திருவாசக வாழ்த்து!

January 2, 2007 ஆன்மீகம், கவிதைகள், வாழ்த்துக்கள்

இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்).

இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்!

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

[விளக்கம்:]

நமச்சிவாயம் எனும் பெயர்கொண்டவன் வாழ்க, இறைவனின் காலடி வாழ்க.
கண்ணிமைக்கின்ற நேரம் கூட என்னுடைய நெஞ்சத்தை விட்டு அகலாதவன் வாழ்க.
அரசனைப்போன்று இந்த உலகத்தை ஆளும் ஒளியுடையவனுடைய காலடி வாழ்க.
எல்லாவற்றுக்கும் பொருளுரைக்கும் ஆகமம் போல அருள்பாலிப்பவன் காலடி வாழ்க.
ஒப்பற்றவனாகவும் எல்லாவற்றையும் கொண்டிருப்பவனுமாகிய இறைவனது காலடி வாழ்க.

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

[விளக்கம்:]

ஈசுவரனுடைய காலடி போற்றி. என்னுடைய தந்தையின் காலடி போற்றி.
நாட்டிற்குரியவனுடைய காலடி போற்றி. சிவனுடைய வணங்கப்படிவேண்டிய காலடி போற்றி.
அன்புடையவர்களுக்கு அரணாக நிற்கும் இறைவனின் காலடி போற்றி.
மாயமாக இருக்கும் இந்த மனிதப்பிறப்பை அறுத்து ஆளும் மன்னனது காலடி போற்றி.
ஒழுங்கான வெகு சிறப்பான எண்ணம் கொண்டவர்கள் மனதிலே பெருமளவு உறையும் (வாழும்) தேவன் காலடி போற்றி.
சட்டென்று முடிந்துவிடாத நிலைத்த இன்பம் அருள்பாலிக்கும் மலை போன்ற இறைவா போற்றி.

– மாணிக்கவாசகர்

குறிச்சொற்கள்: , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme