மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று

July 6, 2008 தொடர் கதைகள்

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர முகம் தொடரின் பதிவுகளில் 8 இல் 4

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…

நிக்கோலஸ் மற்றும் நெல்சனின் கைகளில் முளைத்திருந்த கறுப்பு நிற மெஷின் கன்களைப் பார்த்து சிவசங்கருக்கு வாயடைத்துவிட்டது. தூதரக அதிகாரிகளுக்கு எப்போதிருந்து மெஷின் கன்களை உபயோகப்படுத்தும் உரிமை கிடைத்தது? இவர்கள் உண்மையான தூதரக அதிகாரிகள் போலத் தெரியவில்லையே?

“லிண்டா, நீங்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்களிருவரும் கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்கள்?”

“சிவசங்கர், நானும் உங்களிடம் சாத்வீகமான முறையில்தான் அணுகிப்பார்த்தேன். நீங்கள்தான் முடியாது எனக்கு வன்முறைதான் பிடிக்கும் என்றீர்கள். வன்முறையை கையில் எடுத்துவிட்டோம். இவர்கள் கையிலிருக்கும் கன்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகின்றது? இது இரஷ்யாவின் பி.பி-19 பைசன் (Bizon) ரக சப்மெஷின் கன். புகழ்பெற்ற ஏ.கே-47 மெஷின் கன்னை உருவாக்கிய மிக்ஹாலில் கலாஷ்னிகாவ்வின் மகன் விக்டர் கலாஷ்னிகாவ் உருவாக்கியது. நிமிடத்திற்கு 600 முதல் 700 வரையான ரவுண்டுகள் சுடும் வேகமுள்ளது. ஒரு மேகசினில் 64 குண்டு உண்டு. ஒரு முறை சுண்டினால் 200 மீட்டருக்குள் இருக்கும் எதுவும் உடனே சல்லியாகிவிடும்.”

“இதைப்பற்றி எல்லாம் என்னிடம் எதற்காக சொல்லிக்கொண்டிருக்கின்றாய்?” குரலில் கணிசமான அளவு கோபம் தெறிக்க மரியாதையையெல்லாம் கைவிட்டுவிட்ட சிவசங்கர் எரிச்சலுடன் கேட்டார்.

“நீங்கள் சாகப்போவதற்கு முன் எதன் மூலம் செத்தீர்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டாம்? அதற்காகத்தான்!”

“என்ன? என்ன சொல்கின்றாய் நீ? எதற்காக நான் சாகவேண்டும்?” சிவசங்கரின் குரலில் பயம் தெரிந்தது.

“இப்போது கேட்டீர்களே, இது சரியான கேள்வி. உங்களின் வாழ்க்கையின் நாளைய நாட்களை பார்க்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் நாங்கள் சொல்லுவது போல் கேளுங்கள். இல்லையென்றால் நாங்கள் பாட்டுக்கு காக்கா குருவியை சுடுவது போல சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்போம்!”

சிவசங்கரின் மூளை பரபரப்பாக யோசித்தது. இவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வந்த நோக்கம் புரிந்துவிட்டது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் பாரத நாட்டின் பாதுகாப்புக்கு தான் ஊறுவிளைவிக்காமல் இருப்பதற்கும் ஏதாவது வழி யோசித்தாக வேண்டும். அதற்கு ஏதாவது பேச்சு கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டும்.

“லிண்டா, உன்னுடைய அறியாமையை நினைத்து எனக்கு சிரிப்புத்தான் வருகின்றது.”

புன்னகைத்துக்கொண்டிருந்த லிண்டாவின் முகம் இறுகியது. சிவசங்கரின் இந்த மாற்றத்தை அவள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

“சிவசங்கர், இரண்டு சக்திவாய்ந்த உயர்ரக மெஷின் கன்களின் முன்னால் நின்றிருக்கின்றோம் என்ற பயமே இல்லாமல், ஏதோ சிரிப்பு வருகிறது என்கிறீர்கள்? என்ன அறியாமையை கண்டுவிட்டீர்கள்?”

“லிண்டா, நீங்கள் இருப்பது ஒரு ஜனரஞ்சகமான இடம். ஒதுக்குப் புறமான இடமல்ல. அண்ணாசாலை என்பது சென்னையின் மிகப்பெரிய வணிகத் தெருக்களுள் ஒன்று. எங்களுக்கு என்று புறங்காவல் நிலையமே இருக்கின்றது. இங்கே துப்பாக்கி சத்தத்தைக் கேட்டுவிட்டு தொலைகாட்சியில் வருகிறது என்று நினைக்கமாட்டார்கள். நீங்கள் ஒருமுறை உங்களின் துப்பாக்கியை இயக்கினாலும் அதன் சத்தம் இந்த ஊரைக் கூட்டிவிடும். அப்புறம் எப்படி தப்பிப்பீர்கள்? உங்கள் நாட்டில் கற்ற வித்தைகள் எங்கள் நாட்டில் பலிக்காது லிண்டா.”

“சிவசங்கர், உங்கள் நாட்டில்தான் நாங்கள் பயிற்சியே பெற்றோம். சும்மா சட்டென்று தூதரகத்து பெயரைக்கூறிக்கொண்டு கையில் மெஷின் கன்களோடு வந்துவிடுவோம் என்று நினைத்தீர்களா? இதற்கு எத்தனை நாள் பயிற்சி என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு கூர்தீட்டப்பட்ட திட்டம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிய நியாயமில்லை.”

“எவ்வளவு கூர்மையான திட்டத்திலும் ஒரு ஓட்டை இருக்கும். அது சரி, அப்படியென்றால் நீங்கள் தென்னாப்ரிக்க தூதரகத்தை சேர்ந்தவர்கள் இல்லையா?”

“இன்னுமா உங்களுக்கு அந்த சந்தேகம்? உங்களை அறிவாளி என்று நினைத்தேன். நான்தான் கூறினேனே இதுஒரு முன்னேற்பாடுடன் கூடிய திட்டம் என்று.”

“எனக்கு ஒன்று புரியவில்லை லிண்டா. இவ்வளவு முன்னேற்பாடுடன் திட்டம் தீட்டி எங்களின் நிறுவனத்திற்கு நீங்கள் வரவேண்டிய காரணம் என்ன? உண்மையில் நீங்கள் யார்?”

“நாங்கள் யார் என்று கூறிவிட்டால் மட்டும் இன்சாக்ரிப்ட் பற்றி கூறிவிடப்போகின்றீர்களா? சரி, எது எப்படியாயினும் உங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் யார் என்பதைக் கூறுவதற்கில்லை. அதேசமயம் எங்களின் நோக்கம் இன்சாக்ரிப்ட் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வது.”

“அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு இருநாட்டு ஜனாதிபதிகளின் உத்திரவு இருந்தால் போதுமே எதற்கு இந்த இரண்டு மெஷின் கன்கள்?”

“சிவசங்கர், சில நேரங்களில் எதையும் முறையாக செய்யமுடியாது. எங்களுக்கு அந்த மென்பொருள் பற்றிய விவரங்களை வழங்க முடியுமா அல்லது எங்களின் குண்டுகளுக்கு இரையாகின்றீர்களா?”

“இன்சாக்ரிப்ட் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள்?”

“அந்த மென்பொருளை அடியோடு அடையாளம் தெரியாமல் அழிக்கப்போகின்றோம்.”

இதைக்கேட்டு திடீரென்று பலமாக சிரித்த சிவசங்கரை ஐவரும் புரியாமல் பார்த்தார்கள். இவருக்கு என்ன நம்மையெல்லாம் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறதா? நிக்கோலஸின் தாடைகள் மற்றும் கைகளின் முறுக்கு ஏறியதை ஓரக்கண்ணால் கண்ட லிண்டா இப்போது வேண்டாம் என்பதுபோல் தலையசைத்ததை உற்சாகமாக சிரித்துக்கொண்டிருந்த சிவசங்கர் கவனிக்கவில்லை. சிவசங்கரே சிரித்து முடிக்கட்டும் என்று வெறுப்புடன் காத்திருந்தாள்.

“இன்சாக்ரிப்ட் என்றால் இஞ்சிமுட்டாய் என்று நினைத்துவிட்டாயா? அது ஒரு தொழில்நுட்ப அதிசயம். நாளைய இந்தியாவின் முன்னோட்டம். இந்திய தென்னாப்ரிக்க இணைவின் விடிவெள்ளி. அதை வெறுமனே ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனம் மட்டும் தன்னுடைய சென்னைக் கிளையில் மட்டும் தயார் செய்கிறது என்று நினைத்து வந்திருக்கும் உங்களின் அறியாமையைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது லிண்டா?”

