மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: முன்னோட்டம்…
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்று
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு
- மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு
திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்து வேல், பெயருக்கு ஏற்ப திருமணம் ஆனபிறகும் பிற பெண்களின் மேல் காதல் கொள்பவர் என்பதை அவருடைய வயதுக்கு மீறிய அலங்காரங்கள் கூறியது. வயது ஒரு நாப்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் தோற்றத்தில் இருபது வயது இளமையைக் காட்ட மிகவும் கஷ்டப்பட்டிருந்தார். தாடையிலும் உதட்டுக்கு மேலும் ஒரு முடிகூட தெரியாத அளவு மழுங்க சவரம் செய்திருந்ததோடு மட்டுமின்றி கண்ணாடி போட வேண்டிய கண்களுக்கு சிரமமிருந்தாலும் பரவாயில்லை என்று கான்டாக்ட் லென்ஸ் போட்டிருந்தார். ரொம்ப காலமாக உபயோகித்துக்கொண்டிருந்த பேர் அன்ட் லவ்லி க்ரீமை விட்டுவிட்டு விளம்பரத்தில் காட்டியபடி ஆண்களுக்கு என்று பிறந்திருந்த பேர் அன்ட் ஹேன்சம் க்ரீமை தடவ ஆரம்பித்திருந்ததால் முகம் கொஞ்சம் அரிப்பை உணர்ந்தாலும் கொஞ்சம் வெளிர் நிறம் வந்ததென்னவோ உண்மை. இது போதாதென்று பெண்கள் உடனே வந்து விழுந்து மையல் கொள்வார்கள் என்று விளம்பரத்தில் காட்டியதை நம்பி ஜவ்வாது பூசிக்கொண்டிருந்ததை நிறுத்தி ஆக்ஸ் பாடி ஸ்ப்ரே அடிக்க ஆரம்பித்திருக்கின்றார். உண்மையில் அது அடித்தபின்தான் பெண்கள் கிட்டேயே நெருங்க மறுக்கிறார்கள் என்பது இன்னமும் அவருடைய சிறு மூளைக்கு புரியவில்லை. உயர்ரக டை அணிந்திருந்த விதமும் ஜான் பிளேயர்ஸ் சட்டையும் இவருடைய சம்பளம் தேவைக்கு மீறி இருப்பதை பறைசாற்றியது. ஒழுங்காக கால்சட்டைக்கு உள்ளே விட்டிருந்த சட்டையால் தனது சிறிய தொப்பையை மறைக்க மிகவும் சிரமப்பட்டு வயிற்றுக்கு மேல் பெல்ட் அணிந்திருந்தார். கைகளில் மின்னிய தங்க முலாமிட்ட டைட்டன் கைக்கெடிகாரமும் இன்னொரு கையிலிருந்த தங்க பிரேஸ்லெட்டும் அவருடைய வசதியை பறைசாற்றிக்கொண்டிருக்க சட்டைப் பையிலிருந்து ஒரு தங்க முலாமிட்ட சிகரெட் பெட்டியை எடுத்து அதிலிருந்து தங்க நிறத்தில் தகதகத்த ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 கிளாசிக்கை எடுத்தார். அலுவலகத்தில் புகை பிடிக்கக்கூடாது என்ற தடை இருப்பது புத்திக்கு எட்டியது.
ஆனால், இப்போது வேறு வழியில்லை. அவர் நிறைய யோசிக்க வேண்டியிருக்கின்றது. சிகரெட் புகைக்காமல் யோசித்தால் அவருடைய சிறு புத்தி வேலை செய்யாது என்பது அவருக்குத் தெரியும். ரிமோட்டை எடுத்து குளிர்காற்றுப் பெட்டியை நோக்கி அழுத்த அது தன் வாயை மூடிக்கொண்டது. எழுந்து தன் பின்புறமிருந்த கண்ணாடி ஜன்னலின் உள் பூட்டைத் திறந்து வெளியே திறந்து விட வெப்பமான காற்று உள்ளே வந்தது. இந்த சென்னை எப்போதுமே இப்படித்தான், காற்றில் வெப்பம் இருப்பது மட்டுமின்றி குறிர்காற்றுப் பெட்டியில்லை என்றால் வீட்டின் சுவர்களிலும் வெப்பம் வந்துவிடும். எப்போதுதான் என்னை பெங்களூர் கிளைக்கு மாறுதல் செய்வார்களோ? அங்கே இவ்வளவு வெப்பம் இல்லை என்பதோடு அழகான பெண்களும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆமாம், என்ன பெரிய அழகு? நந்தினியிடம் இல்லாததா? இங்கும்தான் பெங்களூரில் இருப்பதுபோல முக்கால் உடைகளுடன் இலவச தரிசனம் தரும் தேவதைகளும் இருக்கின்றார்கள். ஆனால் முயன்றால் சுலபத்தில் கிடைத்துவிடும் அவர்களின் அழகைவிட அவ்வளவு எளிதில் கிடைக்காத அதே சமயம் அங்கங்களின் அளவுகளைக்கூட ஊகித்துப்பார்க்கமுடியாத கலாச்சாரத்தோடு இருக்கும் நந்தினியின் அழகு மிகப் பெரியது. இந்தியக் கலாச்சாரம்தான் அதிக மக்கள் தொகைக்கு காரணம். இவ்வளவு எளிமையான உடைகளிலேயே அழகை வெளிப்படுத்த முடியும் உணர்வுகளைத் தூண்ட முடியும் என்று நிரூபித்திருக்கின்றதே? வெளிநாட்டவரும்தான் எவ்வளவோ உடைகளை குறைத்து அழகை மிகைப்படுத்த முயல்கின்றனர் ஆனால் அவர்களைப் பார்த்தால் உரித்த கோழிதான் ஞாபகத்திற்கு வருகிறதே தவிர உணர்ச்சி வர மாட்டேன் என்கிறது. எல்லாம் சரி, அழகை பார்ப்பவன் பர்தா அணிந்தாலும் பார்ப்பான் சுரிதார் அணிந்தாலும் பார்ப்பான். எங்களை குறை கூறக்கூடாது, அழகை படைத்தும் அதை எங்களுக்கு மனைவியாக்காதது இறைவன் குற்றம். அது சரி, மனைவியாக ஆக்கிவிட்டால் மட்டும் விட்டுவிடுவோமா? பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் இல்லையா? ஆனால் இந்தக் கலாச்சாரத்தையும் அதை உயிரென போற்றும் நந்தினி போன்ற பெண்களையும் ஏன்தான் படைக்கின்றாரோ? வாழ்க்கை அனுபவிப்பதற்குத்தானே?
நந்தினியைப் பற்றி நினைத்ததுமே சிகரெட் ஞாபகம் வர, அதைத் தன் வாயில் வைத்து சிகரெட் லைட்டரை எடுத்து கொளுத்திக்கொண்டார். எங்கோ படித்த, ‘முட்டாள்கள் தங்களுக்கே வைத்துக்கொள்ளும் கொள்ளி சிகரெட்டின் முனையிலிருக்கும் நெருப்பு’ என்ற புகைபிடிப்பதற்கு எதிரான விளம்பரம் ஞாபகம் வர லேசாக சிரிப்பு வந்தது. சிகரெட் பிடிப்பவனெல்லாம் சாகவேண்டும் என்றால் இன்று உலகில் பாதி மக்கள்தொகை இருக்காது.
சரி, நந்தினியைப் பற்றி அப்புறம் நினைக்கலாம், கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக்கொண்டு போகப்போகின்றது? எப்படியும் பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கு முன் அவளை ருசித்துவிடலாம். கையிலிருக்கும் பிரச்சினையைப் பற்றி யோசிக்கலாம். இவ்வளவு நேரம் தாமதித்தாயிற்று இனிமேல் தாமதித்தால் நாளை மேலாளர்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
ஒழுங்காக இன்றும் நந்தினியை அங்குலம் அங்குலமாக இரசிக்கலாம் என்று திட்டம் போட்டு கூப்பிடாத கிளையன்டை சாக்காக வைத்து ஏற்கனவே பார்த்துவிட்ட கோப்பை எடுத்துவரச் சொல்லி ஒரு மணிநேரமாவது மொக்கை போட்டுக்கொண்டிருந்திருப்பேன். அதைக் கெடுக்கும்படியா வரவேண்டும் அந்த எச்சரிக்கை அழைப்பு மணி? அது வந்து சில நொடிகளில் நந்தினி கதவைத் தட்டிவிட்டதால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே திட்டப்படுத்தியிருந்த சாக்கை மட்டும் கூறிவிட்டு அவளை முழுவதும் மேய வழியில்லாமல் சீக்கிரமே அனுப்பிவிட்டேன். இப்போது இந்த எச்சரிக்கை மணிக்கு என்ன செய்வது?
எனக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகள் தெளிவாக இருந்தாலும் இந்த மனிதன் யார்? ஏன் இப்படி திடீரென்று வந்து ஒரு அவசர பாதுகாப்பு ஏற்பாட்டை அதுவும் இவ்வளவு புத்திசாலித்தனமான ஏற்பாட்டை செய்துவிட்டு போயிருக்கின்றான்? அவனைப் பற்றிய ஒரு விவரத்தையும் சிவசங்கரும் சரி டேவிட் பிரசாத்தும் சரி யாரிடமும் கூறமாட்டேன் என்கிறார்களே? அப்படி என்ன பொல்லாத இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இரகசிய அமைப்பை சேர்ந்தவன் அவன்? எனக்குத் தெரிந்து இரகசிய அமைப்புகள் அமெரிக்காவிலும் பிரிட்டிஷாரிடமும் இரஷ்யாவிடமும் இருப்பது போல நம் நாட்டில் இல்லையே? ஆனால் இவன் எங்கேயிருந்து பிறந்தான்? அவனுடைய அமைப்பை பற்றிய விவரம்கூட வழங்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் இந்த எச்சரிக்கை மணி அடித்தால் மட்டும் அவன் கூறியுள்ள வழிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் அப்படித்தானே? சில நாட்களுக்கு முன் இரகசிய சந்திப்பில் சிவசங்கரும் டேவிட் பிரசாத்தும் மாறி மாறி கூறியது நினைவில் வந்தது.
“முத்து வேல், உங்களுடைய சர்வீசையும் தகுதியையும் அறிவையும் வைத்துதான் உங்களுக்கு இந்த மிகப்பெரிய பொறுப்பைக் கொடுக்கின்றோம். உடனே பதிவி ஏற்றம் என்று நினைத்துவிட வேண்டாம். ஒருவேளை நீங்கள் நாங்கள் சொல்வது போல நடந்து நடக்கவிருக்கும் ஒரு பேராபத்திலிருந்து எங்களை காப்பாற்றி விட்டால் உங்களுக்கு பதிவியேற்றம் செய்விப்பதைப் பற்றி யோசிப்போம்.”
“அப்படி என்ன சார் பொறுப்பான வேலை? கண்டிப்பாக செய்கின்றேன், என்னவென்று கூறுங்கள்”
“நேற்று இந்தியாவின் ஒரு இரகசிய ஆனால் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பின் முன்னிலை பிரதிநிதி ஒருவர் வந்திருந்தார். என்னையும் சிவசங்கரையும் சந்திக்க வேண்டும் என்று கூறி இரகசியமாக இதே அறையில் சந்தித்தார். அவருடைய நோக்கம் காரணமாக இதை நாங்கள் உங்களனைவரிடமிருந்து மறைக்க வேண்டியதாயிருந்தது. இளைஞராக இருப்பினும் சீரிய அறிவும் தேர்ந்த திறமையும் கொண்டவர். நமது நிறுவனத்திற்கு நீங்களும் சிவசங்கரும் நடத்தும் இன்சாக்ரிப்ட் மென்பொருளால் சில ஆபத்துகள் வர இருக்கின்றது என்று அவர் எச்சரிக்கை செய்தார். அவருடைய அறிவும் வீரமும் மிகுந்த கண்கள் பொய் சொல்லுவதாய் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவருடைய அடையாள அட்டை முதற்கொண்டு எல்லாம் சரிபார்த்தபிறகே அவருக்கு இன்சாக்ரிப்ட் பற்றி தெரிந்ததையே எங்களால் ஒப்புக்கொள்ள முடிந்தது. ஆனால் எச்சரிக்கையுடன் நின்றுவிடும் சாதாரண அதிகாரி இல்லை அவர். ஒரு அருமையான பாதுகாப்பு ஏற்பாடும் கூறிவிட்டு போயிருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகள் அவர் கூறிய முறையில் நேற்று நள்ளிரவில் நீங்கள் எவரும் அலுவலகத்தில் இல்லாதபோதே நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதைப் பற்றி நாங்கள் இப்போது உங்களிடம் கூறக் காரணம், உங்களையும் அந்த பாதுகாப்பு ஏற்பாட்டில் சம்பந்தப்படுத்தியிருக்கின்றோம். எங்களுக்கு வேறு வழியில்லை. இருப்பினும் உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றால் இப்போதே கூறிவிடுங்கள், உங்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்பதோடு, எற்கனவே செய்துவிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றியும் அமைத்துவிடுகின்றோம்.”
பாதுகாப்பு ஏற்பாடா? அதுவும் இன்சாக்ரிப்ட் சம்பந்தப்பட்டதா? ஆகா, அதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் என் தலை வெடித்துவிடுமே. என்ன பெரிய பாதுகாப்பு என்பதை நான் பார்த்தே ஆகவேண்டும். அது மட்டுமின்றி எனக்கு எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதையும் முடிவு செய்தபின் ஏற்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றி யோசிக்கலாம்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார். இந்த நிறுவனத்திற்காக நான் ஓடாக தேயவும் தயார். நீங்கள் என்ன பாதுகாப்பு ஏற்பாடு என்ன வழிமுறைகள் என்பதை மட்டும் சொல்லுங்கள் உங்களின் மனம் போல் நான் நடக்கின்றேன்.”
“இந்தப் பணிவுதான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது முத்து வேல். சரி, இதைப் பற்றி சொல்லும் முன்னர் நாங்கள் வாங்க வேண்டிய வார்த்தைப்பாடு ஒன்று இருக்கின்றது, சிவசங்கர் அதை நீங்களே சொல்லிவிடுங்கள்.”
“முத்து வேல், உங்களின் சின்சியாரிட்டி எனக்கு தெரியும். நிறுவனத்தின் மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கின்றீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களிடம் நாங்கள் சொல்லப் போகின்ற விஷயம் மிகவும் இரகசியமானது. இந்த அறையிலிருக்கும் நம் மூவரைத்தவிர வேறு எவருக்கும் தெரியாதது. இதைக் கூறியபின் நீங்கள் கலந்துகொண்டாலும் சரி கலந்துகொள்ளாவிட்டாலும் சரி, இதைப் பற்றி யாரிடமும் மூச்சுக்கூட விடக்கூடாது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி எவரிடமும் பேசுவது மட்டுமின்றி அதை தடுக்க அல்லது பிழையாக்கவும் முயலக்கூடாது. மேலும், நீங்கள் ஏற்றுக்கொள்கின்றதாயிருந்தால், உங்களுக்கு வழங்கப்படும் வழிமுறைகளை சிறிதேனும் மீறாமல் கடைபிடிக்க வேண்டும். இது நம் நிறுவன பாதுகாப்பு மட்டும் சம்பந்தப் பட்ட ஒன்று அல்ல, இரு நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் எங்கேனும் பிழை ஏற்பட்டு அதற்கு காரணம் நீங்கள் என்பது தெரியவந்தால் வெறும் உத்தியோகம் மட்டும்தான் போகும் என்று கனவிலும் நினைக்காதீர்கள். உங்களுக்கு தேசத் துரோகி பட்டத்தோடு சட்டத்தின் முன்னே குற்றவாளியாக நிற்கவேண்டிய அவசியமும் வரவேண்டியிருக்கும். ஆகவே நன்கு யோசித்தபின், இதை அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்று நீங்கள் கூறினால்தான் நாங்கள் மேற்கொண்டு பேச ஆரம்பிப்போம். இல்லையென்றால் இப்போதே விலகிவிடுவோம்.”
இதென்ன இவர் அடிவயிற்றில் புளியைக் கரைக்கின்றார்? உத்தியோகம் மட்டும் போகாதாமே. நான் நன்றாக இருப்பது இவர்களுக்குப் பொறுக்கவில்லையா? தி ஓப்பன் சிஸ்டம்ஸ் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று போய்விடலாம், ஆனால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு நடித்ததற்கு பலனிருக்காது.
அது மட்டுமின்றி ஆபத்துகளையும் தாண்டி இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை தூண்டுகின்றதே. சரி என்னவென்றுதான் கேட்டுப் பார்ப்போம்.
முத்து வேல் மிகவும் யோசிப்பதையும் குளிர் காற்றையும் மீறி அவருக்கு வேர்த்துவிட்டதையும் பார்த்த டேவிட் பிரசாத் சிவசங்கரை நோக்கி கூறினார்.
“சிவசங்கர், ஏன் அவரை இவ்வளவு பயப்படுத்திவிட்டீர்கள்? பாவம் அவர். பாருங்கள் அயர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார்.”
“டேவிட், உனக்குத் தெரியாது. இது குழந்தைகளின் விளையாட்டல்ல. இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விஷயம். விஷயத்தின் தீவிரம் புரிந்தவரால்தான் பாதுகாப்பு ஏற்பாடுகளின் அவசியத்தை புரிந்துகொள்ள முடியும். அவர் பயப்படுவதாக இருந்தால் அவரை இப்போதே இந்த ஏற்பாடுகளிலிருந்து நீக்கிவிடலாம்.”
“ஐயோ, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார். இந்த நிறுவனத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன். இவ்வளவு கூறுகின்றீர்களெனில் விஷயத்தின் தீவிரத்தை நான் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியுமா சார்? நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கூறுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?”
“நீங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் முத்து வேல், அறிவைக் கொடுத்தால் போதும். சிவசங்கர், நீங்களே அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்து வேலுக்கு விளக்குங்கள்.”
“முத்துவேல், இதுவரை கணினியிலும் சர்வர் அறையிலும் நாங்கள் வழங்கியிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உங்களுக்குத் தெரியும். நானோ, டேவிட் பிரசாத்தோ இல்லாத வரையில் அந்த பாதுகாப்பு வளையத்தை உடைக்க முடியாது. இருப்பினும் எங்களின் பயம் என்னவென்றால், இதில் நாங்களிருவருமே மாட்டிக்கொள்ளும் ஒரு நிலை வந்தால், கண்டிப்பாக வேறொரு மூன்றாவது நபருடைய உதவி இல்லாமல் நாங்கள் தப்பிக்க முடியாது. இதற்கு யாரோ ஒருவரை தேர்ந்தெடுப்பதை விட, இந்த புராஜக்டை நடத்துவதோடு மட்டுமில்லாமல் எங்களின் கணினி முறை பாதுகாப்புகளையும் அறிந்த உங்களை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்று நாங்கள் கூற அதையே அவரும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் உங்களை கேட்காமலேயே இந்த விஷயங்களில் முடிவெடுத்தோம். இருப்பினும் உங்களுக்கு சம்மதமில்லையெனில் நாங்கள் வற்புறுத்தப் போவதில்லை.”
ஐயோ, ஏற்கனவே உருவாக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி ஒரு மூன்றாவது மனிதர் வரும் பாதுகாப்பு ஏற்பாடா? இது எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே? இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை, குறைந்தபட்சம் இது என்னவென்று அறிந்துகொண்டே ஆகவேண்டும்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்கள் பீடிகை போடுவதை நிறுத்திவிட்டு விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.”
“சரி, நமது அலுவலகத்தில் தொடர்புக்கு நாம் என்ன உபயோகிக்கின்றோம் என்று உங்களுக்குத் தெரியும்தானே?”
“இது என்ன சார், குழந்தைத்தனமான கேள்வி? நேரடியாக விஷயத்திற்கு வரமாட்டீர்களா?”
“விஷயமிருக்கிறது முத்துவேல், கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள். உள்புற தொடர்புக்கு நம் அலுவலகத்தில் உபயோகப்படுத்துபவை மூன்று. ஒன்று ரியல் பாப்அப் எனும் இணையமே இல்லாவிட்டாலும் நெட்வொர்க்குக்குள் உடனே செய்தி அனுப்ப உதவும் உடனடி செய்தி மென்பொருள். இரண்டாவது நமது அலுவலக உட்புற மற்றும் வெளிப்புற மின்னஞ்சல் முகவரிகள். மூன்றாவது, இணையத்துடன் இணைக்கப்பட்டு இங்கிருந்து உலகம் முழுவதும் மட்டுமின்றி நமக்குள்ளேயும் உடனே தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஆஸ்டிரிக்ஸ் மென்பொருள் உதவியுடன் இயங்கும் சிறப்பு தொலைபேசி சேவை. இதில் முதலில் கூறிய இரண்டிலும் அவசர கட்ட செய்திகள் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாது. மூன்றாவதாக கூறிய தொலைபேசியில் முடியும்.”
“தொலைபேசியில் என்ன பெரிய பாதுகாப்பு செய்துவிட முடியும் சார்? நம்மை எவரேனும் தாக்குவதாய் இருந்தால் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்பதுதானே அவர்களின் முதல் எச்சரிக்கையாக இருக்கும்?”
“நாம் பேசிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டை அறிவுறுத்தியவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் இல்லை முத்துவேல். எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எத்தகைய இக்கட்டான சூழலிலும் திறமையாக பயன்படுத்த வல்ல ஒரு நிபுனர். அவருக்கு இது தோன்றியிருக்காது என்று நினைக்கின்றீர்களா? இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை எந்தச் சூழலிலும் எப்படி பயன்படுத்துவது என்பதை எங்களுக்கு அவர் விளக்கியிருக்கின்றார். ஆனால், அதைப் பற்றி நாங்கள் உங்களிடம் கூறப்போவதில்லை. ஏனெனில் உங்களின் பங்கு அதில் வரவில்லை. அதற்கு அப்புறம்தான் உங்களின் பங்கு. உங்களின் பங்கை மட்டும் தெரிந்துகொள்வது உங்களுக்கு நல்லது இல்லையா?”
சரிதான். இவர் என்ன இப்படி பேச ஆரம்பித்துவிட்டார்? இரகசியத்துக்குள் இரகசியமா? ஐயா, உங்களின் பாதுகாப்பு உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
“நல்லதுதான் சார். இன்னமும் நீங்கள் பாதுகாப்பு பற்றியும் கூறவில்லை, என் பங்கு பற்றியும் கூறவில்லை.”
“பொறுமை மிகவும் அவசியம் முத்து வேல். இந்த விஷயத்தில் நிதானம் இழக்கக்கூடாது. சரி, விஷயத்திற்கு வருகின்றேன். என்னுடைய தொலைபேசி, டேவிட் பிரசாத்தின் தொலைபேசி மற்றும் உங்களின் தொலைபேசி இவை மூன்றுக்கும் ஒரு இணைப்பை நாம் ஏற்கனவே பயன்படுத்தும் ஆஸ்டிரிக்ஸ் மென்பொருள் மூலம் வழங்கியிருக்கின்றோம். இந்த இணைப்பு என்ன செய்யும் என்றால், என்னுடைய தொலைபேசியிலிருந்தோ அல்லது அவருடைய தொலைபேசியிலிருந்தோ ஒரு குறிப்பிட்ட நான்கு எண்களை அழுத்தியவுடன் எதுவும் பேசாமல் எவ்வளவு முறை மணியடிக்க விடுகின்றோமோ அதற்கு ஏற்ப விஷயத்தின் தீவிரத்தை விவரிக்கும் ஒரு எச்சரிக்கை மணி உங்களின் தொலைபேசியில் அடிக்கும். அதன்பிறகு உங்களின் தொலைபேசியின் திரை நீல நிறத்தில் ஒளிரும். தொலைபேசியின் ஓரத்திலிருக்கும் கேட்கப்படாத பேச்சு செய்திகளுக்கான அறிவிப்பான சிவப்பு விளக்கு எரிந்து எரிந்து அணையும். நீங்கள் உங்களின் ரிசீவரை எடுத்து பேச்சு செய்திகளை அறிவதற்கான மெஸேஜ் என்கிற பொத்தானை அழுத்தினால் ஒரு கணினி குரல் பாஸ்வோர்டு என்று கேட்கும். அதற்கு நாங்கள் கூறும் நான்கு எண்களை அழுத்தினால், உங்களுக்கு ஒரு பேச்சு செய்தி கிடைக்கும். அதில் நீங்கள் செய்ய வேண்டியதின் முழுவிவரமும் எங்களின் எச்சரிக்கையின் தீவிரத்திற்கு ஏற்ப கிடைக்கும். அதை நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். இப்போது புரிந்ததா?”
என்ன புரிஞ்சுக்கறது? இந்த பாதுகாப்பு எற்பாட்டை செய்தவன் மிகவும் புத்திசாலி. நான் இதைத் தெரிந்துகொண்டது போலும் இருக்கின்றது தெரியாதது போலும் இருக்கின்றது. எனக்கு கொடுக்கப்படும் பங்கை வைத்து ஒன்றும் ஊகிக்க முடியாது. மாற்று ஏற்பாடுகளையும் செய்ய முடியாது. இதுதான் இரகசியத்துக்குள் இரகசியம் என்பதா?
“புரிந்தது சார், அந்த நான்கு எண்கள் என்ன?”
“1435 – அப்படியென்றால் ஆங்கிலத்தில் நான் உன்னை நேசிக்கின்றேன் இந்தியா என்று அர்த்தம். I Love You India என்பதின் ஆங்கில எழுத்துக்களின் எண்ணிக்கையை எடுத்து உருவாக்கிய எண் இது.”
“இதுக்குக்கூடவா சார் இத்தனை யோசித்திருப்பீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே.”
“இது நாங்கள் யோசித்தது அல்ல, ஒவ்வொரு விஷயத்திலும் நம் நாட்டை நேசிக்கும் ஒரு உத்தம வீரர் யோசித்தது. நினைவில் கொள்வதற்கும் எளிமையாக இருக்கிறது அல்லவா? இப்போது சொல்லுங்கள் இதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?”
“கண்டிப்பாக ஏற்றுக்கொள்கின்றேன் சார். நம் நிறுவனத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் தடுக்க இதை ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன். நன்றி…”
“நன்றி முத்துவேல், நீங்கள் போகலாம்…”
இன்னமும் அன்று நடந்த பேச்சுக்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, சிகரெட் முடிந்துவிட்டது என்பதை விரல் கூறியது. அதை அப்படியே வெளியில் எறிந்துவிட்டு ஜன்னலை மூடிவிட்டு குளிர் காற்றுப் பெட்டியையும் வேலை செய்ய வைத்துவிட்டு தனது தொலைபேசியின் வலது ஓரத்தில் இன்னமும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்த சிவப்பு விளக்கை ஏதோ விரோதியை பார்ப்பது போல் பார்த்தார்.
இன்று ஏதோ நடந்திருக்கின்றது. இல்லையென்றால் இது எச்சரிக்கை மணியடித்திருக்காது. என்ன நடந்தது என்றும் தெரியவில்லை அதே சமயம் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடு பயன்பாட்டுக்கு வரும் என்பதை நானும் எதிர்பார்க்கவில்லை. இனி வேறு வழியில்லை. அது கூறும்படி நடக்க வேண்டியதுதான் இல்லையென்றால் போகப்போவது வேலை மட்டும் இல்லை…
தொலைபேசியை அணுகி அதன் ரிசீவரை எடுத்து மெஸேஜ் என்று எழுதியிருந்த பொத்தானை அழுத்த ஒரு இனிய பெண்குரல் “பாஸ்வோர்டு” என்று கேட்டது.
1435 என்று எண்களை அழுத்த மீண்டும் அந்த பெண்குரல் “தேங்க் யூ. யு ஹேவ் ஒன் நியூ வாய்ஸ் மெசேஜ். பிளீஸ் பிரஸ் ஒன் டு லிசன் த மெசேஜ். ஆர், பிரஸ் டூ டு கெட் மேர் ஆப்ஷன்ஸ்” என்று அறிவித்தவுடன் ஒன்றாம் எண்ணை அழுத்த எங்கோ பீப் என்னும் சத்தம் கேட்டபின் சிவசங்கரின் குரல் ஸ்பீக்கரில் வழிந்தது.
“முத்து வேல், இது மிகவும் உச்சகட்ட தீவிரம் கொண்ட எச்சரிக்கை மணி. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் +91 9855331435 என்ற எண்ணுக்கு போன் செய்து ‘வந்தே மாதரம்’ என்று கூறவேண்டியதுதான். அதன்பிறகு உங்களுடன் நான் கூறிய மனிதரே பேசுவார். அவர் கூறும் முறைகளின்படி நடந்து கொள்ளுங்கள். நன்றி…”
செய்தி முடிந்துவிட, ரிசீவரை அதனிடத்தில் வைத்த முத்து வேலுக்கு பரபரப்பாயிருந்தது. உச்சகட்ட தீவிரம் கொண்ட எச்சரிக்கையாமே அப்படி என்னதான் நடந்துவிட்டது? அதுசரி, இந்த மனிதர் யார் என்று இன்று தெரிந்துவிடும்.
மறுபடியும் ரிசீவரை எடுத்து நினைவில் குறித்து வைத்த எண்களை அழுத்த மறுமுனையில் மணியடித்தது. இரண்டு மணிகளுக்குப் பிறகு சட்டென்று மணியடிப்பது நிற்க, ஸ்பீக்கரில் ஒரு கம்பீரமான கேட்டவுடன் பணிய வைக்கும் ஆண்குரல் கேட்டது.
“ஹலோ…”
“வந்தே மாதரம்!”
“வந்தே மாதரம்! முத்து வேல்தானே நீங்கள்?”
“ஆம் ஐயா. முத்து வேல்தான். எனக்கு உச்சகட்ட தீவிரம் கொண்ட எச்சரிக்கை மணி அடித்தது. சிவசங்கர் உங்களுக்கு போன் செய்யச் சொல்லியிருந்தார்.”
“மிகவும் நன்றி. உங்களின் நிறுவனத்திற்கு யாரேனும் வந்திருக்கின்றார்களா?”
“யாரும் வந்தமாதிரி தெரியவில்லை. எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்தமாதிரியும் தெரியவில்லை.”
“கொஞ்சம் ரிசீவரை அப்படியே வைத்துவிட்டு உங்களின் அறையை விட்டு வெளியே சென்று சிவசங்கரின் அறையின் முன்னால் என்ன நடக்கிறது என்று மட்டும் பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொல்வீர்களா? அவருடைய அறைக்குப் போக வேண்டாம்.”
“சரி, ஒரு நிமிஷம் பொறுங்கள்…”
ரிசீவரை மேஜையின் மேல் வைத்துவிட்டு கதவைத் திறந்து சிவசங்கரின் அறையைப் பார்க்க அதன் முன்னால் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி அவரை திக்கிக்க வைத்தது. நந்தினி வெளியே வந்துகொண்டிருக்க அவளுக்குப் பின்னால் ஒரு வெளிநாட்டவன் தன் கையில் கறுப்பாக ஒரு இயந்திர துப்பாக்கியை வைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான். சிலையென ஒரு நிமிஷம் நின்றுவிட்ட முத்துவேல் தனக்கிடப்பட்டிருந்த வேலையை ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்பவும் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். மேஜைக்கு ஓடிச்சென்று ரிசீவரை எடுத்த வேகத்தில் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.
“ஹலோ? இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.”
“உங்களுக்குப் புரியவேண்டும் என்பது அவசியமில்லை. என்ன நடந்தது என்று கூறுங்கள்.”
“என்னுடைய ப்ராஜக்ட்டில் வேலை செய்யும் நந்தினி என்கிற பெண்ணை ஒரு வெளிநாட்டவன் இயந்திரத் துப்பாக்கியுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றான்.”
“அப்படியா, நல்லது. ஒன்றும் கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கின்றேன். ஆமாம், இந்த நந்தினி உங்களின் இன்சாக்ரிப்ட் ப்ராஜக்ட்டில் வேலை செய்கிறாளா?”
“இது என்ன கேள்வி? அவளுடைய துணை இல்லாமல் நாங்கள் இந்த மென்பொருளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவளுக்கு அந்த மென்பொருளை அக்கு வேறு ஆணி வேறாக தெரியும். அவளுடைய தலைமையில் இருக்கும் சிறிய குழுதான் இதை உருவாக்குகின்றது.”
“நன்றி முத்து வேல். இன்னொரு கேள்வி. அவளுக்கு சர்வர் கணினி பற்றிய விவரங்களும் தெரியுமா?”
“அது சிவசங்கருக்கும் டேவிட் பிரசாத்துக்கும் மட்டுமே தெரிந்தது. அவர்களிருவரில் சிவசங்கரால்தான் அதை இயக்க முடியும். ஆனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி எனக்கு மட்டும்தான் தெரியும். நந்தினிக்கு இவை எதுவுமே தெரியாது. அவளுடைய பங்கை மட்டுமே செய்வாள்.”
“அப்படியா… சரி, அப்படியென்றால் நீங்கள் பயப்படத்தேவையில்லை. நடப்பது எதுவானாலும் எந்தவிதமான முயற்சியையும் நீங்கள் செய்ய வேண்டாம். நடப்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள். சரியா?”
“சரிதான். ஆனால் இவ்வளவு ஆறுதல் கூறுகின்ற நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாதே?”
“நான் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் வரும்போது தெரிந்துகொள்வீர்கள்.”
“அப்படியில்லை. உங்களைப் பற்றி சொல்லவில்லை எனினும் உங்களின் பெயரையாவது கூறலாமே?”
“என்னுடைய பெயர், ருத்ரன்…”
இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட, அந்தப் பெயரை அவர் உச்சரித்த விதமும் அதிலிருந்த வேகமும் வீரமும் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க அப்படியே சிலையென நின்றுவிட்டார் முத்துவேல்.