மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு

July 6, 2008 தொடர் கதைகள்

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர முகம் தொடரின் பதிவுகளில் 8 இல் 3

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை, தமிழ்நாடு…

டொக் டொக்…

கதவு சப்தத்தை கேட்டு தனது கணினி திரையிலிருந்து பார்வையை விலக்கிய சிவசங்கருக்கு நடுத்தர வயது. தலையில் ஒரு வெள்ளை முடிகூடத் தெரியாமல் (நிரந்தர சாயம் அடிப்பவர்) தனது வயதிற்கும் சற்றுக் குறைவான தோற்றத்தை வழங்கியபடி தெரிந்த சிவசங்கர் பெயருக்கு ஏற்ப தீவிர சிவன் பக்தர் என்பதை டை அணியாத கழுத்து வளைவில் தெரிந்த உத்திராட்ச மாலை உறுதிசெய்தது. தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஸ்டம் அப்ளிக்கேஷன்ஸ் பிரிவின் மேலாளராக கடந்த 10 வருடங்களாக பணிபுரியும் சிவசங்கருடைய பேச்சுக்கு நிறுவனத்தில் மிகவும் நல்ல மதிப்பிருந்தது. அவருடைய நிர்வாகத் திறமையினால் வெற்றி பெற்ற பல மென்பொருட்கள் மற்ற மேலாளர்களுக்கு ஒருவித மரியாதையை அவரின் மேல் வரவழைத்திருந்தது. வெறுமனே நிர்வாகம் மட்டும் செய்வேன் என்று இருக்கும் இன்றைய மென்பொருள் நிறுவன மேலாளர்களுக்கு மத்தியில் சீரிய தொழில்நுட்ப அறிவால் தன்னுடைய பிராஜக்ட் மேனேஜர்கள் முதற்கொண்டு கடைநிலை மென்பொருள் நிரலாளர் வரை தொழில்நுட்ப ரீதியிலான அறிவையும் அறிவுரைகளையும் உதவிகளையும் இன்னமும் வழங்கிக்கொண்டிருப்பவர். இந்த சீரிய தொழில்நுட்ப அறிவினால்தான் தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்திலேயே கடினமான பிரிவு என்று கருதப்படும் சிஸ்டம் அப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு அவர் எளிதில் மேலாளராக முடிந்தது.

“எஸ்?”

“மே ஐ கம் இன் சார்?” கரகரத்த பெண்குரலொன்று முன்னேவர அதைத்தொடர்ந்து அமெரிக்க கலாச்சாரத்தில் மூழ்கித்தெரிந்த மதிப்பிற்குரிய பெண்மனி ஒருவரின் உருவம் தெரிந்தது.

“வாருங்கள்.”

ஏற்கனவே தமிழினி வரவேற்பரையிலிருந்து தகவல் அனுப்பிவிட்டமையால் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் ஐவர் தன்னறைக்குள் நுழைந்ததைப் பார்த்த சிவசங்கருக்கு வியப்பு தோன்றவில்லை. எழுந்து நின்று ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டார்.

“ஹலோ… நான் தான் சிவசங்கர். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?”

“ஹலோ… எனது பெயர் லிண்டா. இது மிஸ்டர் லூயி. இது மிஸ்டர் பிலிப்ஸ். இது மிஸ்டர் நெல்சன். இது மிஸ்டர் நிக்கோலஸ். நாங்களனைவரும் தென்னாப்ரிக்க தூதரகத்திலிருந்து வந்திருக்கின்றோம்.”

“தென்னாப்ரிக்க தூதரகத்திலிருந்தா? ஆச்சரியமாக இருக்கின்றதே? உங்களின் அடையாள அட்டைகளை நான் கொஞ்சம் பார்க்கலாமா?”

லிண்டா முன்னால் வந்து தனது கோட்டிற்குள் கையை நுழைத்து ஒரு லாமினேட் செய்யப்பட்ட அடையாள அட்டையை எடுத்துக் காண்பிக்க அதைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் அவ்வாறே செய்தனர். அவர்களின் அடையாள அட்டைகளை கூர்ந்து கவனித்த சிவசங்கர் அவை சரியானவைதான் என்று தீர்மானித்துக்கொண்டார்.

“தயவு செய்து அமருங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”

லிண்டா மட்டும் அமர்ந்து கொள்ள, மற்ற நால்வரும் அமராமல் லிண்டாவை சுற்றி நின்றுகொண்டார்கள். லூயி இடதுபுறமும் பிலிப்ஸ் வலது புறமும் நின்றுவிட, நெல்சனும் நிக்கோலசும் லிண்டாவிற்குப் பின்னால் நின்றுவிட்டார்கள். லிண்டா தன்னுடைய முக இறுக்கத்தை சற்றே தளர்த்தி சிவசங்கரிடம் பேச ஆரம்பித்தாள்.

“திரு. சிவசங்கர் அவர்களே, உங்களை சந்தித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் தென்னாப்ரிக்க தூதரகத்திலிருந்து வந்திருக்கின்றோம் என்பதில் நீங்கள் ஆச்சரியப்படும் காரணம் என்னவென்று நான் தெரிந்துகொள்ளலாமா?”

“மிஸ் லிண்டா, காரணம் இல்லை, காரணங்கள். முதல் காரணம் நீங்கள் ஐவரும் வெள்ளையர்கள். இரண்டாவது காரணம் தென்னாப்ரிக்கத் தூதரகத்தில் எனக்குத் தெரிந்து இத்தனை வெள்ளையர்கள் வேலைக்கு இருந்ததில்லை. மூன்றாவது காரணம் அப்படியே இருந்தாலும் அவர்கள் வெளிவேலைகளை செய்வதாக நானறிந்தவரையில் இல்லை. நான்காவது காரணம் அப்படியே அவர்கள் வெளியே வேலைகளை செய்தாலும் புது தில்லியிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்து சென்னையிலிருக்கும் ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது காரணம் தென்னாப்ரிக்க தூதரகம் போன்ற அரசுடமை நிறுவனங்கள் எந்தவொரு நிறுவனத்திற்கும் செல்லும் முன்னர் முன்னறிவிப்பின்றி செல்வதில்லை. ஆறாவது காரணம் அப்படியே அவசரத்தில் வருவதாக இருந்தாலும் ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரவேண்டிய அவசியமென்ன?”

ஒவ்வொரு காரணங்களாக சிவசங்கர் அடுக்கிக்கொண்டே வரும்போது லிண்டாவின் முகம் சிறிது சிறிதாக இருண்டுகொண்டே வந்ததை சிவசங்கர் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை. சிவசங்கர் பேச்சை ஒரு கேள்வியுடன் நிறுத்தியவுடன் இயல்புக்கு வந்த லிண்டா, இதற்கு பதிலளித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உணர்ந்து பேச்சைத் தொடர்ந்தாள்.

“சிவசங்கர், நீங்கள் கணினியில் மட்டும்தான் திறமையானவர் என்று நினைத்திருந்தேன், பொது அறிவிலும் திறமையானவர் என்று நிரூபித்துவிட்டீர்கள். எனக்கு எப்போதுமே மிகவும் திறமையானவர்களை ரொம்பவும் பிடிக்கும். நீங்கள் கேட்ட காரணங்களுக்கெல்லாம் என்னிடமுள்ள ஒரே விளக்கம், இது ஒரு இரகசியமான அவசர சந்திப்பு என்பதுதான்.”

“இரகசியமான சந்திப்பா? அப்படியென்றால் நீங்கள் இங்கே வந்திருப்பது யாருக்கும் தெரியாதா?”

“யாருக்கும் தெரியாது. தூதரகத்தில் வேலை செய்யும் அலுவலகர்களையும் சேர்த்துத்தான் கூறுகின்றேன். உண்மையில் நாங்கள் அனைவரும் தூதரகத்தைப் பொறுத்தவரையில் விடுமுறையிலிருக்கின்றோம்.”

“அப்படியென்றால் இங்கே வர உங்களுக்கு அதிகாரமளித்தது யார்? நீங்கள் இங்கே வந்ததின் நோக்கம் என்ன? அலுவலக நோக்கமா அல்லது வேறு ஏதாவது நோக்கமா?”

“சிவசங்கர், கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்ளுங்கள். கேள்விக்கணைகளை ஒன்றின்மேல் ஒன்றாக தொடுக்காதீர்கள். எங்களுக்கு இங்கே வர அனுமதி அளித்தது தென்னாப்ரிக்க தூதரகத்தின் ஹை கமிஷனர் திரு. பிரண்டன் ஃபாக்ஸ். அவர் எங்களை இங்கே இரகசியமாக அனுப்பியதோடு மட்டுமின்றி உங்களுக்கு கொடுக்க வேண்டி ஒரு கடிதமும் கொடுத்திருக்கின்றார்.”

லிண்டா தனது கோட்டின் இடது பக்கத்தினுள் கையை நுழைத்து அரக்கு நிறத்தில் பார்த்தவுடனே அரசாங்கம் சம்பந்தப் பட்டது என்று தோன்றவைக்கும் ஒரு கவரை வெளியே எடுத்தாள்.

“இந்த கடிதத்தில் எங்களுக்கான அனுமதியும் உங்களுக்கான விளக்கங்களும் உள்ளன. தயவு செய்து இதைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.”

கவரை வாங்கிய சிவசங்கர் அது அரக்கில் சீல் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து தன்னிடமிருந்த லெட்டர் ஓப்பனரால் சீலை உடைத்து திறந்தார். முதலாவதாக தென்னாப்ரிக்க தூதரகத்தின் சின்னமான கிரீடமணிந்த கழுகின் விரித்த சிறகுக்கு கீழ் சிறைபட்டிருந்த இரட்டையர் தெளிவாக தெரிந்தனர். வெள்ளைத் தாளில் கணினியில் அச்சிடப்பட்ட தெளிவான எழுத்துக்களும் கீழே கோழியின் கிறுக்கலைவிட மோசமான கிறுக்கலாக சிவப்பு நிற கையெழுத்தும் அதனடியில் நீல நிற முத்திரையும் தெரிந்தது. கடிதத்தின் வாசகங்கள் அவர் மனதில் ஓடின.

திரு. சிவசங்கர் அவர்களுக்கு,

இந்தக் கடிதத்தை கொண்டு வரும் செல்வி லிண்டா அவர்கள் என்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான செயலாளர் ஆவார். தயவு செய்து அவர்களுடன் ஒத்துழைக்குமாறு உங்களை நான் வேண்டிக்கொள்கின்றேன்.

இந்த சந்திப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். முன்னறிவிப்பின்றி இப்படியொரு அவசரமான சந்திப்பை ஏற்படுத்தியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இருப்பினும் நமது இரண்டு நாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த சந்திப்பு இரகசியமாகவும் விரைவாகவும் நடைபெறுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சந்திப்பிற்கான காரணங்கள் மிகவும் இரகசியமானவை என்பதால் அவற்றை இங்கே வழங்கவில்லை. செல்வி லிண்டா அவர்கள் உங்களிடம் விவரமாக கூறுவார்.

நன்றி…

உண்மையுடன்,

பிரண்டன் ஏ. ஃபாக்ஸ்
ஹை கமிஷனர்
சவுத் ஆப்ரிக்கன் ஹை கமிஷன், புது தில்லி, இந்தியா

“மிஸ் லிண்டா, எனக்கு ஒரு விவரம் புரியவில்லை. தென்னாப்ரிக்க தூதரகத்தின் ஹை கமிஷனர் என்னை இரகசியமாக சந்திக்க வேண்டி உங்களை அனுப்பியதின் காரணம் என்ன? எங்களுக்கும் உங்களின் தூதரகத்திற்கும் என்ன தொடர்பு?”

“உங்களின் முதல் கேள்விக்கு பதிலளிக்கும் முன்னர் உங்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். உங்களுக்கும் தென்னாப்ரிக்க தூதரகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையா சிவசங்கர்? தொடர்பில்லாமல்தான் தூதரகத்தைப் பற்றிய இவ்வளவு விவரங்களை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்? நாங்கள் தென்னாப்ரிக்கத் தூதரகத்திலிருந்து வந்திருக்கின்றோம் என்பதில் நீங்கள் ஆச்சரியப்பட்டதற்கு கூறிய காரணங்களில் முதல் மூன்று காரணங்களை யோசித்துப் பாருங்கள்? எங்களின் தூதரகம் பற்றி தெரியாத ஒருவர் கூறக்கூடிய காரணங்களா அவை?”

சிவசங்கரின் இதயத்தில் ஒரு சிறிய வெட்டு விழுந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் எளிதில் காட்டாத அவர் ஒரு இளம் புன்னகையை தவழவிட்டார்.

“பொது அறிவை வளர்த்துக்கொள்வது என்னுடைய பொழுது போக்கு. நான் கேட்ட காரணங்கள் என் பொது அறிவினால் கேட்கப்பட்டவையே அன்றி எனக்கும் உங்கள் தூதரகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.”

“உங்களுக்கு இருக்காமலிருந்திருக்கலாம், உங்களின் நிறுவனத்திற்கு இருக்கிறதல்லவா?”

“எனக்கு தெரிந்தவரையில் எனக்கும் எங்களின் நிறுவனத்திற்கும் தென்னாப்ரிக்க தூதரகத்திற்கும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை.”

“சரி, உங்களின் நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, இந்திய அரசாங்கத்திற்கு மென்பொருட்களை வழங்குகின்ற நிறுவனம் தானே?”

“ஆம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“நாங்கள் இந்திய அரசும் தென்னாப்ரிக்க அரசும் இணைந்து உங்களின் நிறுவனம் மூலம் உருவாக்கும் ஒரு மென்பொருளைப் பற்றி உங்களிடம் பேச வந்திருக்கின்றோம்.”

“எனக்குத் தெரிந்த வரையில் அப்படி ஒரு மென்பொருளை எங்களின் நிறுவனம் உருவாக்கவில்லை. ஒரு வேளை நீங்கள் கேட்பது வேறு பிரிவாக இருக்கலாம். இது இயங்குதள மென்பொருட்களின் பிரிவு.”

“சிவசங்கர், நீங்கள் புத்திசாலி. ஆனால் நாங்களும் முட்டாள்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எங்களின் ஹை கமிஷனர் உங்களின் பெயருடன்தானே கடிதத்தை வழங்கினார்? அவர் பொதுவில் உங்கள் நிறுவனத்தை விளித்து எழுதாததிலிருந்தே தெரியவில்லையா எங்களின் சந்திப்பு முழுவதும் உங்களுடனும் உங்கள் பிரிவுடனும் மட்டுமே சம்பந்தப்பட்டது என்று.”

“அது உண்மைதான். அதுதான் என்னை இன்னமும் குழப்புகின்றது.”

“சிவசங்கர், நீங்கள் விளையாடியது போதும். சுற்றி வளைத்துப் பேசுவது எனக்கு பிடிக்காது. நேரடியாகவே கூறிவிடுகின்றேன் உங்களின் பிரிவில் உருவாகும் இன்சாக்ரிப்ட் (InzaCrypt) மென்பொருளைப் பற்றித்தான் நாங்கள் பேச வந்திருக்கின்றோம்.”

சிவசங்கரின் இதயத்தில் பூகம்பத்தின் ரிக்டர் அளவு கூட ஆரம்பித்தது. உச்ச பட்ச இரகசியமான மென்பொருளைப் பற்றி ஒரு ஹை கமிஷனர் தன்னுடைய செயலாளரிடம் கூறி அனுப்புவாரா? இது என்ன குழந்தைத் தனமாக இருக்கின்றதே? நம்ப முடியாவிடினும் இதுதான் நிஜம். இல்லையென்றால் இவளுக்கு இவ்வளவு தெரிய நியாயமில்லை. இனி வேறு வழியில்லை, குறைந்த பட்சம் இதற்கான உத்திரவாதத்தையாவது பெற வேண்டும்.