“ஒன்றும் தெரியாமல் இங்கே வந்து நேரத்தை வீணடிப்பதற்கு நான் பள்ளிக்கூடம் போகும் பாப்பா இல்லை சிவசங்கர். இன்சாக்ரிப்ட் மென்பொருளைப் பற்றி எங்களுக்கு முழுவதும் தெரியாவிட்டாலும் அதை தயாரிக்கும் முக்கிய மூளையாக தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்படுகிறது என்பதும் அதன் சிறு சிறு பகுதிகளை இந்தியா முழுவதும் இருக்கும் தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கிளைகளும் தென்னாப்ரிக்கா மற்றும் தென்னிந்திய மென்பொருள் நிறுவனங்கள் சிலவும் சேர்ந்து தயாரிக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். முக்கியமான மென்பொருட்களின் பாதுகாப்பிற்காக பொதுவாக மென்பொருள் துறையில் பயன்படுத்தப்படும் பிரித்தாளும் கொள்கையை இங்கே கடைபிடிப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அனைத்திற்கும் மையப்புள்ளி சென்னையின் தி ஓப்பன் சிஸ்டம்ஸ் கிளை என்பது எங்களுக்கு தெரிந்துவிட்ட உங்களின் இரகசியம்.”

லிண்டா விளக்கிக்கொண்டே வரவர சிவசங்கரின் இதயத்தில் ரிக்டரின் அளவு கூடிக்கொண்டே போனது. இது எப்படி சாத்தியம்? உட்சபட்ச இரகசியம் என்பது இந்தியாவில் எப்போதுமே சாத்தியமில்லாத ஒன்றா? எவ்வளவு கஷ்டப்பட்டு பாதுகாத்த இரகசியம் இப்படி பிட்டுப் பிட்டு வைக்கின்றாளே?

“என்ன சிவசங்கர் வாயடைத்து நின்றுவிட்டீர்கள்? நான்தான் கூறினேன் அல்லவா? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நாங்கள் எதிலும் இறங்குவதில்லை என்று?”

“லிண்டா, நீ கூறியது உண்மையல்ல. நாங்கள் இங்கே உருவாக்குவதும் இன்சாக்ரிப்டின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். மொத்தமாக இந்த மென்பொருள் என்ன செய்யும் என்பது மட்டும் எங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் அவரவர்கள் வேலை செய்யும் சிறு பாகத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் அறிந்திருக்க மாட்டார்கள். அரசாங்க அதிகாரிகள் இருநாட்டு ஜனாதிபதிகளின் ஆணைகளோடு வந்தால் அவர்களுக்கு தொழில்நுட்பரீதியில் நாங்கள் தயார் செய்யும் பகுதியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்க மட்டுமே எங்களுக்கு தெரியும். அப்படியிருக்க நாங்கள் எப்படி இன்சாக்ரிப்டின் மைய மூளையாக இருக்க முடியும்?”

“எந்த விஷயத்தையும் ஆராய்ந்தறியாமல் நாங்கள் வருவதில்லை சிவசங்கர். எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சென்னையின் இந்தக் கிளையில்தான் இன்சாக்ரிப்ட்டின் மைய மூளை தயாராகிறது என்பதோடு மட்டுமின்றி உங்களால் இங்கிருந்தே இன்சாக்ரிப்டின் ஒட்டுமொத்த விவரங்களையும் பதிந்து வைத்திருக்கும் ஏழு சர்வர்களையும் இயக்க முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.”

சிவசங்கருக்கு இதயத்துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. எப்படி இவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் அவளுக்குத் தெரிந்திருக்கின்றது?

“நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும்கூட அவ்வளவு முக்கிய கிளையான இந்தக் கிளைக்கு நாங்கள் எந்தவித பாதுகாப்பும் வழங்காமல் விட்டிருப்போம் என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்?”

“உங்களின் இந்த சென்னைப் பிரிவின் பாதுகாப்பு முறைகளை நான் சொல்லவா? நீங்களும் சென்னைக் கிளையின் மேலாளர் திரு. டேவிட் பிரசாத்தும் சேர்ந்து கைரேகையை வைத்தால் மட்டுமே திறக்கும் ஒரு இரகசிய அறை உங்களின் இந்த அறைக்குப் பின்னால் இருக்கின்றது. அதிலிருக்கும் கணினி மையத்தின் பேஸ் ரீடர் உங்களிருவரின் முகத்திற்கு மட்டும்தான் திறக்கும். ஆனால் அதை இயக்கும் முறை உங்களுக்கு மட்டும்தான் தெரியும். சரியா?”

சிவசங்கருக்கு வேர்த்துவிட்டது. தன் கலக்கத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார். கண்டிப்பாக எங்கேயோ தப்பு நடந்திருக்கின்றது. இவ்வளவு உண்மைகளை தெரிந்தவர்கள் மிகச்சிலர்.

“என்ன ஏதோ அம்புலிமாமா கதையில் வருவதுபோல சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்? அதற்கெல்லாம் அவசியமே இல்லை. ஏனெனில் எங்களின் கிளையில் அப்படி எதுவும் இல்லை.”

“சிவசங்கர், எங்களின் அறிவை குறைத்து மதிப்பிட்டு எரிச்சலை உண்டாக்காதீர்கள். ஏனெனில் ரொம்ப நேரத்திற்கு உங்களின் விளையாட்டுகளை நிக்கோலஸும் நெல்சனும் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். இந்த மெஷின் கன்களை இயக்குவது என்றால் அவர்களுக்கு கொள்ளை ஆசை. உங்களின் உதவி இல்லாமலும் என்னால் இந்த மென்பொருள் முழுவதையும் அழிக்கமுடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்களை இந்தக் கணமே சுட்டுக்கொல்ல எனக்கு யோசனையே செய்ய வேண்டியதில்லை.”

“அப்புறம் எதற்காக வீணாக பேசிக்கொண்டிருக்கின்றாய் லிண்டா? சும்மா சுட்டுவிட்டு போவதுதானே?”

லிண்டாவின் கண்களில் சிறிது கலக்கம் தெரிந்ததை சிவசங்கர் கவனித்துவிட்டார். எப்படியும் அவருடைய உதவி வேண்டும் என்பது லிண்டாவுக்குத் தெரிந்திருக்கின்றது. இது போதும், இதை வைத்துக்கொண்டு எப்படியாவது தப்பித்துவிடலாம்.


“ஒரு நல்ல புத்திசாலியை இந்த நாடு இழந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில்தான் இன்னமும் உங்களை சுட்டுவிட உத்தரவிடாமலிருக்கின்றேன். அதோடு புத்திசாலிகளை எனக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கின்றேன் அல்லவா? ஆனால் என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இப்போது உங்களால் இன்சாக்ரிப்ட் பற்றிக் கூற முடியுமா முடியாதா?”

“முடியாது. நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் என்னால் கூற முடியாது.”

சிவசங்கருக்கு இப்போது கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது லிண்டாவிற்குத் தெரிந்தது. இதை வளரவிட்டால் அவளுக்கு ஆபத்து என்பதும் அவளுக்குப் புரிந்தது.

“உங்களின் இன்டர்காமை எடுங்கள், டேவிட் பிரசாத்தை இங்கே வரச்சொல்லுங்கள். எங்களை காட்டிக்கொடுக்கும் எந்தக் காரணமும் கூறக்கூடாது சரியா?”

சரியென்று தலையாட்டிய சிவசங்கர் தனது இன்டர்காமை எடுத்து நான்கு எண்களை அழுத்தினார், தொலைபேசியின் திரையில் நீல விளக்கு எரிந்து அணைந்தது. காதில் கொஞ்சநேரம் வைத்துவிட்டு மறுபடியும் கீழே வைத்தார்.

“ரிங் போய்க்கொண்டே இருக்கிறது. அவர் சீட்டில் இல்லை என்று நினைக்கின்றேன்.”

“சரி, அப்படியெனில் நந்தினியைக் கூப்பிடுங்கள்.”

நந்தினியை இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

“நந்தினியை எதற்கு கூப்பிட வேண்டும்?”

“காரணமாகத்தான், கூப்பிடுங்கள்.”

சிவசங்கர் தன் நடுங்கும் கைகளை தொலைபேசிக்கருகில் கொண்டு சென்றார். தென்னாடுடைய சிவனே தயவு செய்து நந்தினியைக் காப்பாற்று!

தொடர் வரிசை«மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டுமூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு»

குறிச்சொற்கள்: , , , , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme