்ளே நுழைந்த டேவிட் பிரசாத்தின் கண்களுக்கு முன் லிண்டாவும் அவளைச் சுற்றி இருந்த மூன்று பேரும் தெரிய வாயடைத்து நின்றுவிட்டார்.
“இங்கே என்ன நடக்குது சிவா? யாரு இவங்கெல்லாம்?”
“அமைதியா உட்கார் டேவிட். லிண்டா, நீ கேட்ட மாதிரியே நான் டேவிட்டை இங்கே கொண்டு வந்தாயிற்று. இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
“ஹாய் டேவிட். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்கள் நிறுவனத்தின் இன்சாக்ரிப்ட் மென்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கின்றோம்…”
லிண்டா ஆரம்பித்து முழு விவரங்களையும் சொல்லிக்கொண்டே வரவர டேவிட் பிரசாத்தின் நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க ஆரம்பித்தன. சிவசங்கர் மெளனமாக ரிமோட்டின் மூலம் குளிர் காற்றுப் பெட்டியின் அளவை அதிகமாக்கினார். வாய் உலர்ந்துவிட்ட டேவிட் பிரசாத் நாக்கால் உதடுகளை நீவிவிட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
“லிண்டா, இதெல்லாம் சட்டத்திற்கு புறம்பானது. நீங்கள் தீவிரவாதிகளா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் இப்படி குறுக்கு வழியில் நீங்கள் நினைத்ததை சாதிக்க நினைப்பது உங்களுக்கே ஆபத்தாகத்தான் முடியுமே தவிர உங்களுக்கு இங்கே ஒன்றும் கிடைக்காது.”
“அதையும்தான் பார்த்துவிடுவோமே. சிவசங்கர், நீங்கள் கொஞ்சம் உங்களின் இரகசிய அறையைத் திறக்கின்றீர்களா?”
“லிண்டா, உனக்கு ஒரு அடிப்படை உண்மை புரியவில்லை. நான் இரகசிய அறையைத் திறந்து உனக்கு மைய வழங்கு கணினியின் முகப்பை அளித்தாலும் இன்சாக்ரிப்டைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நீ அங்கே ஒன்றும் செய்ய முடியாது.”
“அதற்குத்தான் எல்லாம் தெரிந்த நீங்கள் இருக்கின்றீர்களே சிவசங்கர்? நான் எதற்கு கவலைப்பட வேண்டும்?”
“லிண்டா, நீ நினைப்பது போல அது அவ்வளவு சுலபம் அல்ல. நான் உனக்கு இணைப்பு மட்டும்தான் வழங்குவேன், இன்சாக்ரிப்ட் பற்றிய எந்த விவரத்தையும் உனக்கு வழங்க நான் தயாரில்லை. என் உயிரே போனாலும் சரிதான்.”
“ம்… அப்படியா, அதைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களின் இரகசிய அறையை இப்போது திறக்கின்றீர்களா?”
மெளனமாக எழுந்த சிவசங்கர் டேவிட்டைப் பார்த்து தலையை அசைக்க, டேவிட்டும் எழுந்து சிவசங்கரை பின்தொடர்ந்தார்.
சிவசங்கரின் இருக்கைக்குப் பின்னாலிருந்த பெரிய ஓவியத்தில் தவமிருந்தக் கோலத்தில் சிவபெருமான் கண்களை மூடி புன்னகைத்துக்கொண்டிருந்தார். அந்த ஓவியத்தை அணுகிய சிவசங்கர் சிவனின் இரண்டு கைகளும் யோக முறையில் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தன்னுடைய கைகளை கொண்டு சென்று வைத்தார். அதே நேரம் டேவிட் பிரசாத் தன்னுடைய கையை எடுத்துச்சென்று சிவனுக்குப் பக்கத்திலிருந்த லிங்கத்தின் தலையில் வைத்தார். பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சிவனின் கைகளையும் தலையையும் பற்றியது போன்ற ஒரு தோற்றமளித்த இரண்டு வினாடிகளுக்குள் சிறு பீப் சத்தம் கேட்க சிவனின் ஓவியம் பின்னுக்குள் இழுக்கப்பட்டு தடிமனாக இருந்த சுவற்றின் நடுவில் இடது பக்கமாக மெல்ல புதைந்துகொண்டது. ஒரு ஆள் நுழையுமளவிற்கான திறப்பு தெரிய, சிவசங்கர் உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் பிரசாத், லிண்டா, லூயி, பிலிப்ஸ் மற்றும் நிக்கோலஸ் நுழைந்தனர்.
உள்ளே உறுதியான கண்ணாடியினாலான ஒரு அறை தெரிய, அறையினுள்ளே பெரும் அளவை அடைத்துக்கொண்டு வீற்றிருந்த பெரிய கணினியும் அதை இயக்க ஒரேயொரு சிறிய திரையும் பக்கத்திலேயே சுட்டியைக் கொண்டு தெரிந்தது. ஆனால் அந்தக் கணினியை அடையும் கண்ணாடி அறையின் வாயிலில் ஒரு செவ்வக கட்டம் வைக்கப்பட்டிருக்க அதனுடைய தலையில் சிறிய வட்டவடிவ திறப்பு ஒன்று திறந்தது அந்தத் திறப்பின் வழியே ஒரு லென்சு போன்ற அமைப்பு தோன்றியது.
சிவசங்கர் கொஞ்சம் தயக்கத்துடன் அதை நெருங்கி வட்டவடிவ திறப்பில் தன்னுடைய வலது கண்ணை வைக்க சிறிது நேரத்தில் ஒரு சிறிய பீப் கேட்டவுடன் கண்ணாடிக் கதவு திறந்தது. உள்ளே இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய அளவு இடமிருக்க, லிண்டாவும் சிவசங்கரும் மட்டும் உள்ளே பிரவேசித்தனர். டேவிட் பிரசாத் பின்தங்கிவிட அவருக்குப் பின்னால் நிக்கோலஸும் அவருக்கு இரண்டு பக்கங்களில் லூயியும் பிலிப்ஸும் நின்றுகொண்டனர்.
லிண்டா ஒரு புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டே சிவசங்கரைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.
“சிவசங்கர், முதலில் உங்களின் கணக்கை கொடுத்து இந்தக் கணினியைத் திறந்துவிடுங்கள். மீதியை நான் பார்த்துக்கொள்கின்றேன்.”
“என்ன நீ பார்த்துக்கொள்கின்றாயா? அப்படியென்றால் இந்தக் கணினியை இயக்கும் முறை உனக்குத் தெரியுமா என்ன?”
“தெரியாது. ஆனால் ஒரு வழி இருக்கின்றது. நீங்கள் முதலில் கணக்கைக் கொடுத்து திறந்துவிடுங்கள். அப்புறம் நான் என்ன செய்கின்றேன் என்று நீங்கள் பார்க்கலாம்.”
ஒன்றும் புரியாமல் விழித்த சிவசங்கர் மெளனமாக கன்ட்ரோல் ஆல்ட் மற்றும் டெலிட் பட்டன்களை அழுத்த திரையில் இதுவரை தெரிந்த திரைப்பாதுகாப்புத் தோற்றம் மறைந்து ஒரு சிறிய சட்டம் வந்தது. அதில் தன்னுடைய பெயரையும் ஒரு நீண்ட நுழைவுச்சொல்லையும் சிவசங்கர் தட்டச்சிட்டுப் பின் நுழைவுப் பொத்தானை அழுத்த, சட்டம் மறைந்து விண்டோஸ் 2003 வழங்கு கணினிகளுக்கான இயங்குதளத்தின் திரை காண்பிக்கப்பட்டது. டெஸ்க்டாப்பில் எந்தவொரு ஐகான்களும் இல்லாமல் நிர்மூலமாக இருக்க இடது பக்க ஓரத்தில் பச்சை நிறத்தில் தெரிந்த ‘தொடங்கு’ பொத்தானுக்கு மேல் ஒரு சிறிய செய்தி வந்து இங்கே அழுத்து என்று கட்டளையிட்டது.
லிண்டா ஆர்வமாக சுட்டியை எடுத்து அந்தப் பொத்தானில் வைத்து சொடுக்க, சட்டென்று திரை இருண்டது. இருண்ட திரைக்கு நடுவில் திடீரென்று ஒரு வெள்ளை கட்டம் தோன்ற அதில் ஒரு பெரிய பூட்டின் படம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் பெரிய சிவப்பு எழுத்துக்களில் ஒரு எச்சரிக்கை செய்தி பளிச்சென்று தெரிந்தது…
‘நீங்கள் இந்தக் கணினியை மேலும் உபயோகிக்க வேண்டுமென்றால் உயர் மேலாண்மையாளரின் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். மூன்று முறைகளுக்கு மேல் தவறான ரேகையைப் பதிவு செய்தால் இன்று முழுவதற்கும் திரும்பவும் உபயோகப்படுத்த முடியாத படி கணினி பூட்டப்பட்டுவிடும். எனவே கவனமாக பதிவு செய்யவும்!’
“இதென்ன சிவசங்கர், இப்படி ஒரு பாதுகாப்பு முட்டாள்தனமாக இருக்கின்றதே? உங்களின் கைரேகை இல்லாமல் இந்த அறைக்குள்ளேயே நுழைய முடியாதே?”
“லிண்டா, நீ புரியாமல் பேசுகின்றாய். இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடே கிடையாது. இது எப்படி என்று எனக்கு புரியவில்லை.”
“என்ன சொல்கின்றீர்கள்? எங்கே உங்களின் விரலை வையுங்கள் பார்ப்போம்!”
சிவசங்கர் தன்னுடைய விரலை பக்கத்திலிருந்த ஒரு சிறிய செவ்வக பெட்டியில் தேய்க்க கணினி பீப் பீப் என்று அலறி தவறான ரேகை என்றது. குழப்பமடைந்த லிண்டா டேவிட்டை அழைக்க அவரும் வந்து விரலை தேய்த்தார். கணினி மறுபடியும் தவறான ரேகை என்று முன்பைவிட அதிக சத்தத்துடன் பீப் பீப் என்று அலற ஆரம்பித்தது. கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கை திரையில் பெரியதாக விரிய ஆரம்பிக்க முதல் முறையாக லிண்டாவிற்கு வேர்க்க ஆரம்பித்தது.
உங்களின் கருத்துக்களை வழங்கவும்