“லிண்டா, உங்களுக்கு மிகவும் தெரிந்திருக்கின்றது. உங்களின் ஹை கமிஷனரின் கடிதத்திலிருந்த முதல் வாசகத்தை நான் இப்போது நம்புகின்றேன். இருப்பினும் இவ்வளவு தெரிந்த உங்களுக்கு அந்த மென்பொருளைப் பற்றிய எந்தவொரு விவரத்தைப் பெறவும் இந்திய ஜனாதிபதி மற்றும் தென்னாப்ரிக்க ஜனாதிபதி ஆகிய இருவரின் ஆணைக் கடிதம் இருக்க வேண்டும் என்பது தெரியாதா?”

“சிவசங்கர், அங்கேதான் ஒரு சிறிய சிக்கல். இது ஒரு அவசர சந்திப்பு என்பதால் அவ்விருவரின் சம்மதத்தைப் பெற முடியவில்லை. அதற்காகத்தான் எங்களின் ஹை கமிஷனர் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.”

“ஒரு தூதரக ஹை கமிஷனருக்கு இதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை. ஆகவே அவருடைய கடிதத்தை நான் அனுமதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.”

“சிவசங்கர், இது இரண்டு நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விஷயம். மிகவும் அவசரம். இல்லையென்றால் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வந்திருக்க மாட்டோம்.”

லிண்டாவின் குரலில் சிறிதளவு எரிச்சல் இருந்தது சிவசங்கருக்கே புரிந்தது.

“இரண்டு நாடுகளின் பாதுகாப்பிற்கும் இந்த மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம்? அவ்வளவு அவசரம் தான் என்ன?”

“நீங்கள் மென்பொருள் விவரங்களை வழங்குவதாக கூறினால், நான் அவற்றை விரிவாக விவரிக்கின்றேன்.”

“லிண்டா, நான் ஏற்கனவே கூறியபடி உங்களின் ஹை கமிஷனரின் கடிதம் இதற்கு செல்லுபடியாகாது. என்னை மன்னித்துவிடுங்கள். மேற்கொண்டு நான் எதுவும் செய்வதற்கில்லை.”

“இதுதான் உங்களின் இறுதியான முடிவா?” லிண்டாவின் குரலில் கணிசமான அளவு எரிச்சல் கூடியிருந்தது.

“ஆமாம். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.”

“சிவசங்கர், நாங்கள் இருநாட்டு ஜனாதிபதிகளின் கடிதங்களை வாங்குவதற்கு அவகாசம் இல்லை. தயவு செய்து புரிந்து கொண்டு ஒத்துழையுங்கள்.” லிண்டாவின் குரலில் எரிச்சலுடன் சிறிது ஆத்திரமும் கூடியிருந்தது.

“லிண்டா, உங்களின் அவரசம் எனக்குப் புரிகின்றது. ஆனால் எனக்கான உத்தரவு மிகவும் ஆணித்தரமானது. என்னால் எதுவும் செய்வதற்கில்லை. மன்னித்துவிடுங்கள். நீங்கள் போகலாம்.”

“சரி, எங்களை மன்னித்து விடுங்கள் எங்களுக்கும் இனி வேறு வழியில்லை.” லிண்டாவின் குரல் திடீரென்று சாந்தமாக மாறுபட்டு ஒலித்தது.

உட்கார்ந்திருந்த லிண்டா சட்டென்று எழுந்து நின்றுவிட, ஒன்றும் புரியாத சிவசங்கர் குழப்பமாக பார்த்தார். லிண்டாவின் இரண்டு பக்கமும் நின்றிருந்த லூயியும் பிலிப்சும் விலகி நின்றார்கள்.

பின்னால் நின்றிருந்த நிக்கோலஸ் மற்றும் நெல்சனின் கைகளில் கறுப்பு நிறத்தில் இரஷ்யாவின் பைசன் ரக மெஷின் கன்கள் முளைத்திருந்தன.

தொடர் வரிசை«மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்றுமூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று»

குறிச்சொற்கள்: , , , , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme