மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு

July 6, 2008 தொடர் கதைகள்

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர முகம் தொடரின் பதிவுகளில் 8 இல் 5

இயங்குதள மென்பொருட்கள் பிரிவு, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை

நீண்டு வளர்ந்திருந்த தளம் முழுவதும் கண்களை உறுத்தாத வெளிர் பச்சை நிறத்தில் இதமாக தெரிந்த மூன்று பக்க சுவர்களுக்கு அடுத்த நான்காவது பக்கம் முழுவதும் சூரியக் கதிர்கள் தடுக்கப்பட்ட தடிமனான கண்ணாடிகளால் சூழப்பட்டு வெளியுலக காட்சிகளை கருநீலநிறத்தில் நிறமேற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தன. வெளியே தகித்துக்கொண்டிருந்த சென்னையின் காலைநேர வெயிலின் கொடுமையை புத்தி உணர்ந்தாலும் உடல் உணராத வண்ணம் நடுநாயகமாக வீற்றிருந்த சக்திவாய்ந்த குளிர்காற்றுப் பெட்டியின் திட்டமிட்ட செயற்கைக் குளிர் இதமாக்கியிருந்தது. கண்ணாடியிலான நுழைவாயில் கதவிற்குப் பக்கத்தில் தெரிந்த வெள்ளை நிற கட்டமும் அதற்கு நடுவில் தெரிந்த மானிட்டரும் மின்காந்த அடையாள அட்டை இல்லாத எவரும் உள்ளே வரமுடியாது என்பதை புலனாக்கியது. கதவை அடுத்து வலது புறத்தில் தெரிந்த பாதி சுவற்றின் பக்கத்தில் ஒரு வளைவு திரும்பியிருக்க அதனுள் மரக்கதவுடன் தெரிந்த சிவசங்கரின் அறை இருந்தது. பாதி சுவற்றின் முழுவதையும் அடைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு வெள்ளை நிற அறிவிப்புப் பலகை இருக்க அதில் நிறுவனத்தின் பல்வேறு செய்திகளடங்கிய தகவல் பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு வண்ணங்களில் தெரிந்தது. கண்ணாடியிலான கதவை அடுத்து இடது புறம் இருந்த சுவரில் பாதியை அடைத்துக்கொண்டு தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சின்னமான ஓரத்தில் அம்புக்குறி குத்தியதால் சிறிய திறப்பு தெரியும் ஆரஞ்சு நிற ஆங்கில ‘’ எழுத்தைத் தாண்டி மிகப்பெரிய எழுத்துக்களில் நிறுவனத்தின் முழுப்பெயர் கரும்பச்சை நிறத்தில் உறுத்தாமல் வீற்றிருந்தது. பெயருக்கு அடியில் தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெரிதாக லேமினேட் செய்யப்பட்டு சுவற்றுடன் பதிந்து வைக்கப்பட்டு நிறுவனத்தின் பெருமையை பேசிக்கொண்டிருந்தது. மீதியிருந்த சுவற்றின் பக்கம் முழுவதும் சத்தம் நுழையாத மரத்தடுப்புகளாலான சிறிய அறைகள் அவை மேலாளர்களுக்கானவை என்று தெளிவுபடுத்தியது. ஒவ்வொரு அறையின் கதவிலும் சிறிய வெள்ளை நிற பெட்டியில் உள்ளே வீற்றிருப்பவரின் விவரங்கள் ஏதோ கோயிலுக்கு உபயம் எழுதி வைத்ததைப் போலத் தெரிந்தது.

தளத்தின் மற்ற பகுதி முழுவதும் நான்கு பேர் மிகவும் வசதியாக அமர்ந்து வேலை செய்யக்கூடிய பெரிய பெரிய மரத்தாலான கட்டங்களில் நான்கு மூலைக்கும் கணினியின் கண்களை உறுத்தாத எல்.சி.டி திரையும் அதன் பக்கத்தில் சிறிய சூட்கேஸ் போல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல் நிறுவன கேபினெட் பெட்டிகளும் தெரிந்தது. ஒவ்வொரு மேஜைக்கு பக்கத்திலுமிருந்த பெட்டிகள் கோப்புகள் வைப்பது என்பதை உடனே உணர்த்த மேஜைகளுக்கு அடியிலிருந்து நீண்ட மரத்தட்டில் விசைப்பலகையும் சுட்டியும் தெரிந்தன. கணினிகளின் முன்னால் சுழலும் நாற்காலிகளில் வசதியாக சாய்ந்துகொண்டு திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நிரலாளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ஒரேயொரு மூலையில் கணினி வேலையிலிருப்பதற்கு வயது காரணமல்ல என்று நிரூபிப்பது போல் 50 அல்லது 60 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான பெரியவர் தடிமனான மூக்குக் கண்ணாடி வழியே கணினித் திரையையும் விசைப்பலகையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார். ஆண்களும் பெண்களும் கலந்து ஒரு கதம்பம் போல தெரிந்த தலைகளுக்கு நடுவே எண்ணைபோட்டு சீராக வாரப்பட்ட தலைமுடியுடன் ஒரேயொரு பெண் தலை தான் ஒரு தமிழ்ப்பெண்ணின் தலை என்று பெருமிதத்துடன் காட்சி தந்து கொண்டிருக்க அந்தத் தலைக்கு சொந்தமானவள் நமது நந்தினி என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையே இல்லாமல் சட்டென்று அவள் எழுந்து ஒரு முறை தளம் முழுவதையும் நிதானமாக பார்த்து நமக்கு தரிசனம் அளித்துவிட்டு திரும்பி பின்னாலிருந்த மரத்தால் தடுக்கப்பட்டிருந்த ஒரு அறையை நோக்கி போனாள். அன்னத்தைப் பழிக்கும் மென்மையான நடையில் இவள் எதற்கும் எளிதில் அதிர்ந்துவிட மாட்டாள் என்று நமக்கு உணர்த்திக்கொண்டே பின்னப்பட்ட கூந்தல் அவளின் நடைக்கேற்ப அசைந்து அழகுக்கு அழகு சேர்க்க மெதுவாக அந்த அறையை நெருங்கி தட்டுவதற்காக ஒரு கையை உயர்த்தி இதுவரை மார்புடன் அணைத்து வைத்திருந்த மற்றொரு கையை கீழிறக்க அந்தக் கையில் ஒரு கோப்பு இருப்பது தெளிவாக தெரிந்தது.

டொக்.. டொக்…

“மே ஐ கம் இன் சார்…”

“எஸ்.. கம் இன்..”

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நந்தினி புராஜக்ட் மேனேஜர் முத்து வேல் இவளைப் பார்த்து வழிவதை எரிச்சலுடன் பார்த்தாள்.

“சார், நீங்கள் கேட்டிருந்த புராஜக்ட் ரிப்போர்ட்டை கொண்டுவந்திருக்கின்றேன்.”

“நந்தினி, எத்தனை முறை கூறியிருக்கின்றேன் என்னை சார் என்று அழைக்காதே என்று? ஏன் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன் என்கின்றாய்? வெளிநாட்டு நிறுவனங்களிலெல்லாம் எவருமே சார் என்று கூப்பிடுவதே இல்லை, முதல் பெயரை விளித்துதான் கூப்பிடுவார்கள். நமது இந்திய மென்பொருள் நிறுவனங்களிலும் இந்த முறை வந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன நந்தினி.”

“உங்களுடைய இந்த மாறாத கேள்விக்கு என்னுடைய பதிலும் மாறப்போவதில்லை சார். சார் என்று அழைப்பது ஆங்கிலத்தில் ஒரு மரியாதையை கொடுக்கும். தமிழில் ஐயா என்று அழைப்பதுபோல நாம் மரியாதையாக நினைப்பவர்களை சார் என்று கூப்பிடுவது நல்ல பழக்கம். அதை எங்கோ இருக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை என்பதற்காக நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்க முடியுமா? தமிழில் பேச தடை என்னும் போது ஆங்கிலத்திலாவது மரியாதையாக அழைக்க வேண்டியிருக்கின்றது.”

“நல்லவேளை இங்கே தமிழ் பேசக்கூடாது என்று தடை இருக்கின்றது. இல்லையென்றால் நீ என்னை மரியாதை தருகின்றேன் பேர்வழி என்று ஐயா என்று அழைப்பாய். பார்ப்பவன் சிரித்துவிட்டுப் போவான்.”

“நமது நாட்டின் கலாச்சாரமே இது போன்ற வெளிநாட்டு புகுத்தல்களால் சிரிப்புக்கிடமாகத்தான் கிடக்கிறது சார். வயதில் மூத்தவர்களை பெயர் போட்டு கூப்பிடுவது எந்த பண்பாடு என்று எனக்குத் தெரியாது ஆனால் இந்தியப் பண்பாடு இல்லை என்று உறுதியாக தெரியும். சரி, இந்த புராஜக்ட்டின் ரிப்போர்ட்டை நீங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டீர்களே, திரும்பவும் கேட்டதன் காரணம் என்ன சார்? ஏதேனும் சந்தேகம் இருக்கின்றதா?”

விநாயகா, உனக்கு இரண்டு கொழுக்கட்டைகளை கட் செய்யத்தான் போகின்றேன். பார்த்த புராஜக்ட் ரிப்போர்ட்டிலேயே சந்தேகம் இருக்கிறது என்று கூறி அருகில் வந்து விளக்கச் சொல்லப் போகின்றார் அவரின் கழுகுக்கண்கள் மேயும் இடங்களைப் பார்த்து நான் கூனிக்குறுகி நிற்கப்போகின்றேன். இப்போது உனக்கு சந்தோஷமா? பெண்கள் என்றால் அழகாக பிறக்கக்கூடாதா அல்லது ஆண்களுக்கு நிகராக வேலையில்தான் இருக்கக்கூடாதா? உனக்கு பெண் பிள்ளை வேண்டாம் என்றால் உலகத்தில் எந்தப் பெண் பிள்ளையையும் நிம்மதியாக வாழ விட மாட்டாயா?

“ஏற்கனவே பார்த்த ரிப்போர்ட்தான் நந்தினி, ஆனால் இன்றைக்கென்று அந்த கிளையண்ட் போன் செய்து புதிதாக ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். அவன் கூறுவதை இப்போதைய நிலையில் ஏற்கலாமா அல்லது மறுக்கலாமா என்பது தெரியவேண்டும். அதற்காகத்தான் புராஜக்ட் ரிப்போர்ட்டோடு உன்னை வரச்சொன்னேன்.”

அட, நியாயமான காரணம் போலிருக்கின்றதே. விநாயகா அதற்குள் என்னுடைய திட்டை ஏற்றுக்கொண்டு விட்டாயா?

“எங்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றார் சார்?”

பயனர் இடைமுகப்பில் இரண்டு இடங்களில் வெளிர் மஞ்சள் நிற பெட்டிகள் கொடுத்து அதில் அவர்கள் நிறுவனம் புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கையைப் பற்றி கொடுக்க வேண்டுமாம். இப்போது புராஜக்ட் எந்த நிலையில் இருக்கின்றது?”

“சார், இந்த மாற்றத்திற்கு போய் எதற்காக புராஜக்ட் ரிப்போர்ட்? இதைச் செய்ய நமக்கு இரண்டு மணி நேரம் ஆகலாம் அவ்வளவே. ஆனால் இதைப் போய் இப்போது பிராஜக்ட் மிகவும் பிஸியாக இருக்கின்றது இந்த நேரத்தில் மாற்றங்களை ஏற்பதற்கில்லை என்று நாம் கூறினால் நன்றாக இருக்காது. அவர்களுடைய வியாபாரத்தையும் நாம் பார்க்க வேண்டும் சார்.”

“உன்கிட்ட பிடிக்காத விஷயமே இதுதான். இதே மாற்றத்தை செய்ய இரண்டு நாள் ஆகும்னு நான் கணக்கு கொடுத்து அதை இப்போதே செய்ய கடினமாக இருக்கிறதுன்னும் சொல்லி விலையையும் அதிகமாக வாங்கிக்கொள்ள முடியும். நீ ரொம்ப நியாயவாதி.”

“சார், நாம எப்படி நம்ம நிறுவனம் நல்லா இருக்கனும்னு பாடுபடுறோமோ அதே மாதிரிதான் நம்முடைய வாடிக்கையாளர்களின் நிறுவனமும் நல்லா இருக்கனும்னு பாடுபடனும்னு காந்தியடிகள் கூறியிருக்காரே.”

“அவருக்கு வேறு வேலை இல்லை. அவர் காலத்தில் கூறியதெல்லாம் இந்தக் காலத்திற்கு செல்லுபடியாகாது. அதுசரி, உன் முடிவு என்ன?”

“இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடுவோம் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை அதே சமயம் புராஜக்ட் இப்போது பிஸியாக இருப்பதால் இதுபோன்ற மாற்றங்களை இனிமேல் வழங்க வேண்டாம், புராஜக்ட் முடிந்த பின் வழங்குங்கள் என்று கூறுங்கள்.”

“நல்ல யோசனைதான். கிளையண்டையும் குஷிபடுத்தும்னு நினைக்கிறேன். சரி, நீ போகலாம்.”

அவளை அனுப்பிவிட்டு முத்து வேல் தன்னுடைய தொலைபேசியை நோக்கி திரும்பிவிட நம்ப முடியாமல் வெளியேறினாள் நந்தினி.

அட விநாயகா, உண்மையிலேயே இன்றைக்கு என்னை காப்பாற்றிவிட்டாய். பாவம் உண்மையான காரணத்திற்கு கூப்பிட்ட அவரை வேறு எப்போதும் மனதிற்குள் திட்டுவது போலவே திட்டிவிட்டேன். பரவாயில்லை இன்னொருநாள் மறுபடியும் அவருடைய வேலையை செய்யாமலா இருக்கப் போகின்றார் அன்றைக்கு திட்டும் கணக்கில் இதையும் சேர்த்துவிடுகின்றேன். உனக்கு கொழுக்கட்டை கட் இல்லை போதுமா விநாயகா?

இருப்பிடம் வந்த நந்தினியை உட்காராதே என்று எச்சரிப்பதுபோல தொலைபேசி மணி அடித்தது.

“ஹலோ…”

“நந்தினி, நான் சிவசங்கர் பேசுகின்றேன்.”

“சார், சொல்லுங்கள் சார், என்ன விஷயம்?”

“நந்தினி, உடனே என்னுடைய அறைக்கு வரமுடியுமா?”

“இதென்ன சார் கேள்வி, உடனே வருகின்றேன். ஏதாவது பிராஜக்ட் ரிப்போர்ட் எடுத்து வர வேண்டுமா சார்?”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் இது வேறு விஷயம். சீக்கிரம் வா…”

“சரி சார்…”

தொலைபேசியை அதனிடத்தில் வைத்த நந்தினி ஆச்சரியப்பட்டாள். சிவசங்கர் குரல் வழக்கம் போல மென்மையாக இல்லையே? கடினமாக பேசுகின்றாரே? புராஜக்ட் விஷயம் வேறு இல்லை என்கிறார்? ஏதாவது தப்பு கிப்பு செய்துவிட்டேனா? எனக்குத் தெரிந்து இல்லை. எதுவாயினும் சரி, அவருடைய கேள்விகளுக்கு ஒழுங்காக பதிலளித்து அவருடைய மூடை மாற்ற வேண்டும். இந்தக் குரலில் அவர் பேசுவதைக் கேட்கவே பிடிக்கவில்லை.

கையிலிருந்த கோப்பை தன்னுடைய மேஜையின் மேல் வைத்துவிட்டு நேராக சிவசங்கர் இருக்கும் அறை நோக்கி விரைந்தாள்.

டொக்… டொக்…


“மே ஐ கம் இன் சார்…”

“எஸ்.. கம் இன்..”

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நந்தினி கண்களின் முன்னே விரிந்த காட்சியைக் கண்டு ஆவென அலற வாயைத் திறக்க ஒரு முரட்டுக் கை அவளுடைய வாயை அழுந்த மூடியது.

தொடர் வரிசை«மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்றுமூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து»

குறிச்சொற்கள்: , , , , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme