இதயமேந்திக் கேட்கின்றேன்: அத்தியாயம் இரண்டு
- இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம்…
- இதயமேந்திக் கேட்கின்றேன்: அத்தியாயம் ஒன்று
- இதயமேந்திக் கேட்கின்றேன்: அத்தியாயம் இரண்டு
கெட்ட காலைப் பொழுது என்று வணக்கம் சொன்ன அருள் பிரகாசத்தை தீரனும் ரோஸ்லினும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க முதலில் சுதாரித்துவிட்ட தீரன் வாயைத் திறந்தான்.
“என்ன சார் இது? எப்பவும் இப்படி நீங்க பேசி நான் பார்த்ததேயில்லையே?”
“மன்னிச்சிடுப்பா, நான் சொல்ல வந்த விஷயம் எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. ரோஸ்லினுக்கு நான் ஒரு கெட்ட செய்தியை சொல்லியாக வேண்டும்”
“என்ன சார் பீடிகை போடுறீங்க? தயவு செய்து சட்டென்று விஷயத்தை சொல்லுங்கள்.” தீரன் கலவரமாகி கேட்க, சிலை போல நின்றுவிட்ட ரோஸ்லினுக்கு உதடுகள் காய்ந்துவிட்டது. கெட்ட செய்தியா? ஆண்டவரே, யாருக்கும் எதுவும் நடந்திருக்கக்கூடாது!
“உடனே சட்டென்று சொல்லிவிட என்னாலேயே முடியவில்லை தீரா. ரோஸ்லின் எப்படி தாங்கிக்கொள்ளப் போகின்றாளோ தெரியவில்லை. அவளுக்கு எவ்வளவு பிடித்தமானவர் என்பது எனக்கும் தெரியுமே?”
“சார், யாருக்கு என்ன ஆனது? ஏனிப்படி ரோஸ்லினை வதைக்கின்றீர்கள்?”
“ரோஸ்லின், மனதை திடப்படுத்திக்கோம்மா. உன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த உன்னுடைய ஆச்சி இன்று காலையில் அமரராகிவிட்டார்.”
“ஐயோ, ஆச்சி…” அலறிய ரோஸ்லின் உடனே மயங்கிச்சரிய, அதிர்ச்சியிலிருந்த தீரன் தன்னிச்சையாக அவளைத் தாங்கிப்பிடித்தான். ரோஸ்லின் முழுவதும் மயக்கமாகிவிட்டதை தெரிந்துகொண்ட அவன், அவளை மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் இறங்காமல் அருள்பிரகாசத்தை கோபத்தோடு பார்த்தான்.
“என்ன சார் இது? நாங்க பெரிசா மதிக்கிற நீங்களே இப்படி சட்டுனு ஒரு அதிர்ச்சியைத் தரலாமா? ரோஸ்லின் மயக்கமாகிட்டா பாருங்க.”
“நான் என்னப்பா செய்வேன். பாழாப்போன அந்த டெலிபோன் அழைப்பை நான்தானே எடுத்தேன்!” அவரும் கவலையுடன் பேசவே கொஞ்சம் நிதானத்திற்கு வந்த தீரனுடைய மூளை பரபரப்பாக யோசிக்க ஆரம்பித்தது.
“ஏன் சார், காலையில் அமரரானார் என்று சொன்னீர்களே, நாங்க இப்பத்தானே வீட்டிலிருந்து வருகின்றோம்? ரோஸ்லினின் ஹாஸ்டலிலும் போன் இருக்கின்றதே அவளுக்கு அவர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்திருக்கலாமே?”
“இல்லப்பா, அவங்க அவளோட ஹாஸ்டல் நம்பரை தொடர்பு கொண்ட போது அது வேலை செய்யவில்லையாம். உடனே உன்னுடைய அப்பாவுக்குத்தான் அழைத்திருக்கின்றார்கள் ஆனால் அதுக்குள்ள நீ வீட்டை விட்டு வெளியே வந்துட்டியாம். பைக்குல போகும்போது உன்னோட கவனம் சிதறும்னு எப்பவுமே உன்னோட அப்பா உன்னை செல்போனில கூப்பிடமாட்டாராமே அதான் எனக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். உடனே ரோஸ்லினைக் கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு வரணும்னு சொல்லச் சொன்னாரு.”
“சாரி சார், நேத்தே ஹாஸ்டல் நம்பர் வேலை செய்யலன்னு ரோஸ்லின் சொல்லியிருந்தா. அவசரத்துல உங்களை கேள்வி கேட்டதுக்கு மன்னிச்சுடுங்க. கொஞ்சம் தண்ணி தரீங்களா?”
அதற்குள் இவர்களைப் பார்த்துவிட்ட ரோஸ்லினின் நெருங்கிய ஹாஸ்டல் அறைத் தோழி வினிதா தன்னுடைய கைப்பையிலிருந்த வாட்டர் பாட்டிலை தீரனிடம் கொடுத்தாள். அதை வாங்கி கண்களாலேயே ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு திறந்து கொஞ்சமாக கைகளில் ஏந்த அது சூடாக இருப்பதை உணர்ந்த தீரன் வாயால் அதை ஊதி ஊதி வெதுவெதுப்பாக்கிவிட்டு ரோஸ்லினின் முகத்தில் தெளித்தான். ரோஸ்லின் அசையவில்லை.
“வினிதா, சுடத்தண்ணிதான் இருக்குதா? குளிர்சியான நீரைத் தெளித்தால் உடனே மயக்கம் தெளியும்னு படிச்சிருக்கேன்.”
“இல்லப்பா, இங்கே குடிக்கிற தண்ணி உடம்புக்கு ஒத்துக்காதுன்னு எப்பவுமே ஹாஸ்டலில் இருந்து சூடான தண்ணிதான் எடுத்து வருவேன். இரு நான் போயி இங்கயிருந்து தண்ணி பிடிச்சிட்டு வரேன்.”
“வேண்டாம்மா. தீரா, சூடான தண்ணீரைத் தெளித்தாலும் உணர்வு வரும். முகத்தின் உணர்ச்சிகளை தண்ணீர் தூண்ட வேண்டும் என்பதுதான் விதி, அது சூடாக இருந்தாலும் சரி குளிர்ச்சியாக இருந்தாலும் சரி. நீ ஊதி ஊதி வெதுவெதுப்பாக்கியதால உணர்ச்சிகளைத் தூண்டவில்லைன்னு நினைக்கின்றேன். சூடாவே தெளித்துப் பார்.”
அரைமனதாக சூடான தண்ணீரை உள்ளங்கையில் வாங்கி அவளின் முகத்தில் தெளிக்க உடனே முகத்தைச் சுளித்தவாறே நினைவுக்கு வந்தாள் ரோஸ்லின்.
“தீரா… ஆச்சி… ஆச்சி…”
பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு குழந்தை போல விசும்பும் ரோஸ்லினை அணைத்து தலையில் ஆதரவாகத் தடவிக்கொண்டே அவளின் காது மடல்களின் ஓரம் திரும்பத் திரும்ப கூறினான் தீரன்.
“ஒன்னும் இல்லடா. ஒன்னும் இல்ல. எல்லாம் சரியாயிடும். நானிருக்கேன் இல்ல?”
இடது கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை இந்த நேரத்திலும் விழிகள் விரிய பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்த வினிதாவிடம் நீட்டிவிட்டு மறுபடியும் கண்களாலேயே நன்றி கூறிவிட்டு இடது கையால் ரோஸ்லினின் இடையை வளைத்து ஆதரவாகப் பிடித்தபடியே அவளை தன்னுடைய பைக்குக்கு கொண்டு சென்றான் தீரன். நடக்கவே திராணியற்றவள் போல் அவன் மேல் தொங்கிக்கொண்டு போனவள் பைக்கின் மேல் அவன் சாய்ந்து நிற்க வைத்தவுடன் கொஞ்சம் ஆசுவாசமானாள். கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் நீரூற்று போல வழிந்துகொண்டேயிருந்தது. தீரனின் கைகள் அவனையும் அறியாமல் தன்னிச்சையாக அவளின் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டிருந்தது.
“நாம இப்ப உடனே வீட்டுக்கு போகனும்டா, உன்னால பின்னால வரமுடியுமா? இல்ல ஆட்டோ ஏதாவது பிடிக்கவா?”
“ஆட்டோல்லாம் வேண்டாண்டா. உன்னோட பின்னாலேயே வந்துடறேன்.” மூக்குறிஞ்சிக்கொண்டே குழந்தையைப் போல கூறிய அவளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று குழம்பினான் தீரன். அவளை ஒதுக்கி நிற்க வைத்துவிட்டு பைக்கில் ஏறி சாவியை சொருகி ஒரு உதை விட அது கமறி என்னை ஏன் அடிக்கிறாய் என்பது போல உறுமியது. பின்னால் ஏறிக்கொண்ட ரோஸ்லின் அவனின் முதுகு முழுவதிலும் ஒரு கொடி போல படர்ந்து ஒட்டிக்கொண்டு அவனுடைய தோள்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.
அவளுடைய இறுகிய பிடிப்பால் கொஞ்சம் தோள் வலித்தாலும் அதைப் பற்றி அவளிடம் இப்போது சொல்லும் மனநிலையில் இல்லாத தீரன் அருள்பிரகாசத்தை நோக்கி ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு விடை பெற்றுக்கொண்டு திரும்பி இரண்டு பக்கமும் மரம் வளர்ந்திருந்த பாதையில் நுழைந்து மெயின் ரோட்டுக்கு வந்து வேகமாக முறுக்க, காற்று வேகமாக அவனின் முகத்தில் மோதினாலும் பின்னாலிருந்த ரோஸ்லினின் முகத்திற்கு இதமாக வீசியது. பழகிவிட்ட மருதமலை ரோட்டின் போக்குவரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தீரம் ஓட்டிய வேகத்தில் சீக்கிரமே லாலி ரோட்டுக்கு வந்து அதைக் கடந்து அவன் வீடு இருந்த டி.வி. சாமி ரோட்டுக்கு வந்தடைந்தான். சில நொடிகளில் விட்டு வாசலை வந்தடைந்துவிட கேட்டிலிருந்த காவலாளி ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே வேகமாக வந்து கேட்டைத் திறந்துவிட புகுந்து ஷெட்டில் நிறுத்திவிட்டு ரோஸ்லின் இறங்கும் வரை பொறுத்திருந்து பின் மெதுவாக இறங்கி வீட்டின் படிகளில் ஏற ஆரம்பித்தான் தீரன்.
வரவேற்பறையிலேயே காத்திருந்த உலகநாதன் இவனைப் பார்த்தவுடன் எழுந்து நிற்க அவரை நோக்கி பாய்ந்த ரோஸ்லின் அவருடைய மார்பில் சாய்ந்துவிட அவளை ஆதரவாக வருடிக்கொடுத்த அதே சமயம் உள்ளறையிலிருந்து காமாட்சி வந்துவிட்டாள். அவளும் தன் பங்குக்கு ரோஸ்லினை அணைத்துக்கொடுக்க புதியதாக அழுகை ஆரம்பித்த ரோஸ்லினின் முதுகு குலுங்குவது தீரனின் மனதை ஏனோ பிசைந்தது.
ஒருவழியாக அவளை ஆசுவாசப்படுத்தி காமாட்சியுடன் அனுப்பிவிட்டு தீரனை அணுகினார் உலகநாதன்.
“தம்பி, காலையிலேயே துக்ககரமான செய்திதான். ரோஸ்லினுக்கு நீதான் ஆறுதல் சொல்லனும். அவளக் கூப்பிட்டுகிட்டு அடுத்த விமானத்திலேயே மதுரைக்கு கிளம்பிடு. நம்ம அம்மன் இரும்புத் தொழிற்சாலையின் மேனேஜர் சதாசிவம் உனக்காக வண்டியோட ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பார்.”
“ஏம்பா, மதுரைக்கு நேரா போறமாதிரி ஒரு பிளைட்டும் கிடையாதே? சென்னை வழியாகத்தான் போகனும், இங்கேயிருந்து சென்னைக்கு அப்புறம் அங்கேயிருந்து மதுரைக்குன்னு இரண்டு பிளைட் பிடிச்சி போகணும் ரோஸ்லின் நொந்துடுவாப்பா. வேற ஏதாவது ஏற்பாடு பண்ணலாமே?”
“இல்ல தம்பி, தரைவழியா போனா ரொம்ப நேரம் ஆகும். அதுல போறப்பத்தான் ரோஸ்லின் ரொம்ப நொந்துடுவா. நீ போறதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் ஏற்கனவே போனில் நம்ம ஆபீஸ் பி.ஏ கிட்ட சொல்லிட்டேன். அவர் உனக்கும் ரோஸ்லினுக்கும் இரண்டிரண்டு டிக்கட்டுக்கள் இங்கிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து மதுரைக்கும் வச்சிருப்பாரு. போய் வாங்கிட்டு சீக்கிரம் போய் வந்துடுப்பா. அதிக நாள் அங்கேயே தங்கிடாதே. உங்க ரெண்டு பேரோட படிப்பும் கெட்டுடும். நம்ம சதாசிவம் மேனேஜர் உனக்காக நம்ம கெஸ்ட் ஹவுசை ரெடி பண்ணி வச்சிருப்பார் அங்கேயே தங்கிக்க. ரோஸ்லினோட இருந்து வேண்டிய நாள் தங்கி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு கொடுத்து கையோட அவள கூட்டுக்கிட்டு வந்துடு. பண ஏற்பாடெல்லாம் சதாசிவம் செய்துடுவார்.”
“சரிப்பா… நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலப்படாதீங்க…”
“அப்புறம் தம்பி, அவளோட ஹாஸ்டலுக்கு ஏற்கனவே விவரம் தெரியும். அருள்பிரகாசம் சாருகிட்டயும் நான் கொஞ்சநாள் லீவு வேண்டியிருக்கும்னு சொல்லிட்டேன். நீ அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். சரியா?”
சரியென்று தலையாட்டிவிட்டு ரோஸ்லினை கூட்டுவர உள்ளே நுழைந்த தீரனுக்கு அப்போதுதான் அவளுக்கு உடைகள் எதுவும் எடுத்துவரவில்லை என்பது ஞாபகத்திற்கு வர அங்கே போயி பார்த்துக்கலாம் இல்லைன்னா அங்கேயே புதுசா வாங்கிக்கலாம் என்று தீர்மானித்துக்கொண்டான்.
நிகழ்வுகள் வேகமாக நிகழ்ந்தேற, மதியம் மூன்று மணிக்கு ரோஸ்லினின் பழைய வீட்டிற்குள் அவளுடன் நுழைந்தான் தீரன். அவளைப் பார்த்தவுடனே ஓடி வந்த அப்பா டான்போஸ்கோவின் மார்பில் புதைந்த ரோஸ்லினின் முதுகு மறுபடியும் குலுங்க ஆரம்பித்தது. நடு வீட்டில் கறுப்பு பெட்டியில் வெள்ளை நிற மெத்தென்ற துணிகளுக்கு நடுவே கிடத்தப்பட்ட ரோஸ்மேரி ஆச்சியின் தளர்ந்துபோன சடலம் தெரிந்தது.
ஒரு வழியாக இரண்டு நாள் கழிந்துவிட, ஆச்சியின் உடல் ஆலயத்தின் பின்னாலிருந்த ஒரு சிறிய கல்லறையில் புதைக்கப்பட்டு தலைப் பக்கத்தில் ‘என்றும் எங்களின் நினைவில் உறைந்துவிட்ட…’ என்ற வார்த்தைகளுடன் ஆச்சியின் விவரங்களோடு தெரிந்த கறும்பலகை சிலுவையுடன் நடப்பட்டிருந்தது. ரோஸ்லின் அப்பாவின் அரவனைப்பிலும் தீரனின் கவனிப்பிலும் விரைவில் தேறியிருந்தாள். அவர்கள் மூன்றாம் நாள் கிளம்ப வேண்டி வந்தது.
“அங்கிள், ரோஸ்லினும் நானும் திரும்பவும் கோயமுத்தூருக்கு போகணும். அதிக நாளாகிடிச்சின்னா படிப்பு கெட்டுவிடும்.” மெல்ல பேச்சை ஆரம்பித்த தீரனை அன்புடன் பார்த்தார் டான் போஸ்கோ.
“நீ நல்லாயிருப்பே சாமி. எம்மகள உங்கையன்கிட்ட ஒப்படச்சப்பவே கவலப்படாதேன்னு சொன்னா ஆத்தா, அதுமாதிரியே நீ பாத்துக்கற. ரொம்ப சந்தோஷம். எப்ப புறப்படணும்?”
“நாளைக்கு காலையில் கிளம்பலாம்னு பார்க்குறேன் அங்கிள். ஆனால் நீங்க விருப்பப்பட்டா நாங்க இன்னமும் கொஞ்ச நாள் கூட இருப்போம். படிப்பு கெடுதேன்னுதான் பார்க்கிறேன்.”
“படிப்பு முக்கியம் சாமி. எம்மகளுக்கு படிப்புன்னா உசிரு. அதக் கெடுக்க ஆத்தாவுக்கே ஆசையில்லாதபோது எனக்கு இருக்குமா? நீங்க மகராசனா கிளம்புங்க. ரோசுகிட்ட நான் ஒரு முக்கியமான சேதியை சொல்லணும். உங்கிட்ட மறைக்கறதுக்கு இல்ல சாமி, இரண்டு பேரு கிட்டயும்தான் சொல்லணும்.”
இதுவரை மெளனமாய் வீற்றிருந்த ரோஸ்லினும் இதென்ன முக்கியமான சேதி என்று ஆச்சரியப்பட்ட தீரனும் புருவத்தை உயர்த்தி அவரைப் பார்க்க, அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள்…